போராடும் விவசாயிகளுக்கு அமெரிக்காவின் சியாட்டில் நகர் மன்றம் ஆதரவு

சியாட்டில் மாநகர கவுன்சில் கூட்டத்தில், இந்திய விவசாயிகள் போராட்டத்தில் ஆதரிக்கும் தீர்மானம் டிசம்பர் 14ம் திகதி விவாதத்துக்கு வந்தது.

தெரசா மாஸ்குவேடா, சாமா சாவந்த் ஆகிய சியாட்டில் மாநகர கவுன்சில் உறுப்பினர்கள் இந்தத் தீர்மானத்தை முன் மொழிந்த்தனர். இது தொடர்பாக, பொது மக்கள் கருத்துக் கேட்கப்பட்டது.

சியாட்டில் மாநகர் இடம் பெற்றுள்ள வாசிங்டன் மாநிலத்தில் வசிப்பவர்களுக்குக் கருத்து சொல்ல வாய்ப்பளிக்கப்பட்டது.

பெருந்தொகையானோர் கலந்து கொண்டு கருத்துக்கள் பகிர்ந்தனர். 9 கவுன்சிலர்களும் ஆதரவு தெரிவிக்க தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்நிலையில், உண்மையான விவசாய சங்கங்களுடன், தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி, பிரச்னைகளுக்கு திறந்த மனதுடன் தீர்வு காண மத்திய அரசு தயாராக இருப்பதாகவும், அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தெரிவித்துள்ளார்.

குறைந்தபட்ச ஆதரவு நிலை நிர்வாக முடிவு என்றும், அது தொடரும் எனவும் அமைச்சர் கூறியுள்ளார்.

இந்திய அரசு கொண்டு வந்துள்ள மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் நடத்தி வரும் போராட்டம் 21ஆம் நாளை எட்டியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.