பெஞ்சமின் நெதன்யாகுவின் ஆட்சியமைக்கும் முயற்சி மீண்டும் தோல்வி

டந்த மார்ச் மாதம் இஸ்ரேலில் நடந்த பொதுத் தேர்தலில் பெஞ்சமின் நெத்தன்யாகுவின் வலதுசாரி லிக்குட் கட்சி இஸ்ரேலின் தேர்தலில் அதிக இடங்களைக் கைப்பற்றினாலும் தனிப் பெரும்பான்மை அவர்களுக்கு கிடைக்கவில்லை.  லிக்குட் 30 இடங்களை வென்றிருந்தது. ஆனால் நெத்தன்யாகுவால் இஸ்ரேலிய பாராளுமன்றமான 120 உறுப்பினர்களைக் கொண்ட நெசெட்டில் குறைந்தது 61 இடங்களைப் பெறுவதற்கு போதுமான கூட்டணியை அமைக்க முடியவில்லை.

கூட்டணி பேச்சுவார்த்தைகளில் எந்த முன்னேற்றமும் இல்லாமல் நேற்று நள்ளிரவில் காலக்கெடு காலாவதியானது. மீண்டும் குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் அரசாங்கத்தை அமைக்கத் தவறிவிட்டார். இது அவரது அரசியல் வாழ்க்கைக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளதோடு, இஸ்ரேல் நாட்டிற்கும் நிலையற்ற தலைமையை ஏற்படுத்தியுள்ளது.

 நெத்தன்யாகு மூன்றாவது முறையாக அரசாங்கத்தை அமைக்கத் தவறிவிட்டார். இரண்டு ஆண்டுகளில் நான்காவது உறுதியற்ற பொதுத் தேர்தலுக்குப் பிறகு கூட்டணியைக் கட்டியெழுப்ப அவர் கடந்த 28 நாட்களாக முயற்சித்து வந்தும் தோல்வியே கிடைத்துள்ளது.

ஜனாதிபதி ரிவ்லின் செய்தித் தொடர்பாளர் ஒரு அறிக்கையில், “நள்ளிரவுக்கு சற்று முன்னர், நெத்தன்யாகு ஜனாதிபதியின் இல்லத்திற்கு ஒரு அரசாங்கத்தை உருவாக்க முடியவில்லை என்று தெரிவித்தார். எனவே அந்த ஆணையை ஜனாதிபதிக்கு திருப்பி அனுப்பினார். அரசாங்கத்தை உருவாக்கும் செயல்முறையைத் தொடர்வது குறித்து நெஸ்ஸெட்டில் (இஸ்ரேலின் ஒற்றை நாடாளுமன்றம்) பிரதிநிதித்துவப்படுத்தப்பட்ட கட்சிகளை ரிவ்லின் தொடர்புகொள்வார்.” என்று கூறப்பட்டுள்ளது.

ஆணை இப்போது மீண்டும் தனது கைகளில் இருப்பதால், ஜனாதிபதி தனது அடுத்த நகர்வு குறித்து முடிவு செய்வதற்கு முன் புதன்கிழமை மீண்டும் கட்சிகளுடன் கலந்தாலோசிக்க உள்ளார். இது அடுத்த சில நாட்களுக்குள் நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஜனாதிபதி ரிவ்லின் இப்போது ஒரு அரசியல் தலைவரை ஒரு கூட்டணியைக் கூட்ட முயற்சிக்குமாறு முறையாகக் கேட்கலாம். ஆனால் இது நாடு மீண்டும் தேர்தலுக்குச் செல்லும் அபாயத்தை ஏற்படுத்தக்கூடும்.

அதை ஒரு தனிநபருக்குக் கொடுப்பதற்குப் பதிலாக, அவர் ஆணையை நாடாளுமன்றத்திடம் ஒப்படைக்கவும் முடிவு செய்யலாம். பெரும்பான்மைக்குத் தேவையான 61 உறுப்பினர்களின் ஆதரவுடன் தன்னை அணுகுமாறு அவர் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் அழைப்பு விடுப்பார் எனக் கூறப்படுகிறது. எந்தவொரு புதிய அரசாங்கமும் ஒப்புக் கொண்டு பதவியேற்கும் வரை, நெத்தன்யாகு இஸ்ரேலின் பிரதமராக இருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.