போர் நிறுத்த விதிகளை மீறி தாக்குதல் நடத்தும் துருக்கி – பதில் தாக்குதலில் பெருமளவான துருக்கி படையினர் பலி

போர் நிறுத்தத்தை மீறி தாக்குதல் நடத்திய துருக்கிப் படையினர் மீது தற்காப்புத் தாக்குதல் மேற்கொண்டதாகவும் அதில் பெருமளவன துருக்கிப் படையினரும், அவர்களின் ஆதரவுப் படையினரும் கொல்லப்பட்டுள்ளதாகவும், கவச வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளதாகவும் குர்திஸ் போராளிகள் அமைப்பு நேற்று (19) வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளது.

அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

போர் நிறத்த உடன்பாட்டை துருக்கி அரசு மீறியுள்ளது. துருக்கி படையினரும் அவர்களின் ஆதரவுப் படையினரும் ரஸ் அல் அயின் பகுதி மீது தாக்குதல்களை மேற்கொண்டிருந்தனர். அவர்களின் முன்னகர்வுக்கு எதிராக எமது போராளிகள் மேற்கொண்ட தாக்குதலில் 3 கவச வாகனங்கள் சேதமாக்கப்பட்டதுடன், 13 படையினர் கொல்லப்பட்டனர்.

12 போராளிகளும், பொதுமக்களும் இந்த மோல்களில் கொல்லப்பட்டனர்.
அதேசமயம், கோமிசி பகுதியில் துருக்கிப் படையினர் பீரங்கித் தாக்குதல்களை மேற்கொண்டதில் எமது தரப்பில் ஒருவர் கொல்லப்பட்டதுடன், எமது படையினர் மேற்கொண்ட பதில் தாக்குதலில் இராணுவத்தினரின் ஆயுதங்களஞ்சியம் தகர்க்கப்பட்டதுடன், அவர்களின் ஆதரவுப் படையினர் பலர் கொல்லப்பட்டுள்ளனர்.

இதனிடையே கோபானி பகுதியில் எமது நிலைகளைக் கைப்பற்றுவதற்கு இரகசியமாக நகர்ந்து வந்த துருக்கிப் படையினர் மற்றும் அவர்களின் ஆதரவுப் படையினர் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களில் பெருமளவான ஆதரவுப் படையினர் கொல்லப்பட்டதுடன், அவர்களின் வாகனம் ஒன்றும் தகர்க்கப்பட்டுள்ளது.

18 துருக்கிப் படையினரும், அவர்களின் ஆதரவுப் படையினரும் கொல்லப்பட்டதுடன், எமது தரப்பில் 17 பேர் கொல்லப்பட்டுள்ளனர். போர் நிறுத்தத்தின் பின்னர் துருக்கிப் படையினர் தாக்குதல் நடத்திவருகின்றபோதும் நாம் தற்காப்பு நடவடிக்கைகளையே மேற்கொண்டு வருகின்றோம், தாக்குதல் எதனையும் நடத்தவில்லை என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.