பிறப்பை விட இறப்பு அதிகரிப்பு – தென்கொரியாவில் புதிய திட்டம் அறிவிப்பு

இந்தியா, சீனா போன்ற நாடுகளில் மக்கள் தொகை அடர்த்தியும், பெருக்கமும் பிரச்சனையாக உள்ள நிலையில், இன்னொரு ஆசிய நாடான தென் கொரியா தனது குடிமக்கள் ஒவ்வொரு குழந்தை பெற்றுக் கொள்வதற்கும்  ஊக்கத் தொகை வழங்கவுள்ளதாக அறிவித்துள்ளது.

இந்த சலுகையை   2022ம் ஆண்டு முதல் தென் கொரியா வழங்கவுள்ளது.

கடந்த 2020-ம் ஆண்டில், தென் கொரியாவில் பிறந்தவர்கள் எண்ணிக்கையை விட இறந்தவர்கள் எண்ணிக்கை அதிகமாகப் பதிவாகியிருக்கிறது. இப்படி பிறந்தவர்கள் எண்ணிக்கை குறைவாக இருப்பது இதுவே அங்கு முதல் முறை.

ஏற்கனவே தென் கொரியாவில் பிறப்பு விகிதம் குறைவாக இருக்கும் நிலையில், இந்த செய்தி அவர்களுக்கு மேலும் அதிர்ச்சியைத் தந்துள்ளது.

மேலும் கடந்த ஆண்டு தென்கொரியாவில் மொத்தம் 2,75,800 குழந்தைகள் பிறந்திருக்கிறார்கள். சுமார் 3,07,764 பேர் இறந்திருக்கிறார்கள்.

அது மட்டுமில்லாமல், இந்தப் பிறப்பு எண்ணிக்கை, 2019-ம் ஆண்டை விட 10 சதவீதம் குறைவு. தென் கொரிய உள்துறை அமைச்சகம், தங்கள் அடிப்படைக் கொள்கையில் மாற்றங்களைக் கொண்டு வருவதற்கான நெருக்கடியை இந்தப் புள்ளிவிவரங்கள் ஏற்படுத்தியுள்ளன.

அத்தோடு தென் கொரியாவில் இளைஞர்கள் எண்ணிக்கையும் குறைந்து வருகிறது. இது தொழிலாளர் பற்றாக்குறையை உருவாக்குவதாகவும் இது தென் கொரியாவின் பொருளாதாரத்தில் நேரடிப் பாதிப்பையும் ஏற்படுத்துகிறது என்றும் கூறப்படுகின்றது.

பிறப்பு விகிதத்தை அதிகரிக்கும் நோக்கில் கடந்த மாதம் சில கொள்கைத் திட்டங்களை அறிவித்தார் தென் கொரிய அதிபர் மூன் ஜே இன். அதில் குடும்பங்களுக்கான பண ஊக்கத் தொகையும் ஒன்று.

இந்த திட்டத்தின் கீழ், 2022-ம் ஆண்டில் இருந்து பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் இரண்டு மில்லியன் வொன் (தென் கொரிய பணத்தின் பெயர் வொன்) வழங்கப்படும். இது போக குழந்தை பிறந்து ஒரு வயது ஆகும் வரை மாதாமாதம் 3 லட்சம் வொன் வழங்கப்படும்.

2025-ம் ஆண்டில் மாதாமாதம் வழங்கப்படும் உதவித் தொகையை, 5,00,000 வொன்னாக அதிகரிக்க இருக்கிறது தென் கொரிய அரசு.

நன்றி பிபிசி