மாகாண சபைக்கான தேர்தலை எதிர்கொள்ள சஜித் அணி தயார் – திஸ்ஸ அத்தநாயக்க அறிவிப்பு

தேசிய இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வாகவே மாகாண சபை முறைமை முன்வைக்கப்பட்டது. எனவே, அதற்கான தேர்தல் வெகுவிரைவில் நடத்தப்பட வேண்டும். அதனை எதிர்கொள்வதற்குப் பிரதான எதிர்க் கட்சி என்ற வகையில் நாம் தயார்.

இவ்வாறு ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார் மாகாண சபைத் தேர்தல் தொடர்பாக கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“மாகாண சபைத் தேர்தல் என்பது அரசமைப்பு ஊடாக மக்களுக்கு வழங்கப்பட்ட உரிமையாகும். எனினும், அந்தத் தேர்தல் நீண்ட காலமாக நடைபெறாமல் ஆட்சி அதிகாரம் ஆளுநர்கள் வசம் சென்றுள்ளது. இந்த நிலைமை நீடிக்கக்கூடாது.

மாகாண சபைத் தேர்தல் முறைமை தொடர்பில் நாடாளுமன்றம் இன்னும் உரிய அனுமதி வழங்காததால் தேர்தலை நடத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. ஆகவே, தேர்தலை நடத்துவதற்கான சட்ட திருத்தத்தை அரசு உடன் நாடாளுமன்றத்தில் முன்வைக்க வேண்டும். பழைய முறைமையில் தேர்தலை நடத்துவதற்கு நாம் எதிர்ப்பு இல்லை.

எனவே, பழைய முறைமையில் மாகாண சபைத் தேர்தலை நடத்தி விட்டு அடுத்து வரும் காலப்பகுதியில் எந்த முறைமையில் தேர்தலை நடத்தலாம் என்பது பற்றிப் பரிசீலிக்கலாம். அந்தவகையில் தேர்தல் விரைவில் நடத்தப்பட வேண்டும். அதனை எதிர்கொள்வதற்கு நாம் தயார்” என்றார்.