மக்கள் கவனத்தை திசை திருப்பவே யாழ். மேயர் கைது – அரசை சாடுகின்றார் சஜித்

“யாழ்ப்பாண மாநகர முதல்வர் கைது செய்யப்பட்டமையானது மக்களின் கவனத்தை திசைத்திருப்பும் நோக்கத்துடனான ஒரு செயற்பாடு” என எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ அரசாங்கத்தைக் கடுமையாகச் சாடியுள்ளார். “யாழ் மேயரை பயங்கரவாதி என முத்திரை குத்துவதன் மூலமாக உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் சூத்திரதாரி குறித்த விசாரணையை அரசாங்கம் நிறுத்திவிட்டது” எனவும் அவர் குற்றஞ்சாட்டியிருக்கின்றார்.

கொழும்பில் நேற்று சனிக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். இங்கு அவர் மேலும் முக்கியமாகத் தெரிவித்தவை வருமாறு:

“நாட்டு மக்களுடைய கவனத்தைத் திசைதிருப்புவதை நோக்கமாகக் கொண்டே யாழ். மேயர் கைது செய்யப்பட்டார். உயிர்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்று இரண்டு வருடங்கள் நிறைவடையும் நிலையில் அதன் உண்மையான குற்றவாளிகளைக் கண்டுபிடிப்பதற்குப் பதிலாக நாட்டு மக்களை ஏமாற்றி, அவர்களைத் திசைதிருப்பதற்காகப் போடப்பட்ட ஒரு நாடகம்தான் இந்தக் கைது.

யாழ். மேயர் அல்லது அதிகாரிகளுடன் குறிப்பிட்ட சீருடைகள் தொடர்பில் பிரச்சினை இருந்தால், அதனை அமைச்சரவை மட்டத்திலோ அல்லது நிர்வாக மட்டத்திலோ விசாரணை நடத்த வேண்டும். அது குறித்த விசாரணைகளை முன்னெடுப்பதற்கு ஒரு முறைமை உள்ளது. உள்ளூராட்சி அமைச்சு மூலமாக அல்லது அதற்கு மாற்றான அமைப்பு ஒன்றின் மூலம் இது குறித்து விசாரணையை நடத்தியிருக்க முடியும்.

அதனைவிட ஏனைய மாநகர சபை பணியாளர்களின் சீருடையகளுடன் ஒப்பிட்டு அதில் தவறுகள் உள்ளதா என்பதைக் கண்டறிய முடியும். வெறுமனே கட்டுக்கதைகளை வெளியிடுவதைத் தவித்து, நாடகங்களைத் தவிர்து, மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்துவதைத் தவிர்த்து நீதியை நிலைநாட்டுங்கள். இவ்விடயத்தில் யாழ். மேயரை ஒரு பயங்கரவாதி போல அரசாங்கம் நடத்தியுள்ளது. அவ்வாறு அவர் நடத்தப்பட்டதை நான் முற்றாக நிராகரிக்கின்றேன்.

மிகவும் முக்கியமான இந்தத் தருணத்தில் உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பிரதான சூத்திரதாரி இன்று வரையில் வெளிப்படுத்தப்படாமல் இருப்பது எமக்கு அதிருப்தியையும் ஆச்சரியத்தையும் தருகின்றது. இரண்டு வருடங்கள் கடந்த பின்னர் ஏற்கனவே கைதாகியுள்ளவர்களை குற்றவாளிகளாகக் காட்டுவதற்கு அரசாங்கம் முயற்சி செய்கின்றது. இது ஒரு தவறான முறை. நாட்டு மக்களை ஏமாற்றும் செயல்.

யாழ். மேயரைக் கைது செய்து பயங்கரவாதி என முத்திரை குத்துவதன் மூலம் உயிர்த்த ஞாயிறு குறித்த மக்களின் கவனத்தை திசைதிருப்ப அரசு முயல்கின்றது. இவ்வாறு மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தாமல், உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்குப் பொறுப்புக் கூற வேண்டியவர்களை சட்டத்தின் முன் நிறுத்தி அவர்களுக்கக் கடுமையான தண்டனையைப் பெற்றுக்கொடுப்பதைத்தான் நாம் எதிர்பார்த்திருக்கின்றோம்.

உயிர்த ஞாயிறு தாக்குதலின் சூத்திரதாரி என ஒருவரின் பெயரை வெளியிட்டுவிட்டு, நாட்டு மக்கள் அனைவரையும் முட்டாள்களாக்குததைத் தவிர்த்து உண்மையான குற்றவாளிகள் நீதியின் முன்பாக நிறுத்தப்பட வேண்டும் என்பதே எமது கோரிக்கை” எனவும் சஜித் பிரேமதாஸ வலியுறுத்தினார்.