புதிய கொரோனோ வைரஸையும் தடுக்கும் சக்தி கொண்டது பைசர் தடுப்பு மருந்து

புதிதாக பரம்பரை மூலக்கூறு மாற்றமடைந்துள்ள கொரோனோ வைரஸ் இற்கு எதிராகவும் தமது தடுப்பு மருந்தை பயன்படுத்த முடியும் என் பையோ என் ரெக் எனப்படும் நிறுவனத்தின் தலைவர் ஓகர் சகின் கடந்த செவ்வாய்க்கிழமை (22) தெரிவித்துள்ளார்.

பிரித்தானியாவில் உருவாகியுள்ள பரம்பரை அலகு மாற்றமடைந்துள்ள புதிய கொரோனோ வைரஸின் தொற்றும் வேகம் முன்னையதை விட 70 விகிதங்கள் அதிகமாக உள்ளதாகவும், அதனால் பிரித்தானியாவில் அதிக மக்கள் பாதிப்படைந்து வருவதாகவும் வெளியாகியுள்ள தகவல்களைத் தொடர்ந்து அவர் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்.

எனினும் இது தொடர்பில் மேலும் ஆய்வுகளை நாம் மேற்கொண்ட பின்னரே உறுதியாக கூறமுடியும். விஞ்ஞான ரீதியாக பார்க்கும் போது எமது தடுப்பு மருந்து புதிய வைரஸிற்கு எதிராகவும் வேலைசெய்யும் சாத்தியங்களே உள்ளது. ஏனெனில் புதிய வைரஸின் புரத மூலக்கூறானது முன்னைய வைரஸின் புரதத்துடன் 99 விகிதங்கள் ஒத்ததாகவே உள்ளது. எனவே எமது தடுப்பு மருந்து பயனளிக்கும்.

ஆனால் நாம் சில பரிசோதனைகளின் பின்னரே இதனை உறுதிப்படுத்த முடியும். தற்போது நாம் பரிசோதனைகளை ஆரம்பித்தாலும் தகவல்களை பெறுவதற்கு இரு வாரங்கள் எடுக்கும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

ஆமெரிக்காவின் பைசர் மற்றும் ஜேர்மனியின் பையோ என் ரெக் நிறுவனங்கள் கூட்டாக தயாரித்த தடுப்பு மருந்தை 45 இற்கு மேற்பட்ட நாடுகள் அங்கீகரித்துள்ளன. இது வரையில் பல இலட்சம் மக்களுக்கு அது பயன்படுத்தக்கட்டுள்ளது.