மாகாண சபைத் தேர்தல்களை நடத்த இடமளிக்கமாட்டோம் – கலாநிதி குணதாஸ அமரசேகர

அரசமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டம் இல்லாதொழிக்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் தேசிய அமைப்புகள் உறுதியாக இருக்கின்றன. எனவே, மாகாண சபைகளுக்கான தேர்தலை நடத்துவதற்கு இடமளிக்கமாட்டோம்.

இவ்வாறு தேசிய ஒருங்கமைப்பு ஒன்றியத்தின் ஏற்பாட்டாளரும் தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் தலைவருமான கலாநிதி குணதாஸ அமரசேகர தெரிவித்தார். மாகாண சபைகளுக்கான தேர்தலை நடத்துவதற்கு அரசு தயாராகி வருகின்றது என வெளியாகியுள்ள தகவல் தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு:-

“மாகாண சபை முறைமையால் நாட்டுக்குப் பாதிப்புகளே ஏற்பட்டுள்ளன. அந்த முறைமை இலங்கைக்குப் பல வந்தமாகத் திணிக்கப்பட்டதொன்றாகும். எனவேதான், 13 ஐ நீக்குமாறும், புதிய அரசமைப்பு ஊடாக இதற்கான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தி வருகின்றோம்.

தேசிய அமைப்புகளின் கோரிக் கைக்கு அரசு செவிசாய்க்க வேண்டும். அவ்வாறு இல்லாவிட்டால் பாரிய அழுத்தங்கள் பிரயோகிக்கப்படும். இந்தியாவைத் திருப்திப்படுத்துவதற்காக மாகாண சபைகளுக்கான தேர்தலை அரசு நடத்தக்கூடாது. மாகாண சபைகள் இன்றி நாடு சிறப்பாகச் செயற்படுகின்றது. எனவே, அவற்றுக்குப் புத்துயிர் கொடுப்பதற்கு அரசு முயற்சிக்கக்கூடாது. அதற்கு நாம் இடமும் அளிக்கமாட்டோம்” என்றார்.