“வடக்கு மக்கள் தங்கள் மீது கொண்ட நம்பிக்கை பாதுகாக்கப்படும்” என்கிறது அரசாங்கம்

வட பகுதி மக்கள் அரசாங்கத்தின் மீது வைத்த நம்பிக்கையை முழுமையாக பாதுகாப்போம் என்றும் மீண்டும் ஒருபோதும் இனவாத அல்லது மதவாத மோதல்கள் ஏற்பட இடமளிக்கப் போவதில்லை என்றும் பொது நிர்வாகம், மாகாணசபைகள் மற்றும் உள்ளூராட்சிமன்றங்கள் அமைச்சர் சந்தன அபேரத்ன தெரிவித்துள்ளார்.

சிங்கள, தமிழ், முஸ்லிம் ஆகிய அனைத்து மக்களும் சகோதரத்துவத்துடன் வாழக்கூடிய ஒரு இலங்கைத் தேசியத்தைக் கட்டியழுப்புவோம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பதிவாளர் நாயகம் திணைக்களத்தின் வடக்கு பிராந்திய ஆவணக் காப்பகத்தைத் திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

“இதுவரை காலமும் சான்றிதழ்களைப் பெற்றுக்கொள்வதற்காகக் கொழும்பு மாளிகாவத்தை ஆவணக் காப்பகத்திற்குச் செல்ல வேண்டியிருந்ததால், மக்களுக்குப் பல நாட்கள் விரயமானதுடன், போக்குவரத்து மற்றும் தங்குமிடத்திற்காகப் பெருமளவு பணத்தை செலவிட வேண்டியிருந்தது”

“இந்நி்லையில், இந்த புதிய பிராந்திய ஆவணக் காப்பகம் நிறுவப்பட்டதன் மூலம் மக்களின் நேரமும் பணமும் சேமிக்கப்படுவதோடு, அப்பகுதியின் உற்பத்தி நடவடிக்கைகளுக்கும் விவசாயத்திற்கும் ஏற்பட்ட தடைகள் முற்றாக நீக்கப்படும். மேலும், இந்த அலுவலகத்தை மையமாகக் கொண்டு மன்னக்குளம் பகுதியில் ஒரு சிறிய நகரம் உருவாக்கப்பட்டு, அப்பகுதி மக்களுக்குப் புதிய வணிக மற்றும் சுயதொழில் வாய்ப்புகள் பல உருவாகும்” என்று அவர் தெரிவித்தார்.

30 ஆண்டுகளுக்கும் மேலாக நிலவிய யுத்தத்திற்கு நிர்வாக அதிகாரங்களும் சேவைகளும் பரவலாக்கப்படாமையும் ஒரு காரணியாக அமைந்தது.

இத்தகைய நடவடிக்கைகளை பல ஆண்டுகளுக்கு முன்பே மேற்கொண்டிருந்தால் மக்கள் எதிர்கொண்ட இன்னல்களைக் குறைத்திருக்க முடியும் என்றும் அமைச்சர் சந்தன அபேரத்ன தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியின் அறிவுறுத்தலின் பேரில் வடக்கில் நிலவும் கடுமையான குடிநீர் பிரச்சினைக்குத் தீர்வுகாண்பதற்கான முதற்கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதுடன், யுத்தத்தினால் இழக்கப்பட்ட காணி உரிமைகளை மீள வழங்கி தீர்த்து வைக்கும் விசேட திட்டமும், சேதமடைந்த வீடுகளுக்காகப் புதிதாக 13,000 வீடுகளைக் கட்டுவதற்கான திட்டமும் கலந்துரையாடல் மட்டத்தில் உள்ளதாக அவர் கூறியுள்ளார்.