பஹ்ரைன், ஐக்கிய அரபு அமீரகம் இஸ்ரேலுடன் மேற்கொண்ட ஒப்பந்தத்தை எதிர்த்து பாலஸ்தீனியர்கள் போராட்டம்

பஹ்ரைன் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகியன இஸ்ரேலுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து நூற்றுக்கணக்கான பாலஸ்தீனியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இது குறித்து சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கையில், “கையில் பாலஸ்தீன கொடியுடன் முகத்தில் கறுப்பு துணி அணிந்த நூற்றுக் கணக்கான பாலஸ்தீனர்கள் இஸ்ரேலுடன் பஹ்ரைன், ஐக்கிய அரபு அமீரக நாடுகள் மேற்கொண்ட ஒப்பந்தத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து காசாப் பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டதுடன், இந்த ஒப்பந்தம் ஒரு அவமானம் என்றும் குரல் எழுப்பினர் என செய்தி வெளியிட்டுள்ளன.

மத்திய கிழக்குப் பகுதியில் ஆபத்தை விளைவிக்கும் இஸ்ரேலுக்கும், ஐக்கிய அரபு அமீரகத்திற்கும் இடையே முழு வெளியுறவுத் தொடர்புகளை நிறுவுவதற்கான ஒப்பத்தம் ஒன்று சமீபத்தில் ஏற்படுத்தப்பட்டது. இதில் அமெரிக்கா மத்தியஸ்தராக இருந்தது.

பாலஸ்தீனத்திற்கு நாடு என்ற அந்தஸ்து வழங்கும் வரை இஸ்ரேலை அங்கீகரிக்கவோ, அதனுடன் பேச்சுவார்த்தை நடத்தவோ, சமாதான ஒப்பந்தம் செய்து கொள்ளவோ கூடாது என்ற முடிவில் மேற்கு ஆசிய நாடுகள் நீண்ட காலமாக இருந்து வந்தன. ஆனால் 1979இல் எகிப்துடனும், 1994இல் ஜோர்டானுடனும் இஸ்ரேல் தனது முழுமையான வெளியுறவுத் தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டது.

இப்போது பஹ்ரைன், ஐக்கிய அரபு அமீரகம் 2 நாடுகளுடன் செய்து கொண்ட ஒப்பந்தம் இஸ்ரேலின் வெளியுறவுக்குக் கிடைத்த வெற்றியாகப் பார்க்கப்படுகின்றது.