பிரிக்ஸ் மாநாட்டில் மோடி பங்கேற்பு!

5 நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கும் பிரிக்ஸ் மாநாடு நாளை காணொலி காட்சி மூலம் நடைபெறுகிறது.

இந்த பிரிக்ஸ் கூட்டமைப்பின் மாநாட்டில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி  கலந்துகொள்ளவுள்ளார்.

இந்திய சீன எல்லையில் கடந்த மாதம் மே மாதம் முதல் பல  மோதல்கள் ஏற்பட்டுள்ள நிலையில், இந்திய பிரதமரும், சீன பிரதமரும் ஒரே கூட்டத்தில் இணைய உள்ளமை குறிப்பிடத்தக்கது.

பிரிக்ஸ் எனப்படும் பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென் ஆப்ரிக்கா உள்ளிட்ட நாடுகள் அங்கம் வகிக்கும் கூட்டமைப்பின் 12வது மாநாடு இன்று  நடைபெறவுள்ளது.

ரஷ்யா தலைமை வகிக்கும் இந்த மாநாட்டில் பிரதமர் மோடி, சீன அதிபர் ஷீ ஜிங்பிங், பிரேசில் அதிபர் ஜெயர் பொல்சொனாரோ, ரஷ்ய அதிபர் புடின், தென் ஆப்ரிக்க அதிபர் சிரில் ரமபோசா உள்ளிட்டோர் பங்கேற்கவுள்ளனர்.

இதுகுறித்து இந்திய மத்திய வெளியுறவுத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், “ ரஷ்ய அதிபர் புடின் விடுத்த அழைப்பின்படி ‘உலக ஸ்திரத்தன்மை, பாதுகாப்பு மற்றும் புதுமையான வளர்ச்சி’ என்ற தலைப்பில் நடக்க இருக்கும் 12வது பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளார்.

இந்த மாநாட்டில் பிரிக்ஸ் நாடுகளுக்கு இடையிலான ஒத்துழைப்பு குறித்து தலைவர்கள் ஆலோசனை மேற்கொள்வர். கொரோனா வைரசை ஏதிர்கொள்ள எடுக்கப்பட்டுவரும் நடவடிக்கைகள், பயங்கரவாத ஒழிப்பு, வர்த்தகம்,  சுகாதாரம், ஆற்றல் உள்ளிட்ட துறைகளில் ஒத்துழைப்பு நல்குவது குறித்தும் ஆலோசனை மேற்கொள்ளப்பட உள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2019-ம் ஆண்டு பிரிக்ஸ் அமைப்பின் 11-வது மாநாடு பிரேசில் நாட்டில் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.