பொத்துவில் – பொலிகண்டி பேரணி – சித்தார்த்தன் எம்.பி.யிடம் பொலிஸார் நேற்று விசாரணை

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி பேரணியில் பங்கேற்றமை தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் புளொட் கட்சியின் தலைவருமான தர்மலிங்கம் சித்தார்த்தனிடம் பொலிஸார் நேற்று விசாரணை நடத்தினர்.

கொழும்பில் உள்ள புளொட் கட்சியின் அலுவலகத்திற்கு சென்ற கிளிநொச்சி, பருத்தித்துறை பொலிஸ் நிலையப் பொலிஸார் தனித்தனியாக அவரை விசாரித்து வாக்குமூலம் பெற்றனர்.

காலை 9.30 தொடக்கம் மதியம் ஒரு மணி வரை சுமார் மூன்றரை மணி நேரம் இந்த விசாரணை இடம்பெற்றது. இந்தப் போராட்டத்திற்கு நீதிமன்றம் தடை விதித்தபோதும் அதை மீறி ஏன் கலந்து கொண்டீர்கள் என்று அவரிடம் பொலிஸார் வினா எழுப்பினர்.

இதற்குப் பதிலளித்த சித்தார்த்தன் எம்.பி. ‘இது ஒரு மக்கள் எழுச்சி போராட்டம். மக்களின் பிரதிநிதி என்ற அடிப்படையில் எனது மாவட்டத்தின் மக்களால் நடத்தப்படும் போராட்டத்தில் பங்கேற்க வேண்டிய பொறுப்பு எனக்கு உண்டு. அந்தப் பொறுப்பையே நான் நிறைவேற்றியுள்ளேன்” என்று கூறினார்.