பேஸ்புக்கில் நேரடி ஒளிபரப்பு செய்தவரிடம் ரூ.50 இலட்சம் நஷ்டஈடு !

அக்கரைப்பற்று பிரதேசத்தினைச் சேர்ந்த ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியதாக தெரிவித்து கடந்த ஏப்ரல் 8ஆம் திகதி புதன்கிழமை பேஸ்புகில் நேரடி ஒளிபரப்பு செயற்பட்டதற்கு எதிராக 50 இலட்சம் ரூபா நஷ்டஈடு கோரப்பட்டுள்ளது.

இது தொடர்பில் சட்டத்தரணி ராதீப் அஹமதினால் குறித்த பேஸ்புக் பக்கத்தின் உரிமையாளருக்கு கடிதமொன்று கடந்த ஏப்ரல் 10ஆம் திகதி வெள்ளிக்கிழமை மின்னஞ்சல் ஊடாக அனுப்பபட்டுள்ளது.

தற்போது நாட்டில் நிலவும் அவசர நிலைமையில் கொரோனா வைரஸ் தொற்று தொடர்பில் தகவல்களை வெளியிடும் போது கடைப்பிடிக்க வேண்டிய ஒழுங்குமுறைகள் பற்றி சுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கையினை ஒழுங்கு விதிகளை குறித்த பேஸ்புக் பக்கம் மீறியுள்ளதாக சட்டத்தரணியின் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால், தனது கட்சிகாரருக்கு பாதிப்பினை ஏற்படுத்தும் நோக்கோடு குறித்த வீடியோ ஒளிபரப்பட்டமையினால் தனது கட்சிக்காரரையும் அவரது குடும்பத்தினரையும் மிகவும் மன உளைச்சலுக்கு உள்ளாக்கியுள்ளதுடன் சமூகத்திலிருந்து அவர்கள் ஒதுக்கப்பட்டு அவமானத்திற்குள்ளாகும் நிலையினை தோற்றுவித்துள்ளதாக குறித்த கடிதத்தில் சட்டத்தரணி ராதீப் அஹமத் குறிப்பிட்டுள்ளார்.

இந்த மன உளைச்சல் மற்றும் அவமானம் என்பவற்றிக்கு 50 இலட்சம் ரூபாவினை தனது கட்சிக்காரர் மதீப்பீடு செய்கிறார். இந்த நட்டஈட்டினை 14 நாட்களுக்குள் செலுத்த தவறும் பட்சத்தில் தங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என சட்டத்தரணியினால் பேஸ்புக் பக்கத்தின் உரிமையாளருக்கு அனுப்பியுள்ள கடித்ததில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.