பூகோள அரசியலைப் புரிந்துகொள்ள.. ‘Confessions of an Economic Hit man’-  ந.மாலதி 

மூன்று தசாப்தங்களாக ஐ-அமெரிக்காவின் பொருளாதார அடியாளாக பணி செய்த இந்நூலின் ஆசிரியர் ஜான் பேர்கின்ஸ் தன் மனச்சாட்சியின் உந்துதலால் தனது அனுபவங்களை இந்நூலில் பதிவு செய்கிறார். பல நாடுகளில் ஐ-அமெரிக்காவின் அடியாளாக வேலை செய்த இவருக்கு ஒரு சாதாரண மனிதருக்கு கிட்டாத பல விடயங்கள் தெரியும். அவர் போல இன்னும் பல நூறு பேர்கள் இவ்வாறு பணி செய்திருப்பார்கள் ஆனால் இவர் ஒருவரே மனச்சாட்சிக்கு அடிபணிந்து இதை வெளிக்கொண்டுவந்து இருக்கிறார். இந்நூல் தமிழிலும் வெளிவந்திருக்கிறது.

இவர் போன்றவர்களின் வார்த்தைகளை உள்வாங்கினாலே ஈழத்தமிழர்கள் அவர்களுக்கு தேவையான பூகோள அரசியலை புரிந்து கொள்ளலாம். மனித உரிமைகள் சனநாயகம் என்றெல்லாம் ஐ-அமெரிக்கா பேசுவது எத்துணை பம்மாத்து என்பதை இது போன்ற நூல்களின் ஊடாகவே புரிந்து கொள்ளலாம். ஆசிரியர் சொன்னவற்றில் சில-

வாழ்க்கையே சில தற்செயல் நிகழ்வுகளின் கூட்டுத்தான். நாம் அந்நிகழ்வுகளுக்கு எப்படி வினையாற்றுகிறோம் என்பதே வாழ்க்கை. இரண்டு தற்செயல் சம்பவங்கள் எனது வாழ்க்கையை வடிவமைத்தன. இதில் ஒன்று இரானிய ஷாவுக்கு ஆலோகசராக இருந்த ஒரு இரானியரின் மகனை சந்தித்தது…

எனது மனைவியின் மாமா என்னை தேசிய பாதுகாப்பு நிறுவனத்தில்வேலைக்கு விண்ணப்பிக்க ஊக்கம் கொடுத்தார். எனது நேர்காணலில் அவர்கள் எனது திறமையையோ வேலை அனுபவங்களையோ பற்றி அக்கறை கொள்ளாமல் நான் வளர்ந்த சூழல், என் பெற்றோரைப் பற்றிய எனது அபிப்பிராயங்கள், செல்வந்த பிள்ளைகள் மத்தியில் நான் ஏழ்மையில் வளர்ந்தது போன்றவற்றிலே கவனம் செலுத்தினார்கள். பெண்கள், பாலியல் உறவுகள், பணம் பற்றிய எனது விரக்திகளையும் அதனால் என்னைச் சுற்றி நான் வளர்த்துக்கொண்ட கற்பனா ஆசைகளும் அவர்கள் கவனத்தை ஈர்த்தது.

இவையெல்லாம் என்னைப்பற்றிய மோசமான கருத்தை உண்டாக்கி நான் அவ்வேலைக்கு நிராகரிக்கப்படுவேன் என்றே நினைத்தேன். ஆனால் தொடர்ந்த நேர்காணல் இதற்கு எதிராக இருந்தது. பல வருடங்களுக்குப் பின்னரே இத்தகைய மோசமான விடயங்கள் அந்நிறுவனத்தைப் பொறுத்த மட்டில் விரும்பத்தக்கவை என்பதை அறிந்துகொண்டேன். நாட்டின் மேல் எனக்கிருந்து பக்தியைவிட வாழ்க்கையில் எனக்கிருந்த விரக்தியே அவர்களை ஈர்த்தது. பெற்றோர் மேல் என்கிருந்த கோபம், பெண்ணாசை, செல்வசெழிப்பான வாழ்கை பற்றிய எனது ஆசை, பொலிசுக்கும் பொய் சொல்லும் துணிவு போன்றவையே அவர்கள் தேடிய தகுதிகள்….

நான் இந்நோர்காணலில் தெரிவு செய்யப்பட்டாலும் அமைதிப்படைநிறுவனம் ஒன்றில் சேர்ந்து என் மனைவியுடன் இகுவடோருக்குப் போனதே எனது முதல் தொழிலாக இருந்தது….

இகுவடோரில் ஒரு சிறிய பூர்வகுடி மக்கள் கிராமத்திலிருக்கும் போது ஒரு நாள், ‘மெயின்‘ (MAIN)  என்ற நிறுவனத்தின் துணைத்தலைவர்  அங்கு வந்திறங்கினார். உலக வங்கி இகுவடோருக்கும் அதன் அயல் நாடுகளுக்கும் அணைக்கட்டு மற்றம் பல கட்டுமானங்கள் கட்டுவதற்கு பல பில்லியன் டொலர் நிதி கடன் கொடுப்பதா என்பதை ஆராயும் பொறுப்பை இந்நிறுவனம் ஏற்றிருந்தது. இவருடன் நான் பேசிய போது தேசிய பாதுகாப்பு நிறுவனம்என்னை முன்னர் ஏற்றிருந்தது பற்றியும் அங்கு நான் வேலையில் சேர எண்ணியிருப்பது பற்றியும் அவருக்கு சொன்னேன். இதற்கு அவர் தான் அந்நிறுவனத்திற்கும் வேலை செய்வதாக சொன்னார். அவர் பேசிய பாணியிலிருந்து அவர் அங்கு வந்ததற்கு என்னை எடைபோடுவதும் நோக்கமாக இருந்திருக்குமோ என்று எனக்கு தோன்றியது. வசதியற்ற இடங்களில் வாழக்கூடிய எனது திறமையை அவர் எடைபோட்டார் என்றே நான் இப்போது எண்ணுகிறேன். அவரே அந்நிறுவனத்தில் எனக்கு வேலையும் தந்தார். அந்நிறுவனம் பொறியில்துறையில்தான் அதிகம் திட்டங்கள் செய்தாலும் அவர்களின் பிரதான வாடிக்கையாளரான உலக வங்கி நாங்கள் பொருளாதார நிபுணர்களையும் எமது நிறவனத்தில் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்று வற்புறுத்தி வருகிறது என்று சொன்னார்.

எனது முதலாவது வேலையாக நான் இந்தோனேசியாவுக்கு அனுப்பப்பட்டேன். என்னுடன் இன்னும் பத்து பேர்கள் மட்டில் இத்திட்டத்திலிருந்தோம். வேலையில் இறங்கிய பின்னர், எமது திட்டத்தின் நோக்கம் தெளிவாகியது. ஐ-அமெரிக்காவின், இந்தோனேசியா உட்பட்ட, வெளிநாட்டு கொள்கைகளை அமுல்படுத்தவே நாம் இங்கு அனுப்பப்பட்டிருக்கிறோம். இந்தோனேசிய மக்களுக்கு உதவி செய்வதற்காக நாம் இத்திட்டத்தை அமுல்படுத்தவில்லை. இத்திட்டங்களை வரைபவர்கள் இப்பூலோகத்தை தாம் ஆளவேண்டும் என்று முடிவு செய்தே இதைச்செய்கிறார்கள். இவர்கள் எல்லோரும் ஒருவரோடொருவர் இணைந்து கூட்டாக இருக்கிறார்கள். இவர்கள் பல்தேசிய காப்பரேசன்களின் முகாமைத்துவத்திலிருந்து அரச உத்தியோகங்களுக்கு இலகுவாக மாறுவார்கள். உதாரணமாக உலக வங்கியின் தலைவர், ரோபேட் மக்னமாரா. இவர் ஃபோட் கார் கம்பனி தலைவராக இருந்து, ஜனாதிபதி கெனடியின் கீழ், பாதுகாப்பு செயலராக அமர்த்தப்பட்டார். இப்போ மிகவும் சக்தி வாய்ந்த உலக வங்கயின் தலைவராக இருக்கிறார். எனக்கு கற்பித்த பல்கலைக்கழக பேராசிரியர்களுக்கு, பொருளாதார வளர்ச்சி ஒரு சிலரை செல்வந்தராக்கி பலரை இன்னும் ஏழ்மையில் தள்ளுகிறது என்பதெல்லாம் புரியவில்லை என்றே நினைக்கிறேன். இவர்களுக்கு புரிந்திருந்தாலும் அவர்கள் அதை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். ஏனெனில் அவர்கள் பணி செய்யும் பல்கலைக்கழகங்களும்  பெரிய கார்பரேசன்களின் நிதியுதவியாலேயே இயங்குகின்றன.

இந்தோனேசியாவில் நான் பணிசெய்த இக்காலத்தில் இந்நினைவுகள் என்னை சங்கடப்படுத்தின. எனினும் இப்போது நான் ஒரு மதிப்புக்குரிய பொருளாதார நிபுணராக இருந்தேன். மிகத்திறமைசாலிகளின் திட்டத்தையே நான் நிறைவேற்றுகிறேன் என்று சமாதானம் செய்து கொள்வேன். இரவில் சந்தேகங்களை என்னை சங்கடப்படுத்தும் போது ஒருநாள் நான் உண்மையை வெளிக்கொணருவேன் என்றும் சமாதானம் செய்து கொள்வேன்….

இவர்களை ஒரு கூட்டுச்சதி செய்பவர்கள் என்றோ அல்லது பூகோளத்தின் மேல் ஆதிக்கம் செலுத்த விருப்புகிறவர்கள் என்றோ மாறி மாறி மதிப்பிட்டேன். காலப்போக்கில் இவர்களை பொதுவான சில கொள்கைகளைக் கொண்ட சுயநலத்தால் உந்தப்படும் ஒரு இறுக்கமற்ற கூட்டாகவே மதிப்பிட்டேன். இவர்களுக்கும் அடிமைகளை வைத்து அக்காலத்தில் பெரும்தோட்டம் பயிர் செய்தவர்களுக்கும் பொதுக்குணங்கள் இருப்பதாக கருதினேன். இப்பெருந்தோட்டக்காரர்கள் அடிமைகளை வைத்திருப்பதும் அவர்களை காப்பதும் அவர்களை தமது சமய நம்பிக்கைகளுக்கு மாற்றுவதும் தமது கடமை என்றே நம்பினார்கள். அடிமை என்பதை இவர்கள் தத்துவரீதியாக ஏற்காவிட்டாலும், அதை ஒரு கட்டாய தேவையென்று நினைத்தார்கள். அது இல்லாவிட்டால் சமூகம் உடைந்து பொருளாதாரம் அழியும் என்று நம்பினார்கள். இப்போது இருக்கும் கூட்டமும் இதேபோலத்தான் என்று நினைத்தேன்….

போராலும், பெரும் தொகையான ஆயுத உற்பத்தியாலும், அணைகள் கட்டுவதாலும், பூர்வகுடி மக்களின் சூழலை அழிப்பதாலும் யார் நன்மை பெறுகிறார்கள் என்று யோசித்தேன். ஆயிரக்கணக்காக மக்கள் பசியாலும் நீர் அசுத்தமடைந்ததாலும், மாற்றக்கூடிய வருத்தங்களாலும் இறக்கும் போது யார் நன்மையடைகிறார்கள் என்று யோசித்தேன். நீண்ட கால நோக்கில் எவருமே இதனால் நன்மை அடைவதில்லை என்றும் குறுகியகால நோக்கில் அதிக செல்வத்தை வைத்திருக்கும் ஒரு சிலரே எனது அமைப்பின் தலைவர்களும் நானும் – நன்மை அடைபவர்கள் என்ற முடிவுக்கு வந்தேன்.

இம்முடிவு வேறும் பல கேள்விகளை எழுப்புகிறது. எவ்வாறு இந்த நிலைமை நீடிக்க முடிகிறது. பலமானவன் சொல்வதே சரிஎன்பதாலா? இது மட்டுமே காரணம் என்பது திருப்தியாக இல்லை. இதைவிடவும் பலமான ஒன்று இதை நீடிக்க வைக்கிறது என்று தோன்றியது. ஒரு பேராசியார் முதாளித்துவம் எப்படி இயங்கும் என்று சொன்னது நினைவுக்கு வந்தது. வரையாறையான வளங்கள், தொடர்சியாக வளர எண்ணும் மனிதர், மற்றும் அடிமைகள் பற்றி விளக்கிய இவர் ஒவ்வொரு முதாளித்துவத்திலும் ஒரு சில செல்வந்தரே உள்ள ஒரு பிரமிட் அமைப்பில் சமூகம் இருக்கும் என்றும் அதில் அடிமட்டத்தில் வேலை செய்பவர்கள் உண்மையில் அடிமைகளே என்று விளக்கினார்….

கடவுள் சிலரை பிரமிட்டின் உச்சியில் வைத்து அவர்கள் உலகம் முழுவதும் தமது வாழ்க்கை முறையை பரப்புவதை விரும்புகிறார் என்று நாமும் நம்பி இந்த நிலைமையை நாமே ஊக்கப்படுத்துகிறோம் என்ற முடிவுக்கு வந்தேன்.

இவ்வாறு இருப்பது இதுதான் முதல்தடவை இல்லை. மிகப்பழைய வட-ஆபிரிக்க, மத்திய கிழக்கு, ஆசிய பேரரசுகளில் ஆரம்பித்து பின்னர் பெர்சியா, கிரேக்கம், ரோம், கிறித்தவ சிலுவைபோர் மற்றும் கொலம்பஸ்க்கு முந்தைய ஐரோப்பிய பேரரசுகளாக தொடர்ந்தது. இந்த பேரரசு வேட்கையே அதிகமான போர்களுக்கும், சூழல் மாசடைதலுக்கும், பட்டினிக்கும், உயிரினங்களின் அழிவுக்கும், இனவழிப்புக்கும் பின்னாலுள்ள காரணி. இப்பேரரசுகளில் வாழும் மக்களின் நலனை இது மோசமாக பாதித்ததை, இத்தகைய செல்வம் நிறைந்த சமூகங்களில் பரவும் தற்கொலைகளிலும், போதைப்பொருள் பாவிப்பிலும், வன்முறைகளிலும் இருந்து புரிந்து கொள்ளலாம்….

இந்நூலில் ஆசிரியர் பல நாடுகளில் தான் செய்த பணியை விபரித்து காபரேட் ஐ-அமெரிக்கா எவ்வாறு பேரரசை வளர்க்கிறது என்பதை பல உதாரணங்கள் மூலம் விபரிக்கிறார். பனாமா நாட்டை இங்கு விபரமாக எடுப்போம். இவர் விபரிக்கும் ஏனைய நாடுகள் எண்ணெய் வளத்திற்காகவும் மக்களாட்சியை அழிப்பதற்காகவும் கையாளப்பட்டது. ஆனால் பனாமா நாடு சுவேஸ் கால்வாயை ஆளாவும் பனாமாவில் உருவான மக்களுக்கான ஆட்சியை அழிக்கவும் கையாளப்பட்டிருக்கிறது. இதனால் இலங்கைக்கும் பனாமா நாட்டுக்கும் சில ஒற்றுமைகள் இருப்பதாக தோன்றுகிறது. ஏனெனில் இலங்கையும் திருகோணமலை துறைமுகத்திற்காகவும் தமிழீழத்தில் உருவாகி வந்த மக்களாட்சியை அழிப்பதற்காகவுமே கையாளப்பட்டது, படுகிறது.

1977 இல் ஆசிரியர் பொருளாதார நிபுணராக மதிக்கபடுபவராகவும் பெரிய செல்வந்தராகவும் வளர்ந்து விட்டார். தனது திருமணம் உடைந்து விட்டாலும் பல அழகிய பெண்களுடன் உலகின் பல கண்டங்களில் தான் இருந்ததாக சொல்கிறார். இக்கட்டத்தில் ஒரு இந்திய கணிதமேதையின் உதவியுடன் ஒரு நாட்டின் கட்டுமானங்களை பெருக்குவதால் உருவாகும் பொருளாதார வளர்ச்சியை எதிர்வு கூறும் ஒரு பொருளாதார மாதிரியை உருவாக்கி அதன் மூலம் பிரபலமடைந்தார். இம்மாதிரி வீக்கமான எதிர்வு கூறுவதை வைத்தே ஒரு நாட்டை உலக வங்கியிடமிருந்து திருப்பி கொடுக்க முடியாத அளவிற்கு கடன் பெறச் செய்து அக்கடனின் மூலம் அந்நாட்டை பணியவைக்கலாம்.  இதுவே ஆசிரியர் போன்றோர் செய்து வந்த வேலை.