பிரித்தானிய தொழிற்கட்சிக்கு எதிராக சிங்களவர் ஆர்ப்பாட்டம்

பிரித்தானியாவில் எதிர்வரும் 12ஆம் திகதி தேர்தல் நடைபெறவுள்ள அதேவேளை, பிரித்தானிய தொழிற் கட்சியின் தேர்தல் அறிக்கையை எதிர்த்து அங்கு வசிக்கும் சிங்களவர்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டுள்ளனர்.

பிரித்தானிய எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சி நிழல் அமைச்சரவையில் நிதியமைச்சராக உள்ள ஜோன் மெக்டொனால்ட், இலங்கை தொடர்பாக வெளியிட்ட அறிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்தே இந்த ஆர்ப்பாட்டம் கடந்த ஞாயிற்றுக் கிழமை இடம்பெற்றது.

அத்துடன் எசெக்ஸ் கவுண்டி ஐல்போர்ட் வடக்குத் தொகுதியில் தொழிலாளர் கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் வெஸ்லி ஸ்ட்ரைன் வெளியிட்ட அறிக்கைக்கும் சிங்களவர்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர்.

தொழிலாளர் கட்சியின் தேர்தல் அறிக்கையில், ஜோன் மெக்டொனால்ட், தான் ஆட்சிக்கு வந்தால் இலங்கையில் நடந்த போர்க் குற்றங்கள், தமிழ் மக்களின் இனப்படுகொலை, தமிழ் மக்களை சித்திரவதை செய்வது, சமூக அநீதி மற்றும் மனித உரிமை மீறல் ஆகியவை அனைத்தையும் விசாரிப்பதாக உறுதியளித்துள்ளார்.

அவரின் அறிக்கையில், இலங்கையுடனான முதலீடுகள் அநீதி மற்றும் மனித உரிமை மீறல்களை எதிர்கொள்வதில் இலங்கையில் உள்ள தமிழர்களுக்கு அதிக கவனம் செலுத்தப்படும் என்றும் கூறியுள்ளார்.

தமிழருக்கு உதவி செய்வதாக உறுதியளித்ததை எதிர்த்தே சிங்களவர்கள் பிரித்தானியாவில் இந்த ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Attachments area