மாநகர கட்டளை சட்டத்தினை மீறி செயற்படுவதாக முதல்வர் மீது உறுப்பினர்கள் குற்றச்சாட்டு

மட்டக்களப்பு மாநகரசபையின் இன்றைய அமர்வின்போது நிலையியல் குழுக்களை நியமிப்பது தொடர்பான விவாதத்தில் மாநகர முதல்வர் மாநகர கட்டளை சட்டத்தினை மீறி செயற்படுவதாக கூறி மாநகரசபை உறுப்பினர்கள் சிலர் வெளிநடப்பு செய்தனர்.

மட்டக்களப்பு மாநகரசபையின் 43வது சபை அமர்வு இன்று  மட்டக்களப்பு மாநகரசபையின் முதல்வர் தி.சரவணபவன் தலைமையில் நடைபெற்றது.

இதன்போது மாநகரசபையின் மரபுக்கு அமைய சபையின் அமர்வுகள் ஆரம்பமான நிலையில், மாநகர முதல்வரின் தலைமையுரையினை தொடர்ந்து மாநகரசபையினால் முன்னெடுக்கப்படும் செயற்றிட்டங்களுக்கான முன்மொழிகள் செய்யப்பட்டு சபையின் அங்கீகாரங்கள் பெறப்பட்டன.

IMG 7259 மாநகர கட்டளை சட்டத்தினை மீறி செயற்படுவதாக முதல்வர் மீது உறுப்பினர்கள் குற்றச்சாட்டு

அதனை தொடர்ந்து சபையின் புதிய ஆண்டில் 07ஆம் திகதி முன்னெடுக்கப்பட்ட நிலையில் கடந்த ஏழு நாட்கள் செயற்பாடுகளை சட்ட வலிதாக்கும் வகையிலான சபையின் அனுமதியை மாநகர முதல்வரினால் கோரப்பட்ட நிலையில் அதற்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து அவை வாக்கெடுப்புக்கு விடப்பட்டது. வாக்கெடுப்பின்போது ஏழு நாட்கள் செயற்பாடுகளை சட்ட வலிதாக்கும் செயற்பாடுக்கு ஆதரவு வழங்கப்பட்டது.

IMG 7489 மாநகர கட்டளை சட்டத்தினை மீறி செயற்படுவதாக முதல்வர் மீது உறுப்பினர்கள் குற்றச்சாட்டு

அதனை தொடர்ந்து சபையின் செயற்பாடுகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட நிலையில் தேனீர் இடைவேளைக்கு பின்னர் சபை அமர்வுகள் ஆரம்பமான நிலையில் நிலையியல் குழுக்களை அமைப்பது தொடர்பான பிரேரணை மாநகரசபை முதல்வரினால் கொண்டுவரப்பட்டது.

இதன்போது தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர் வி.பூபாலராஜா கடந்த ஆண்டு செயற்பட்ட குழுவினையே இந்த ஆண்டும் செயற்பட அனுமதிக்குமாறும் இதனை சபையில் தான் ஒரு முன்மொழிவாக முன்வைப்பதாகவும் தெரிவித்தார்.

இதற்கு மாநகரசபையின் சில உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.புதிய ஆண்டில் நிலையியல் குழுக்களுக்கு புதிய உறுப்பினர்கள் தெரிவுசெய்யப்படவேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

நிலையியல் குழுக்கள் அமைப்பதில் மாநகர முதல்வர் மாநகரசபை சட்டத்தினை மீறும் வகையில் செயற்படுவதாகவும் குற்றஞ்சாட்டினர்.இதன்போது வாதப்பிரதிவாதங்கள் நடைபெற்ற நிலையில் மாநகரசபை முதல்வர் ஏனைய உறுப்பினர்களின் வேண்டுகோளின் அடிப்படையில் வாக்கெடுப்புக்கு சென்ற நிலையில் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து இரண்டு சுயேட்சைக்குழு உறுப்பினர்களும் சிறீலங்கா சுதந்திரக்கட்சி உறுப்பினர்கள் இருவரும் ஈபிடிபி உறுப்பினர் ஒருவரும் தமிழர் விடுதலைக்கூட்டணி உறுப்பினர் ஒருவரும் சபையில் இருந்து வெளியேறி வெளிநடப்பு செய்தனர்.

அதனை தொடர்ந்து வாக்களிப்புக்கு விடப்பட்ட நிலையில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி உறுப்பினர்கள், தமிழ் தேசிய கூட்டமைப்பு ஒருவர்,ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர்கள் இருவர்,தமிழர் விடுதலைக்கூட்டணி உறுப்பினர் ஒருவர் உட்பட பத்து உறுப்பினர்கள் எதிராக வாக்களித்துடன் 20 உறுப்பினர்கள் ஆதரவாக வாக்களித்தனர். இந் நிலையில் நிலையியல் குழுக்கள் கடந்த ஆண்டு உறுப்பினர்களே செயற்படுவது என தீர்மானிக்கப்பட்டது.

அத்துடன் கடந்த ஆண்டு குழுவில் இருந்த தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி உறுப்பினர்களுக்கு பதிலாக புதிய உறுப்பினர்கள் நியமனம் செய்யப்பட்டனர்.