தேர்தல் தோல்வியை ஏற்றுக்கொள்ள டிறம்ப் ஆதரவாளர்கள் மறுப்பு – அமெரிக்காவில் கலவரம்

நடந்து முடிந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பைடன் அவர்கள் வெற்றிபெற்றதை ஏற்றுக்கொள்ள அமெரிக்காவின் தற்போதைய அதிபர் டொனால்ட் டிறம் அவர்களும், அவர்களின் ஆதாரவாளர்களும் தொடர்ந்து மறுத்துவரும் நிலையில் நேற்று (6) அங்கு கலவரம் வெடித்துள்ளது.

ஜோ பைடனின் வெற்றியை உறுதிசெய்யும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கூட்டம் இடம்பெற்ற கப்பிற்றல் கில் என்ற வளாகத்தை டிறம்பின் ஆதரவாளர்கள் முற்றுகையிட்டதால் அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டிருற்தது.

முற்றுகையாளர்கள் அதிகளவில் ஒன்று கூடி கட்டிடத்தின் ஜன்னல்கள் மற்றும் ஏனைய தளபாடங்களை தாக்குதல் நடத்தி சேதப்படுத்தியதுடன் எல்லா வழிகளையும் மூடியிருந்தனர். அங்கு காவல்துறையினர் அதிகளவில் குவிக்கப்பட்டபோதும், முற்றுகையாளர்கள் கலைந்து செல்ல மறுத்துள்ளதுடன், அதில் ஏற்பட்ட கலவரங்களில் இதுவரையில் 4 பேர் உயிரிழந்துள்ளனர்.

capitol hill2 தேர்தல் தோல்வியை ஏற்றுக்கொள்ள டிறம்ப் ஆதரவாளர்கள் மறுப்பு - அமெரிக்காவில் கலவரம்வொசிங்டன் வளாகத்தில் தற்போது ஊரடங்கு சட்டம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதுடன், அதிகளவு கவல்துறையினரும் குவிக்கப்பட்டுள்ளனர். இதுவரையில் 52 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதனிடையே, இந்த முற்றுகைக்கு ஆதரவாகவும், நடந்துமுடிந்த தேர்தல் முறைகேடானது எனவும் தனது சமூகவலைத்தளங்களில் தொடர்ந்து செய்திகளை வெளியிட்டுவரும் டிறம் அவர்களின் ருவிட்டர் மற்றும் முகநூல் கணக்குகளை அந்த நிறுவனங்கள் தற்காலிகமாக முடக்கியுள்ளன.

அமெரிக்காவில் இடம்பெறும் இந்த சம்பவங்கள் தொடர்பில் உலகத்தலைவர்கள் தமது கவலைகளையும், கண்டனங்களையும் தெரிவித்துவருகின்றனர்.