சிறீலங்காவுக்கு எதிராக புதிய தீர்மானம்  கொண்டுவரப்படுவது உறுதி

எதிர்வரும் மார்ச் மாதம் ஜெனீவாவில் இடம்பெறவுள்ள ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் 46 ஆவது கூட்டத்தொடரில் சிறீலங்காவுக்கு எதிராக புதிய தீர்மானம்  கொண்டுவரப்படுவது உறுதியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதேசமயம், மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஆணையாளரின் சிறீலங்காவுக்கான அலுவலகத்தினால் தயாரிக்கப்பட்ட அறிக்கை ஒன்று சிறீலங்கா அரசுக்கு முன்னதாகவே அனுப்பப்பட்டுள்ளது. முன்னைய தீர்மானம் மற்றும் அதனை நடைமுறைப்படுத்த தவறிய சிறீலங்கா அரசின் நடவடிக்கைகளை அடிப்படையாகக் கொண்டே இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.

அதற்கான பதிலை அடுத்த வாரம் அனுப்பவுள்ளதாக சிறீலங்கா தெரிவித்துள்ளது. சிறீலங்காவுக்கு எதிரான இந்த புதிய தீர்மானத்தை கொண்டுவரவுள்ள குழுவுக்கு பிரித்தானியாவே தலைமைதாங்கவுள்ளது.

தீர்மானத்தின் வரைபில் உள்ளடக்க வேண்டிய தமிழ் தரப்பின் கருத்துக்கள் தொடர்பில் கொழும்பில் உள்ள மேற்குலக நாடுகளின் ராஜதந்திரிகள் தமிழ் அரசியல் கட்சிகளை சந்தித்து கடந்த வாரங்களில் கலந்துரையாடியுள்ளனர்.

சிரியா மற்றும் மியான்மார் மீது கொண்டுவரப்படும் தீர்மானங்களை ஒத்த தீர்மானங்கள் கொண்டுவரப்பட வேண்டும் என தமிழ் கட்சிகளின் ஒரு தரப்பினர் தெரிவித்துள்ளதாக கொழும்பு தகவல்கள் தெரிவித்துள்ளன.

ஆனால் சிறீலங்கா அரசுக்கு ஆதரவாக தாம் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் குரல் கொடுக்கப்போவதாக கடந்த ஒக்டோபர் மாதம் சீனா வெளிப்படையாக தெரிவித்ததும் இங்கு குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, கொரோனோ வைரசின் தாக்கத்தினால் இறந்த முஸ்லீம் மக்களின் உடல்களை எரிக்கும் சிறீலங்கா அரசின் நடவடிக்கைக்கு எதிராக அறிக்கை ஒன்றை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் சமர்ப்பிப்பதற்கு சிறீலங்காவில் உள்ள முஸ்லீம் பொது அமைப்புக்குள் முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.