கனடாவில் ஜஸ்டின் ட்ரூடோ மீண்டும் பிரதமராவாரா? தமிழர்களின் ஆதரவு யாருக்கு?

கனடாவின் 43ஆவது மக்களவைப் பொதுத் தேர்தல் வரும் ஒக்டோபர் 21ஆம் திகதி நடைபெறவுள்ளது.

கனடாவின் தற்போதைய பிரதமரான லிபரல் கட்சியின் தலைவர் ஜஸ்டின் ட்ரூடோ இரண்டாவது முறையாக இந்த தேர்தலில் போட்டியிடுகின்றார். அடுத்தடுத்து சர்ச்சையில் சிக்கிய முக்கிய கட்சிகளின் தலைவர்கள், அனல் பறந்த விவாதங்கள், அதிர்வலைகளை எழுப்பிய குற்றச்சாட்டுகள், பகிரங்க மன்னிப்புகள், எதிர்பார்க்காத திருப்பங்கள் என வழக்கம் போல் பரபரப்பிற்கு பஞ்சமில்லாமல் நிறைவுக் கட்டத்தை தேர்தல் களம் எட்டியுள்ளது.

இந்நிலையில், கனடா தேர்தல் களத்தின் தற்போதைய நிலவரம் என்ன? தேர்தலில் வெற்றி, தோல்வியை நிர்ணயிக்கப் போகும் விடயங்கள் என்ன?  கருத்துக் கணிப்புக்கள் சொல்வது என்ன? கூட்டணி ஆட்சி அமையுமா? தமிழர்களின் ஆதரவு யாருக்குக் கிடைக்கும்? போன்ற பல்வேறு கேள்விகள் எழுந்த வண்ணமே உள்ளது.

நிலப்பரப்பில் உலகின் இரண்டாவது மிகப் பெரிய நாடாக விளங்கும் கனடாவில் பத்து மாகாணங்களும், மூன்று ஆட்சி நிலப்பகுதிகளும் உள்ளன. ஆங்கிலம் மற்றும் பிரெஞ்சு ஆகியவை அதிகாரபூர்வ மொழிகளாக உள்ளன.

கனடாவில் நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் மக்களவை பொதுத் தேர்தல் மூலம் வெற்றி பெறும் கட்சியின் தலைவர் அந்நாட்டின் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்படுகின்றார்.

கனடாவில் மொத்தம் 338 மக்களவை தொகுதிகள் உள்ளன. பெரும்பான்மையை நிரூபிக்க ஒரு கட்சி 170 தொகுதிகளில் வெற்றிபெற வேண்டும்.

கடைசியாக, 2015ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் ஜஸ்டின் ட்ரூடோ தலைமையிலான லிபரல் கட்சியின் சார்பாக போட்டியிட்டவர்களில் 184பேர் வெற்றி பெற்றிருந்தனர். 99 இடங்களுடன் கன்சவேட்டிவ் கட்சி இரண்டாவது இடத்தையும், 44 இடங்களுடன் நியூ டெமாகிரட்டிக் கட்சி மூன்றாவது இடத்தையும் பெற்றிருந்தது.

மற்ற நாடுகளைப் போன்று கனேடிய மக்களும் அரசியல் சார்ந்த கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டு தேர்தலில் வாக்களித்தாலும், நாட்டின் முக்கிய பிரச்சினைகளுக்கு தெளிவான தீர்வை முன்வைக்கும் கட்சிக்காக தங்களது முடிவை மாற்றும் போக்கு மக்களிடையே காணப்படுவதாக வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

அந்த வகையில், கனடாவின் மிகப் பெரிய சந்தை ஆய்வு நிறுவனமான ஐபிஎஸ்ஓஎஸ், மக்கள் இந்தத் தேர்தலில் எதை அடிப்படையாகக் கொண்டு வாக்களிக்க உள்ளனர் என நடத்திய கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளிவந்துள்ளன. அதன்படி, வழக்கம் போல அரசியல் கட்சிகளின் சுகாதார திட்டங்களுக்கே அதிகபட்சம் 35 சதவீத மக்கள் முன்னுரிமை அளித்துள்ளனர்.

அதற்கடுத்து, பருவநிலை மாற்றம், வாழ்க்கை செலவு அதிகரிப்பு, வருமான வரி, நாட்டின் பொருளாதாரம், வீட்டு வசதி, கல்வி உள்ளிட்ட விடயங்களுகு்கு அந்த நாட்டு மககள் முக்கியத்துவம் அளிப்பது தெரியவந்துள்ளது.

குறிப்பாக, கனடாவின் கார்பன் வெளியேற்றத்தைக் குறைப்பது தொடர்பாக சர்வதேச அளவில் தான் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றுவதற்கு நாட்டிலுள்ள அனைத்து மாகாணங்களும் தனித்தனியே திட்டங்களைத் தாக்கல் செய்ய வேண்டும் என்று பிரதமர் ஜஸ்டின் அரசு எடுத்துள்ளதற்கு மக்களிடையே கடும் எதிர்ப்புக் காணப்படுகின்றது.

அதே சூழ்நிலையில், கனடாவின் அல்பர்ட்டா மாகாணத்திலிருந்து பிரிட்டிஷ் கொலம்பியாவிற்கு குழாய் வழியாக கச்சா எண்ணெயை கொண்டு செல்லும் திட்டத்திற்கு பல்வேறு தரப்பினரின் எதிர்ப்பையும் மீறி ஜஸ்டினின் அரசு அனுமதி அளித்துள்ளது இந்தத் தேர்தலில் எதிரொலிக்கக்கூடும்.

கனடாவின் முக்கிய நகரங்களான ரொறென்டோ, வான்கூவர் உள்ளிட்டவற்றில் அதிகரித்து வரும் வீடு மற்றும் வாழ்க்கைச் செலவு, வேலை வாய்ப்பின்மை, பொருளாதார நிலைமை உள்ளிட்டவையும் இந்தத் தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கலாம்.

செப்டெம்பர் இரண்டாவது வாரம் மக்களவைத் தேர்தல் குறிதத அறிவிப்பை ஜஸ்டின் ட்ருட்டோ முறைப்படி அறிவித்துள்ளார்.

இதுவரை கிட்டத்தட்ட 40 நாட்கள் பிரச்சாரம் நடைபெற்றுள்ள நிலையில், கனடாவைச் சேர்ந்த முன்னணி ஊடக நிறுவனங்கள் நடத்திய கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளது.

கனேடிய அரசின் நிதியுதவியோடு இயங்கும் அந்த நாட்டின் மிகப் பெரிய தொலைக்காட்சி மற்றும் மின்னணு ஊடகமான சிபிசி இணையம் மூலம் நடத்திய சமீபத்திய கருத்துக் கணிப்பின்படி ஜஸ்டினின் லிபரல் கட்சி 137 தொகுதிகளிலும், ஆன்ட்ரூ ஷீர் தலைமையிலான கன்சர்வேட்டிக் கட்சி 125 இடங்களையும் புளக் கியுபெக்வா கட்சி 39 இடங்களையும் மற்றும் ஜக்மித் சிங் தலைமையிலான நியு டெமோக்கிட்டிக் கட்சி 34 இடங்களையும்  வெல்லும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கிடையில், 2016ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட கனடாவின் மொழி அடிப்படையிலான மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி அங்கு 1,57,000 தமிழர்கள் வாழ்கின்றனர். அவர்களில் பெரும்பாலானோர் இலங்கையில் நடந்த உள்நாட்டுப் போரின் போது பல்வேறு வழிகளில் கனடாவிற்கு அகதிகளாக வந்து குடியுரிமை பெற்றவர்கள். இதைத் தவிர்த்து பல்லாயிரக் கணக்கான தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் கனடாவில் நிரந்தர வதிவிட உரிமை பெற்றவர்களுகு்கும் கனடிய தேர்தலில் வாக்களிக்கும் உரிமை இல்லை.

justin2 கனடாவில் ஜஸ்டின் ட்ரூடோ மீண்டும் பிரதமராவாரா? தமிழர்களின் ஆதரவு யாருக்கு?தொடக்க காலம் தொட்டே தமிழர்கள் லிபரல் கட்சிக்கு ஆதரவளிக்கும் மனப்பான்மை கொண்டவர்களாகவே அறியப்படுகின்றார்கள். ஆனால், அந்த நிலைமை சிறிது சிறிதாக மாற்றமடைந்து வருகின்றது. உதாரணமாக கனடாவின் முதல் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினரான ராதிக சிற்சபேசனின் நியு டெமோக்கிரட்டிக் கட்சியை சேர்ந்தவர். அதன் பின்னர், கடந்த தேர்தலில் லிபரல் கட்சியை சேர்ந்த ஹரி ஆனந்தசங்கரி வெற்றி பெற்று நாடாளுமன்ற உறுப்பினரானார்.

மற்ற கனேடியர்களைப் போன்றே தத்தமது தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களின் தனிப்பட்ட திறன்களையும், அடுத்து அரசியல் பின்புலங்களையும் அடிப்படையாகக் கொண்டும், தமிழ் சமுதாயத்திற்கு குறிப்பாக இலங்கை விவகாரத்தில் வலுவான கருத்துக் கொண்டுள்ள வேட்பாளர்களை கண்டு உணர்ந்து தமிழர்கள் வாக்களிப்பார்கள்.

இம்முறை கனேடிய மக்களவை பொதுத் தேர்தலில் மூன்று கட்சிகளின் சார்பில் நான்கு தமிழர்கள் வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர். லிபரல் கட்சியின் சார்பில் ஒருவர், கன்சர்வேட்டிவ் கட்சியின் சார்பில் இருவர், பீப்பிள் பார்ட்டி ஒப் கனடாவின் சார்பில் ஒருவர் என நான்கு தமிழ் வேட்பாளர்கள் இந்தத் தேர்தலில் லிபரல் கட்சியின் சார்பாக போட்டியிட்டு வெற்றி பெற்ற ஹரி ஆனந்தசங்கரி மீண்டும் அதே ஸகாபரோ ரூஜ் பார்க் தொகுதியில் போட்டியிடுகின்றார்.

நியு டெமோக்கிரட்டிக் கட்சியின் சார்பில் இம்முறை தமிழர்கள் எவரும் போட்டியிடவில்லை.

2015ஆம் ஆண்டு நடந்த கனேடிய மக்களவை பொதுத் தேர்தலில் 68.3 சதவீத வாக்குகள் பதிவானது. இதுவே பல தரப்பினராலும் குறைவாகக் கருதப்படக் கூடும். ஆனால் இதுதான் கனடாவின் கடந்த 22 ஆண்டுகால வரலாற்றில் அதிகமான வாக்கு சதவீதம் என்று தரவுகள் தெரிவிக்கின்றன.

குறிப்பாக தமிழர்கள் உட்பட சிறுபான்மை மக்கள் தொகையைக் கொண்ட இனக்குழுக்களிடையே தேர்தலில் வாக்களிப்பில் ஆர்வமின்மை நிலவுவதாகவும், அதை களையும் பொருட்டு தமிழ் வாக்கு 2019 என்ற பிரச்சாரத்தை முன்னெடுத்துள்ளனர்.

2019ஆம் ஆண்டு கனடிய மக்களவை பொதுத் தேர்தலில் தமிழர்கள் வாக்களிக்கும் வீதத்தை அதிகரிப்பதற்காக அரச பணியாற்றும் தமிழர்கள், தமிழ்க் குடிமை செயலகம் ஆகிய அமைப்புக்களால் இந்த கட்சி சார்பற்ற பரப்புரை செயற்பாடுகள் முன்னெடுக்க்பபட்டுள்ளது. இதன் மூலம் தமிழர்களிடையே நேரடியாகவும், சமூக ஊடகங்கள் மூலமாகவும் தேர்தலில் வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த முயற்சிப்பதாகவும், குறிப்பாக தமிழ் சமுதாயத்தைச் சேர்ந்த இளைஞர்களிடையே நிலவி வரும் அரசியல் ஈடுபாடின்மையை போக்கும் வகையில் இந்த முன்னெடுப்பு அமைகின்றது என்று ரொறொன்ரோ நகர சபையின் முன்னாள் உறுப்பினரும், ஒன்டாறியோ மாகாணத்தின் நியூ டெமோக்கிரட்டிக் கட்சியின் முன்னாள் தலைவருமான நீதன் சண் என்பவர் குறிப்பிடுகின்றார்.

கனடிய வாழ் தமிழர்களிடையே தேர்தல் அரசியலில் ஆர்வம் இல்லாததற்கு காரணம் குறித்து பதிலளிக்கும் போது, தன்னுடைய வாக்கு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தப் போவதில்லை என்றும் அரசியல் மீதான நம்பிக்கையின்மை, தீவிரமான ஆதரவு, எதிர்ப்பு நிலைப்பாடு இல்லாததும் வேலைப்பளு, அரசியல் மீதான நம்பிக்கையின்மை போன்றவற்றின் காரணமாகவும் தமிழர்கள் தேர்தலில் வாக்களிப்பதை தவிர்க்கின்றனர் என நீதன் சண் மேலும் கூறுகின்றார்.

மற்றைய வளர்ந்த நாடுகளைப் போன்று கனடாவிலும் இன்னமும்கூட பாரம்பரிய வாக்குச்சீட்டு முறைப்படியே தேர்தல் நடைபெறுகின்றது. கனடாவில் மட்டும் ஆறு வேறுபட்ட நேர மண்டலங்கள் இருந்தாலும், தேர்தல் நடைபெறும் அக்டோபர் 21ஆம் திகதி நள்ளிரவிற்குள்ளேயே முடிவுகள் வெளியாகி விடும்.