பிரிட்டன் – ஐரோப்பிய ஒன்றியத்திற்கு இடையே புதிய பிரெக்ஸிட் ஒப்பந்தம்

பிரிட்டன் மற்றும் ஐரேப்பிய ஒன்றியத்திற்கு இடையில் ஒரு புதிய பிரெக்ஸிட் ஒப்பந்தம் ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளது.

இது தொடர்பாக ட்வீட் செய்துள்ள பிரிட்டன் பிரதமர் பொரிஸ் ஜோன்சன், “நம்மிடம் மீண்டும் கட்டுப்பாடு வரும் வகையில் ஒரு புதிய ஒப்பந்தம் கிடைத்துள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 1973ஆம் ஆண்டு முதல் ஐரோப்பாவில் உள்ள 28 நாடுகளின் கூட்டமைப்பில் இங்கிலாந்தும் உறுப்பினராக உள்ளது. இந்தக் கூட்டமைப்பு ஐரோப்பா கண்டம் என்பது ஒரே நாடு என்னும் நிலைப்பாட்டுடன் இயங்கி வருகின்றது.

இதன் காரணமாக கூட்டமைப்பிலிருந்து விலக கடந்த சில ஆண்டுகளுக்கு முன் இங்கிலாந்து முடிவு செய்தது. ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்ததால், பிரிட்டன் தனது தனித்துவம் மற்றும் இறையாண்மையை இழந்து விட்டதாக ஒரு தரப்பினர் குற்றம் சாட்டி வந்தனர்.

இதன் காரணமாக பிரெக்சிட் மசோதா தாக்கல் செய்து பாராளுமன்ற ஒப்புதலை பெற பலமுறை வாக்கெடுப்பு நடந்தது. அப்போதைய பிரதமர் தெரசா மே அரசு அதில் தோல்வியடைந்த நிலையில் பிரதமர் தெரசா மே தனது பதவியை இராஜினாமா செய்தார். அதைத் தொடர்ந்து, முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்த பொரிஸ் ஜோன்சன் பிரதமராக தேர்வு செய்யப்பட்டார்.

பொரிஸ் ஜோன்சன் பதவியேற்ற சில மாதங்களில், பிரெக்சிட்டை நிறைவேற்ற வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. ஆனால், பிரெக்சிட் உடன்பாட்டிற்கு எதிர்ப்புத் தெரிவித்து பொரிஸ் ஜோன்சனின் கட்சியைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் போர்க்கொடி தூக்கி, தங்களது பதவியில் இருந்து விலகினர். இதனால் பொரிஸ் ஜோன்சனுக்கு மேலும் நெருக்கடி ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து, ஐரோப்பிய ஒன்றியத்துடன் பேச்சுவார்த்தை நடத்த முன்வந்தார்.

அதையடுத்து, பெல்ஜியம் தலைநகர் பிரசெல்ஸில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் உடன்பாடு ஏற்பட்டுள்ளதாகவும், ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் இங்கிலாந்திற்கும் இடையே பிரெக்சிட் ஒப்பந்தம் எட்டப்பட்டு விட்டது என்று பொரிஸ் ஜோன்சன் தெரிவித்துள்ளார்.

இந்த ஒப்பந்தத்திற்கான சட்ட ஆவணங்கள் தயாரிக்கும் பணியை இரு தரப்பும் செய்து வருகின்றது. எனினும் பிரிட்டன் மற்றும் ஐரோப்பிய நாடாளுமன்றங்களின் ஒப்புதல் இதற்கு வேண்டும்.

பிரதான எதிர்க்கட்சியான தொழிற்கட்சியின் தலைவர் ஜெரிமி கோர்பின் இது தொடர்பாக கூறுகையில், முன்னாள் பிரதமர் தெரீசா மே கலந்து பேசி முடிவெடுத்த ஒப்பந்தத்தைவிட இது மிகவும் மோசமானது என்று தெரிவித்தார். இதனை எம்பிக்கள் புறக்கணிக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

இது வெற்றி பெறுமா என்பது சந்தேகம் தான் என்று கூறும் ஐக்கிய ஜனநாயக கட்சி, இதற்கு ஆதரவளிக்க முடியாது என்று கூறுகின்றது.

ஆனால், இது நியாயமான மற்றும் இருதரப்பிற்கும் சமமான ஒப்பந்தம் என்று ஐரோப்பிய ஆணையத்தின் தலைவரான ஜீன் கிளாட் ஜங்கர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த ஒப்பந்தத்தை பரிந்துரை செய்து அவர், ஐரோப்பிய சபைத் தலைவர் டொனால்ட் டஸ்கிற்கு எழுதிய கடிதத்தில், “பிரிட்டனுடன் ஐரோப்பிய ஒன்றியத்தின் எதிர்கால உறவு குறித்த பேச்சுவார்த்தை தொடங்க வேண்டிய தருணம் வந்து விட்டது” என்று கூறியுள்ளார்.

ஜீன் கிளாட் மற்றும் பிரிட்டன் பிரதமர் ஜான்சன் இருவருமே இந்த ஒப்பந்தத்திற்கு ஆதரவளிக்கும்படி பிரிட்டன் நாடாளுமன்ற உறுப்பினர்களை வலியுறுத்தியுள்ளார்.