பிரேரணையை தோற்கடிக்க நட்பு நாடுகளுடன் பேச்சு – அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல

ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளரினால் வெளியிடப்பட்ட அறிக்கை அரசியல் கலந்த பக்கச்சார்பானதாகவுள்ளதாகவும், பேரவையில் இலங்கைக்கு எதிராக முன்வைக்கப்படுகின்ற தீர்மானத்தைத் தோற்கடிப்பதற்காக நட்பு நாடுகளுடன் அரசாங்கம் பேச்சுவார்த்தை நடத்திவருவதாகவும் ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

கண்டி – குண்டசாலையில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்வு ஒன்றின் போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

அவர் அங்கு மேலும் தெரிவித்தவை வருமாறு:

“ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் அறிக்கை மற்றும் அதன் ஆணையாளரின் அறிக்கை முற்றுமுழுதாக பக்கச்சார்பானதாகும். அதுகுறித்து எந்த தர்க்கமும் இல்லை. பிரித்தானியாவின் என்டன் டேஸ், ஸ்மித், லோர்ட் நெஸ்லி போன்றவர்கள் உள்துறை அமைச்சுடன் 5 மாதங்களாக பேச்சு வார்த்தை நடத்தி உண்மையான தகவல்ளை பெற்றுக் கொண்டுள்ளதை இதற்கு சிறந்த உதாரணங்களாகும் என சுட்டிக்காட்டுகின்றேன்.

திட்டமிடப்பட்ட வகையில் நாங்கள் நகர்ந்து வருகிறோம். சிறுவர் போராளி என்று தமிழ் மக்கள் மீது திணிக்கப்பட்ட அழுத்தம் மற்றும் விடுதலைப் புலிகள் சிறுவர்களை அழைத்துச் சென்று அவர்களின் கழுத்தில் சயனைட் குப்பிகளை அணிவித்து, புத்தகங்களுக்குப் பதிலாக துப்பாக்கிகளைக் கொடுத்து மிகவும் துரதிஷ்ட நிலைக்குத் தள்ளிவிட்டிருந்தார்கள்.

அதுகுறித்து மனித உரிமைகள் ஆணையாளரோ எவரும் ஒரு வார்த்தையேனும் தெரிவிக்கவிவில்லை. அவர்கள் தனிப்பட்ட அரசியலையே செய்கின்றார்கள். அதனை எதிர்கொள்ள நாங்கள் தயாராகவே இருக்கின்றோம். இந்தப் போலி விம்பத்தை உடைப்பதற்காக நட்பு நாடுகளுடன் நாங்கள் பேச்சு நடத்திவருகின்றோம்” என்றும் அவர் தெரிவித்தார்.