பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா கிடைப்பதில் சிக்கல்- ரமேஷ் பத்திரண

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா சம்பளம் வழங்குவதற்கு முதலாளிமார் சம்மேளனம் இன்னும் இணக்கவில்லை என பெருந்தோட்டத்துறை அமைச்சர் ரமேஷ் பத்திரண தெரிவித்துள்ளார்.

எனினும், சம்பள உயர்வை பெற்றுக்கொடுப்பதற்கான முயற்சியில் அமைச்சர் நிமல் சிறிபாலடி சில்வா தீவிரமாக ஈடுபட்டுவருகின்றார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் பெருந்தோட்டக் கம்பனிகளுடன் இவ்விவகாரம் தொடர்பில் பல சுற்று பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டுள்ளன எனக் குறிப்பிட்ட அவர், இன்னும் தீர்வு எட்டப்படவில்லை. இம்மாதத்துக்குள் முடிவொன்றை எடுப்பதற்கு எதிர்ப்பார்க்கின்றோம்.” என்று கூறியுள்ளார்.

இதேவேளை, பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு ஜனவரி முதலாம் திகதி முதல், ஆயிரம் ரூபாய் பெற்றுக்கொடுக்கப்படும் என்ற உறுதிமொழியை அரசாங்கம் வழங்கியிருந்தது.

தமக்கு அடிப்படை நாள் சம்பளமாகவே ஆயிரம் ரூபாய் வேண்டும் என தொழிலாளர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

இது பற்றி அரச தரப்பில் இருந்தோ அல்லது கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் தொழிற்சங்க தரப்புகளில் இருந்தோ இன்னும் உரிய விளக்கம் வழங்கப்படவில்லை எனக் கூறப்படுகின்றது.