பாரபட்சம் – துரைசாமி நடராஜா

மலையகம் தற்போது கல்வித்துறையில் மேலெழும்பி வருகின்றமை பாராட்டத்தக்க விடயமாக உள்ளது.அண்மையில் வெளியான தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை மற்றும் க.பொ.த.சாதாரணதர பரீட்சை பெறுபேறுகள் உட்பட கடந்தகால பெறுபேறுகள் பலவும் இதனை உறுதிப்படுத்துவதாக உள்ளன.இதனிடையே மலையகத்தில் துறைசார்ந்த ஆசிரியர் பற்றாக்குறை நிலவுவதாகவும் அதிலும் கணிதம், விஞ்ஞானம் ஆகிய பாடங்களை கற்பிக்கக்கூடிய ஆசிரியர்களின் பற்றாக்குறை அதிகமாக நிலவுவதாகவும் கருத்து வெளிப்பாடுகள் இருந்து வருகின்றன.

அண்மையில் இது தொடர்பில் பாராளுமன்றத்திலும் வாத பிரதிவாதங்கள் இடம்பெற்றன.இதேவேளை வெளிமாவட்டங்களைச் சேர்ந்த எந்த மாணவர்களையும் நுவரெலியா மாவட்ட பாடசாலைகளில் உள்வாங்க முடியாது என்ற தீர்மானமும் மலையகத்தில் கணித, விஞ்ஞான ஆசிரியர் பற்றாக்குறையில் கணிசமான செல்வாக்கு செலுத்துவதாகவும் பாராளுமன்றத்தில் கருத்துக்கள் எதிரொலித்தன.இந்நிலையில் மலையக பாடசாலைகளில் துறைசார் ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்திசெய்து மலையகத்தின் கல்வி அபிவிருத்திக்கு மேலும் வலுசேர்க்க வேண்டிய தேவை காணப்படுகின்றது.

malaya3 பாரபட்சம் - துரைசாமி நடராஜா ‘மனிதன் ஒரு சமூக விலங்கு.விலங்கு மனத்தின் வலிசான்றை மனிதனிடம் காணலாம்.அதன் ஆதிக்கத்திலிருந்து மனித மனத்தை விடுவிப்பதே கல்வியின் பணி. அதாவது கல்வி என்பது மனிதனின் விலங்கியல் இயல்பூக்கத்தை மாற்றியமைப்பதாகும்.மனிதம் மறுக்கப்பட்டு, மனிதனால் உருவாக்கப்படும் பொருட்கள் இன்று முக்கியத்துவம் பெற்று வருகின்றன.

எதிர்கால மனித செயற்பாடுகள் யாவும் பெருமளவில் இயந்திரங்களையே சார்ந்ததாகிவிடும்.இதனால் மனிதம்சார் பண்புகள் மேலும் சரியத் தொடங்கும்.இவற்றையெல்லாம் நாம் சந்திக்காமல் இருக்க வேண்டுமானால் கல்வி தனது கடமையை அவசரமாக நிறைவேற்ற தன்னைத் தயார் படுத்திக்கொள்ள வேண்டும்’ என்பது புத்திஜீவிகளின் கருத்தாக உள்ளது. கல்வியானது கலாசாரத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்ட பயனுள்ள விடயங்களை சமூகத்திற்கு பெற்றுக் கொடுக்கின்றது.மனிதரிடையே மறைந்து கிடக்கும் திறமைகளை வெளிக்கொணர்கின்றது.

இவற்றோடு மனிதநேய உணர்வுகளை  ஒவ்வொரு மனித மனங்களிலும் உருவாக்குவதில் கல்வியின் பணி மகத்தானது என்பதே உண்மையாகும். தனி மனித, சமூக, குடும்ப, நாட்டின் அபிவிருத்திக்கும் கல்வியின் வகிபாகம் மிகவும் இன்றியமையாததாகும்.

பகீரதப் பிரயத்தனம்

இத்தகைய சிறப்பு பெற்ற கல்வி சிலருக்கு எட்டாக்கனியாக இருப்பது மிகவும் வருந்தத்தக்க ஒரு விடயமாக உள்ளது.பின்தங்கிய சமூகங்கள் பலவற்றின் கல்வி வாய்ப்புக்கள் தொடர்ச்சியாகவே மறுக்கப்பட்டு வந்த வரலாறுகளுமுள்ளன.இதனால் அச்சமூகம் ஏனைய சமூகங்களை எட்டிப்பிடிப்பதற்கு பகீரதப் பிரயத்தனத்தை மேற்கொள்ள வேண்டியுள்ளது.இதேவேளை கல்வி அபிவிருத்தி பின்னடைவு நிலையானது பின்தங்கிய சமூகத்திற்கும் ஏனைய சமூகத்திற்கும் இடையிலான விரிசலினை விரிவடையச் செய்கின்றது.இது தேசிய நீரோட்டக் கனவை கேள்விக்குறியாக்குவதோடு ஏனைய பல பாதக விளைவுகள் ஏற்படுவதற்கும் உந்துசக்தியாக அமைந்து விடுகின்றது.

இந்த வகையில் மலையக கல்வி நிலை தொடர்பில் நாம் நோக்குகையில், பெருந்தோட்டப் பகுதி மக்கள் கல்வி கற்றுவிக்கூடாது என்பதில் தோட்ட நிர்வாகங்களும், ஆட்சியாளர்களும் மிகவும் கவனமாக இருந்தனர்.’ தமது சொந்த நாட்டிலேயே மிகவும் இழிவான நிலையில் பிறந்து வளர்ந்த தமிழ்க் கூலிக்கு எதனையும் விளங்கிக் கொள்ளக்கூடிய உள ஆற்றல் இல்லை.எனவே அவனை மிஷனரிமாருக்கு பயனுள்ள வகையில் உருவாக்கிக் கொள்ள ஏதுவாக கொஞ்சம் சொல்லித்தந்தால் அதுவே போதுமானது.இந்த அடிப்படையில்தான் தோட்டப் பாடசாலைகள் முக்கியமானவை.எனினும் கொஞ்சம் கூடக்குறைய கல்வியை இவர்களுக்கு வழங்கிவிட்டால் அது இவர்களை தோட்டத் தொழிலுக்கு மட்டுமல்ல வேறு எதற்குமே லாயக்கற்றவர்களாககி விடும்.கல்வி என்பது அவர்களுக்கு பரிச்சயமில்லாத ஆடம்ப்பொருள்” என்ற வகையிலான கருத்துக்களே பெருந்தோட்ட மக்களின் கல்வி தொடர்பாக முன்வைக்கப்பட்டன.

malaya5 பாரபட்சம் - துரைசாமி நடராஜா1869 இல் கல்விப் பணிப்பாளராக பதவியேற்ற ஜே.எஸ்.லூரி தனது விசேட அறிக்கையில் இங்கிலாந்தில் தொழிற்சாலை தொழிலாளரின் கல்வியில், தொழிற்சாலை உரிமையாளர்கள் கொண்டிருக்கும் கடப்பாட்டினைப் போன்று தோட்ட நிர்வாகமும் தோட்டத் தொழிலாளரின் கல்வியில் கடப்பாட்டினைக் கொண்டிருக்க வேண்டுமென விதிக்க வேண்டுமென்று விதந்துரை செய்ததனை பல தோட்ட நிர்வாகிகள் ஏற்றுக் கொண்டனர்.ஆனால் காலனித்துவ அரசாங்கம் இதைப்பற்றி ஒன்றும் அலட்டிக் கொள்ளவில்லை.எனினும் யாரேனும் தோட்டங்களில் கல்வி வழங்க முன்வந்தால் அவர்களுக்கு நன்கொடை வழங்குவதற்கு சம்மதித்ததாக பேராசிரியர் தை.தனராஜ் தனது நூலொன்றில் சுட்டிக்காட்டுகின்றார்.

இதேவேளை 1940 இல் அரசாங்க சபையில் கல்வியமைச்சராக இருந்த சி.டபிள்யூ.டபிள்யூ.கன்னங்கராவின் தலைமையின் கீழ் நியமிக்கப்பட்ட கல்வி மீதான விசேட ஆணைக்குழு 1943 இல் தனது அறிக்கையை சமர்ப்பித்திருந்தது.இலங்கையின் கல்வி விரிவாக்கத்திற்கு இவ்வறிக்கையானது கணிசமான செல்வாக்கு செலுத்தியதாக கூறப்பட்டபோதும், தோட்டப் பாடசாலைகள் பற்றியோ தோட்டத் தொழிலாளர்களின் கல்வி நிலை பற்றியோ இந்த அறிக்கையில் எதுவும் குறிப்பிடப்படவில்லை.இது ஒரு வருந்தத்தக்க விடயமாகும்.

உலக வங்கியின் மதிப்பீடு

1988 ஆம் ஆண்டு தகவலொன்றின்படி தோட்டங்களில் வாழ்ந்த தமிழ் தொழிலாளர்களில் 40 சதவீதமானோருக்கு எழுதவோ, வாசிக்கவோ தெரியாதிருந்தனர்.எஞ்சியதில் 43 வீதமானோர் ஐந்தாம் வகுப்புடனோ அல்லது அதற்கும் குறைந்த வகுப்பு கல்வியுடனோ படிப்பை நிறுத்திக் கொண்டனர்.சுமார் 15 வீதமானோரே 10 ம் வகுப்பு அல்லது 12 ம் வகுப்பு வரை கல்வியைத் தொடர்ந்தனர்.பல்கலைக்கழகத்திற்கும் உயர் கல்விக்கும் ஒரு சதவீதமானோர் கூட செல்லவில்லை.இத்தகைய கீழ்நிலைக் கல்வி நிலையானது தொழில் வாய்ப்புக்களைப் பெறுவதிலும் தாக்கம் செலுத்தி இருந்தது.1988 இல் இலங்கையின் பல்கலைக்கழகங்களில் சுமார் 30 ஆயிரம் மாணவர்கள் உயர் கல்விக்காக தம்மை பதிவு செய்திருந்தனர்.ஆனால் இதில் தோட்டப் பகுதிகளையும், இந்திய சமூகத்தையும் சார்ந்தவர்களின் எண்ணிக்கை 200 க்கும் குறைவாகவே காணப்பட்டது.எனினும் பின்வந்த காலங்களில் மலையக கல்வியில் மாறுதல்கள் ஏற்பட்டன.

2007 ம் ஆண்டின் உலக வங்கி மதிப்பீடு மலையக கல்வி நிலைமைகளை தெளிவுபடுத்தியது.இதன்படி நாட்டின் எழுத்தறிவு வீதம் 92.5 ஆகவிருந்த நிலையில் பெருந்தோட்ட மக்களின் எழுத்தறிவு வீதம் 81.3 ஆகும்.இந்நிலையில் பெண்களின் எழுத்தறிவு வீதம் 74.7 ஆகும்.முதலாம் தரத்திற்கு சேரும் மாணவர்களில் 58 வீதமான பெருந்தோட்டப் பகுதி மாணவர்களே ஆரம்பக் கல்வியை கற்று முடித்தவர்கள்.க.பொ.த.சாதாரண தரத்தில் பயின்று க.பொ.த.உயர்தரத்திற்கு சென்றவர்களின் எண்ணிக்கையும் மிகவும் குறைவாகவேஇருந்தது.

2015 இன் யுனிசெப் அறிக்கையின்படி ஆரம்பநிலை கல்வி வயதெல்லையில் உள்ள பிள்ளைகளில் இரண்டு வீதமானவர்கள் பாடசாலைகளில் இல்லை.ஒன்பது மாகாணங்களில் இது 1.4 சதவீதமாக இருந்த நிலையில் பெருந்தோட்ட மாவட்ட பாடசாலைகளில் இவ்வீதம் மிகவும் உயர்ந்து 9 வீதமாகக் காணப்பட்டது.பெருந்தோட்டத் துறையிலுள்ள பாடசாலைகளிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் 10.5 வீதம் தொடக்கம் 25 வீத மாணவர்கள் இடைவிலகுவதாக 2010 ம் ஆண்டு டிரான்ஸ்பேரன்சி இண்டர்நேஷனல்  அமைப்பு மேற்கொண்ட ஆய்வின் மூலமாக தெரியவந்தது.

அறிவுப் பொருளாதார மேம்பாட்டிற்கு விஞ்ஞானக்கல்வி பிரதானமானதாகும்.என்றபோதும் விஞ்ஞானக் கல்வியைப் பெற்றுக் கொள்வதில் மலையக மாணவர்கள் இடர்படுகின்றனர்.மலையகத்தில் கணித, விஞ்ஞான ஆசிரியர்களுக்கு கடுமையான பற்றாக்குறை நிலவுகின்றது.இந்நிலையில் ஆசிரியர்களை இந்தியாவிலிருந்து வரவழைக்கும் முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டன.காலங்காலமாக கல்விநிலை பின்தங்கிக் காணப்பட்டமையால் விஞ்ஞானப் பட்டதாரிகளை உள்ளூரில் பெற்றுக்கொள்ள முடியாதுள்ளது.

மலையகத்தில் 1960 களின் பின்னரே சிறியளவில் க.பொ.த.உயர்தர (கலை) வகுப்புக்கள் ஆரம்பிக்கப்பட்டன.இந்நிலையில் நாடெங்கும் க.பொ.த.உயர்தர விஞ்ஞான வகுப்புகள் விரைவாக ஆரம்பிக்கப்பட்டன.இதனால் 1AB பாடசாலைகளின் தொகையும் நாட்டில் அதிகரித்தது.அதன் உடன் விளைவாக மலையகத்தில் 10 இலட்சம் மக்களுக்கு 21 ,1AB பாடசாலைகள் கிடைக்கப்பெற்றன என்று பேராசிரியர் சோ.சந்திரசேகரன் ஏற்கனவே (2018) வலியுறுத்தி இருந்தார்.

ஆரம்பக்கல்வி அபிவிருத்தி

மலையக பாடசாலைகள் பலவற்றில் துறைசார்ந்த ஆசிரியர் பற்றாக்குறை, பௌதீக வளப் பற்றாக்குறை போன்றன காணப்படுகின்றன.கஷ்ட மற்றும் அதிஷ்ட பிரதேச பாடசாலைகள் மலையகத்தில் அதிகமுள்ள நிலையில் இத்தகைய பாடசாலைகள் வேறுபட்ட சவால்கள் பலவற்றையும் எதிர்நோக்குகின்றன.

இப்பிரதேசங்களுக்கு செல்லும் பாதைகள் குண்டும் குழியுமாக காணப்படும் நிலையில் போக்குவரத்து சிரமங்களை ஆசிரியர்கள், மாணவர்கள், பயணிகள் உள்ளிட்ட பலரும் எதிர்நோக்குகின்றனர். குறிப்பிட்ட நேரத்திற்கு பாடசாலைக்கு செல்ல முடியாது ஆசிரியர்கள் சிக்கல்களுக்கு உள்ளாகின்றனர்.பயணிகள் பஸ் வண்டிகளும் பாதைச் சீர்கேட்டினால் பழுதடைவதன் காரணமாக அடிக்கடி தனது பணியை இடைநிறுத்திக் கொள்கின்றன.இவற்றுக்கு மத்தியிலும் ஆசிரியர்கள் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு மாணவர்களின் கல்வி அபிவிருத்திக்கு காத்திரமான பங்காற்றி வருகின்றனர்.

இதன் விளைவாக தரம் ஐந்து, க.பொ.த.சாதாரணதர மற்றும் உயர்தர பெறுபேறுகள் அதிகரித்து வருகின்றன.இதற்கேற்ப ஆரம்பக்கல்வியில் கணிசமான அபிவிருத்தியைக் மலையகத்தில் காண முடிகின்றது.எனினும் இடைநிலை மற்றும் உயர்கல்வித் துறையில் இன்னும் அதீத கவனம் செலுத்த வேண்டிய தேவையுள்ளது.பல்கலைக்கழகங்களுக்கு அனுமதிபெறும் மலையக மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படுதல் வேண்டும்.இவ்வாறு அனுமதி பெறுபவர்களில் அதிகமானோர் கணித, விஞ்ஞான பிரிவுகளில் உள்ளீர்க்கப்படுபவர்களாக இருத்தலும் அவசியம்.

மலையக பாடசாலைகளில் கணித மற்றும் விஞ்ஞான ஆசிரியர் பற்றாக்குறை அதிகமாக நிலவும் நிலையில் இது இத்துறையின் அபிவிருத்தியில் தாக்கம் செலுத்துவதாகவுள்ளது.இதனிடையே அண்மையில் பாராளுமன்றத்திலும் இது தொடர்பான கருத்துப் பரிமாறல்கள் இடம்பெற்றன.வெளிமாவட்டங்களைச் சேர்ந்த எந்த மாணவர்களையும் நுவரெலியா மாவட்ட பாடசாலைகளில் உள்வாங்க முடியாது என்ற தீர்மானம் கணித, விஞ்ஞான ஆசிரியர் பற்றாக்குறை மலையகத்தில் நிலவுவதற்கு ஒரு காரணமாகுமென்று இதன்போது முன்வைப்புக்கள் இடம்பெற்றிருந்தன.

வெளி மாவட்டங்களில் 9ஏ சித்திகளைப் பெற்ற மாணவர்களைக் கூட நுவரெலியா மாவட்டத்திலுள்ள சிறந்த கணித, விஞ்ஞான ஆசிரியர்களை உருவாக்கக்கூடிய  பாடசாலைகளுக்கு உள்வாங்க முடியாத ஒரு தன்மை அந்த தீர்மானத்தின் மூலம் ஏற்படுத்தப்பட்டதென்று கல்வி இராஜாங்க அமைச்சர் அ.அரவிந்தகுமார் கவலை தெரிவித்திருந்தார்.பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீமும் அரவிந்தருமாரின் உரையை  நியாயப்படுத்தி பேசி இருந்தமையும் குறிப்பிடத்தக்கதாகும்.திறமையான மாணவர்கள் வந்து நுவரெலியா மாவட்டத்தில் படிக்கின்ற அதேநேரம் அங்குள்ள மாணவர்களின் திறமையும் அதிகரிக்கும்.உண்மையில் இந்த தடையைச் செய்த காரணத்தால் நுவரெலியா மாவட்டத்தில் கூடுதலான மருத்துவபீட அனுமதி கிடைத்தது என்றால் அதனை வரவேற்கலாம்.ஆனால் அப்படி இல்லாமல் இந்த தடையால் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பதையே கல்வி இராஜாங்க அமைச்சர் சொல்ல வருவதாகவும் ரவூப் ஹக்கீம் குறிப்பிட்டிருந்தார்..

எவ்வாறெனினும் கணிதம் மற்றும் விஞ்ஞானம் போன்றன முக்கியத்துவம் மிக்க பாடங்களாக விளங்கும் நிலையில் மலையகத்தில் இப்பாடங்களின் அபிவிருத்திக்கு வலுசேர்க்க வேண்டும்.அத்துடன் எவ்வகையிலேனும் இப்பாடங்களுக்குரிய ஆசிரியர் பற்றாக்குறையை விரைவாக தீர்த்து வைப்பதும்  அவசியமாகும்.