பண்டாரவளை பெருந்தோட்ட கிராமத்தில் தாக்குதல்

பண்டாரவளை பெருந்தோட்ட நெடுங் குடியிருப்பு தொகுதிக்குள் நுழைந்த கிராமிய இளைஞர்கள் பலர், தோட்ட இளைஞர்கள் மற்றும் மாணவர்கள், பெண்கள் ஆகியோர் மீது தாக்குதல்களை மேற்கொண்ட சம்பவம் நேற்றிரவு (29) இடம்பெற்றுள்ளது.

பண்டாரவளைப் பகுதியின் ஊவா ஹைலன்ட்ஸ் பெருந்தோட்ட எல்லவெல பிரிவிலேயே, இக்கொடூரம் இடம்பெற்றுள்ளது.

இத்தாக்குதலில் தோட்ட இளைஞர்கள், மாணவர்கள் என்ற வகையில் ஐவருக்கு காயங்கள் ஏற்பட்டு, அட்டாம்பிட்டிய கிராமிய அரச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் க.பொ.த. உயர்தரப் பெறுபேற்றினை எதிர்நோக்கியிருந்த மாணவன் ஒருவனும் அடங்கியுள்ளார்.

29-12-2019ல் நள்ளிரவில் எல்லவெல தோட்டப்பிரிவிற்குள் புகுந்த கிராமிய இளைஞர்கள் சிலர், தோட்ட மக்கள் மீது கடுமையாக நடந்து கொண்டு, இனவாதமிக்க வார்த்தைப் பிரயோகங்களையும் மேற்கொண்ட பின்னரே, அவர்கள் தோட்ட மக்கள் மீது தாக்குதல்களை நடாத்தினர்.

எதிர்பாராதவிதமாக இச் சம்பவம் இடம்பெற்றதினால், தோட்ட மக்கள் பெரும் பதற்றத்துடனும், பீதியுடனும் காணப்படுகின்றனர்.
இது குறித்து, தோட்ட மக்கள், பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்க பொதுச் செயலாளருமான வடிவேல் சுரேசிடம் தகவல்களை வழங்கினர்.

இதனையடுத்து, பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஸ் குறிப்பிட்ட தோட்டத்திற்கு விரைந்து, தோட்ட மக்களிடம் சம்பவம் குறித்த விடயங்களை அறிந்து, தோட்ட முகாமையாளர் மற்றும் பகுதி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியையும் குறிப்பிட்ட எல்லவெல தோட்டப் பிரிவிற்கு வரவழைத்து,

தோட்ட மக்களின் பாதுகாப்பினை உத்தரவாதப்படுத்தும்படியும், தாக்கியவர்களை தராதரம் பார்க்காமல் கைது செய்யும்படியும், பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியை கேட்டுக்கொண்டார்.

இதற்கமைய செயற்பட்ட பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி மூன்று இளைஞர்களைக் கைது செய்துள்ளனர். குறிப்பிட்ட எல்லவெல தோட்டப் பிரிவு மக்களுக்கும் பாதுகாப்பினை வழங்கும் பொருட்டு, கலகம் அடக்கும் பொலிசாரை ஈடுபடுத்தியுள்ளார்.

தாக்குதலில் காயமுற்ற மாணவனொருவன் உள்ளிட்ட ஐவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்