முகத்தை மறைக்கும் ஆடைகளுக்கு தடை! சட்டமூலம் விரைவில் – அமைச்சர் அலிசப்ரி

புர்கா உள்ளிட்ட முகத்தை மறைக்கும் ஆடைகளை பொது இடங்களில் அணிவதற்கு தடைவித்திக்கும் வகையில் சட்டமொன்று கொண்டுவரப்படும் என நீதி அமைச்சர் அலிசப்ரி தெரிவித்தார்.

நீதி அமைச்சில் நேற்று வியாழக்கிழமை இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் கூறியதாவது:

முஸ்லிம் சட்டத்தில் கொண்டுவரப்படவேண்டிய மாற்றங்கள் தொடர்பிலான நடவடிக்கைகளை நாம் மேற்கொண்டுள்ளோம். அந்த வகையில் பொது இடங்களில் முகத்தை மறைக்கும் வகையிலான ஆடைகளை அணியக்கூடாது என்பது தேசியபாதுகாப்புடன் தொடர்புடைய விடயமாகும். இது ஒரு சமூகத்தை இலக்கு வைத்து முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள் அல்ல. மாறாக நாட்டினுடைய பாதுகாப்பை மையமாக கொண்ட விடயமாகும்.

ஏனெனில் இஸ்லாமிய பெண்கள் புர்கா எனப்படும் முகத்தை மறைக்கும் ஆடையை அணிவர். ஆகவே, இது தொடர்பிலும் அமைச்சரவைக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த விடயத்தில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகைள் முன்னெடுக்கப்படுகின்றன. இது பாரிய அளவிலான செயற்திட்டமொன்றாகும். ஆகவே நாம் இந்த விடயங்களை உரிய முறையில் முன்னெடுத்து செல்கின்றோம். அனைவரையும் ஒன்றிணைத்துக்கொண்டு முன்னோக்கி பயணிப்பதே எம்முடைய நோக்கமாகும். ஆகவே, நாம் அதற்கான நடவடிக்கைளை மேற்கொண்டுவருகின்றோம்.”