பொறுப்புக் கூறல் தொடர்பில் அரசாங்கம் விசேட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்!

சர்வதேச அரங்கில் தொடர்ச்சியாக கேள்விக்குள்ளாக்கப்படும் இலங்கையின் பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகள் தொடர்பில் வெளிவிவகார அமைச்சு விசேட நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என்று மீண்டுமொரு முறை வலியுறுத்தப்பட்டுள்ளது.

“வெளிவிவகார அமைச்சர் சர்வதேச அரங்குக்கு சென்று ‘உள்ளக பொறிமுறை ஊடாக தீர்வு’ என குறிப்பிடுகிறார். ஆனால் இலங்கையில் உள்ளக பொறிமுறைக்கான முன்னேற்றகரமான எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை. பாதிக்கப்பட்ட தரப்பும் உள்ளக பொறிமுறையை ஏற்கவில்லை” என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நடைபெற்ற 2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் வெளிவிவகார அமைச்சின் மீதான குழுநிலை விவாதத்தில் உரையாற்றுகையில் அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அதேநேரம், ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகை விவகாரத்தில் பயங்கரவாத தடுப்புச் சட்டம் பிரதானமாக பேசப்படும்.

ஆகவே இந்த விடயம் தொடர்பில் வெளிவிவகாரத்துறை அமைச்சு விசேட கவனம் செலுத்த வேண்டும்.

பயங்கரவாதத்தில் இருந்து அரசை பாதுகாக்கும் சட்டமூலம் குறித்து முன்வைக்கப்படும் பாரதூரமான குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் அரசாங்கம் கொள்கை அடிப்படையில் தீர்மானம் எடுக்க வேண்டும் என்று சாணக்கியன் வலியுறுத்தினார்.

அத்துடன் சர்வதேச அரங்கில் தொடர்ச்சியாக கேள்விக்குள்ளாக்கப்படும் இலங்கையின் பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகள் தொடர்பில் வெளிவிவகார அமைச்சு விசேட நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும்.

பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு தீர்வு வழங்குவதற்கு அரசாங்கம் இதுவரையில் முன்னேற்றகரமான நடவடிக்கைகளை எடுக்கவில்லை.

இதன் தாக்கத்தை வெளிவிவகார அமைச்சு எதிர்க்கொள்ள நேரிடும் என்றும் பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் வலியுறுத்தினார்.