பிரிட்டன் நாடாளுமன்ற முடக்கம் சட்டவிரேதம்” – உச்சநீதிமன்றம் தீர்ப்பு

பிரிட்டன் நாடாளுமன்றத்தை முடக்கி வகைகும் பிரதமர் போரிஸ் ஜான்சனின் தீர்மானம் சட்டவிரோதமானது என்று அந்நாட்டு உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

போரிஸ் ஜான்சனின் புதிய கொள்கைகளை அறிவிப்பதாக அரசியின் உரை இருக்கும் என்பதால், பிரிட்டன் நாடாளுமன்றத்தை 5 வாரங்கள் ஒத்தி வைப்பதாக இந்த மாத தொடக்கத்தில் போரிஸ் ஜான்சன் அறிவித்திருந்தார்.

“ஆனால், அக்டோபர் 31ம் தேதி ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் வெளியேறும் காலக்கெடு இருக்கையில், நாடாளுமன்றத்தை அதனுடைய கடமைகளை செய்யவிடாமல் தடுப்பது தவறு” என்று நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது.

இந்த தீர்ப்பு குறித்து ஆராய்ந்து வருவதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

“நாடாளுமன்ற முடக்கத்தால் நமது ஜனநாயகத்தின் அடிப்படைகளில் ஏற்படும் பாதிப்பு மிகவும் தீவிரமாக இருக்கும்” என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி லேடி ஹலே தனது தீர்ப்பில் தெரிவித்திருக்கிறார்.

“சரியான காரணமின்றி பிரிட்டன் நாடாளுமன்றம் ஆற்ற வேண்டிய அரசமைப்பு கடமைகளை நிறைவேற்றுவதை தடுக்கிற அல்லது திறனைத் தடுக்கிற பாதிப்பு இதனால் ஏற்படும் என்பதால் நாடாளுமன்றத்தை ஒத்தி வைத்திருப்பது சட்ட விரேதமானது” என்று அவர் இந்த தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.

11 நீதிபதிகளின் ஒருமித்த கருத்தாக போரிஸ் ஜான்சனின் இந்த முடிவு செல்லாது என்று அறிவித்த லேடி ஹலே, அடுத்து செய்ய வேண்டியதை முடிவு செய்யும் பொறுப்பு பிரிட்டன் நாடாளுமன்ற அவைகளின் சபாநாயகர்களிடம் உள்ளது என்று கூறியுள்ளார்.

இந்த தீர்ப்பை வரவேற்றுள்ள நாடாளுமன்ற கீழவையின் சபாநாயகர், நாடாளுமன்றத்தை உடனடியாக கூட்ட வேண்டுமென்றும், இது பற்றி அவசரமாக கட்சி தலைவர்களிடம் கலந்துரையாடப் போவதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்த தீர்ப்பு பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு பெரிய பின்னடைவாக இருக்கும் என்று பிபிசி பிரிட்டன் விவகார செய்தியாளர் டோமினிக் சாவியானி கூறியுள்ளார்.