மற்றுக் காணிகளையோ அல்லது நட்ட ஈட்டையோ கோவைில்லை சொந்த நிலத்திலிருந்தே வாக்களிக்க விரும்புகிறோம் – கேப்பாப்புலவு மக்கள்

இராணுவத்தின் ஆக்கிரமிப்பில் உள்ள காணிகளுக்குச் சொந்தமான கேப்பாப்புலவு மக்கள், தமது காணிகளை விடுவிக்குமாறு தொடர் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்ற நிலையில், நேற்று (29) ஏற்பாடு செய்யப்பட்ட ஊடக சந்திப்பில் அவர்கள் இந்த விடயத்தை தெரிவித்துள்ளனர்.

இதன்போது கடந்த 20 ஆம் திகதி வடக்கு ஆளுநர் சுரேன் ராகவன் தலைமையில் இடம்பெற்ற கலந்துரையாடலில் தமது காணிகள் தொடர்பாக, ஒரு வாரத்தில் முடிவு ஒன்றை சொல்வதாக கூறப்பட்டது. இராணுவத்தினருடனும் கலந்துரையாடி முடிவை சொல்வதாக ஆளுநர் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் ஒரு வாரம் முடிவடைந்துள்ள நிலையில், தமக்கான எந்தவொரு முடிவும் தெரிவிக்கப்படவில்லை எனவும், தொடர்ந்தும் முடிவுக்காக தாம் காத்திருப்பதாகவும் மக்கள் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் காணிகளை விடுவிக்குமாறு கோரும் தாம் மற்றுக் காணிகளையோ அல்லது நஷ்ட ஈட்டையோ கோவைில்லை எனவும். தங்களது சொந்த காணிகளை விடுவிக்க வேண்டும் என்றே கோருவதாகவும் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், வரும் தேர்தலுக்கு முன்னதாக தமது பிரச்சினைக்கு தீர்வு தர வேண்டும் என்று தெரிவித்துள்ள மக்கள், தேர்தலில் சொந்த நிலத்திலிருந்தே வாக்களிப்பதற்கு முடிவு எடுத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.