தனது பதவியில் தொடரவிருக்கும் செல்வம் அடைக்கலநாதன்.!

கோத்தபயாவினால் நியமிக்கப்பட்ட புதிய இடைக்கால அமைச்சரவையில், செல்வம் அடைக்கலநாதன் நாடாளுமன்றக் குழுக்களின் தலைவராக தொடர்ந்தும் செயற்படுவார் என்று தெரிவிக்ககப்படுகின்றது.

புதிய ஜனாதிபதியாக கோத்தபயா ராஜபக்ஸ பதவியேற்றதைத் தொடர்ந்து, இடைக்கால அமைச்சரவை ஒன்று தற்போது பதவியேற்றுள்ளது. இந்த இடைக்கால அமைச்சரவையில் பெரும்பாலும் தனக்கு சாதகமானவர்களுக்கே பதவிகளை கோத்தபயா வழங்கியிருந்தார். ஏனையோரின் பதவிகள் அனைத்தும் பறிபோயிருந்தன.

இதேவேளை செல்வம் அடைக்கலநாதன் இடைக்கால அமைச்சரவை முடிவுறும் வரை தனது பதவியில் தொடர்ந்தும் செயற்படவுள்ளார் என நாடாளுமன்றத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

செல்வம் அடைக்கலநாதன், ஜனாதிபதி தேர்தல் காலத்தில் சஜித் பிரேமதாசாவிற்கு தனது ஆதரவை தெரிவித்ததுடன், கோத்தபயா ராஜபக்ஸவை கடுமையாக விமர்சித்தும் வந்துள்ளார்.

இவரின் இந்த பதவி தொடர்பாக இவரின் ரெலோ அமைப்பைச் சார்ந்தவர்கள் கடும் விமர்சனம் தெரிவித்துள்ளனர்.

பாராளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் கூறுகையில், தமிழ் மக்களை ஏமாற்றி சுயநல அரசியலில் செல்வம் அடைக்கலநாதன் ஈடுபடுவதாகக் கூறினார், மேலும் சிறிகாந்தா அரசியல் சந்தர்ப்பவாதத்திற்காக பிழைப்புவாத அரசியல் செய்வதாக கூறியுள்ளார்.

இவரின் தேர்தல்கால பிரச்சாரங்களாக கூறியவையை பொதுமக்கள் தற்போது நினைவுகூருகின்றனர். காணாமல் போன உறவுகளின் போராட்டம், சிறைக்கைதிகள் விடுதலை செய்யப்படா விட்டால், பதவி விலகுவேன் எனக் கூறிய செல்வம், இன்று தனது பதவி ஆசைக்காக தமிழ் மக்களின் எதிரியான கோத்தபயா ராஜபக்ஸவுடன் கூட்டுச் சேர்வதாக விசனம் தெரிவித்துள்ளனர்.