படகு மூலம் தஞ்சமடைய முயற்சித்த ஈராக்கியர்களை இந்தோனேசியாவிற்கே திருப்பியனுப்பிய அவுஸ்திரேலியா

அவுஸ்திரேலியாவில் தஞ்சம் கோரும் எண்ணத்தில் இந்தோனேசியாவிலிருந்து படகு வழியாக சென்ற 13 ஈராக் நாட்டவர்கள் மீண்டும் இந்தோனேசியாவுக்கே அவுஸ்திரேலிய அதிகாரிகளால் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். 

கடந்த மூன்றாண்டுகளாக இந்தோனேசியாவிலிருந்து எந்த அகதிகள் படகும் அவுஸ்திரேலியாவுக்கு செல்லாத நிலையில், தற்போது ஒரு படகினை அவுஸ்திரேலிய எல்லைபப்டை அதிகாரிகள் ஆஷ்மோர் தீவுகள் அருகே தடுத்து நிறுத்தியிருக்கின்றனர். அவுஸ்திரேலியாவின் பெருநிலப்பரப்பான Broome-க்கு வடக்கே 600 கிலோ மீட்டருக்கு அப்பால் உள்ள இத்தீவு அவுஸ்திரேலியாவின் கட்டுப்பாட்டில் இருக்கும் மனிதர்களற்ற தீவாகும்.

ஈராக்கியர்களுடன் சென்ற மரப்படகினை பறிமுதல் செய்த அவுஸ்திரேலிய அதிகாரிகள், ஈராக் நாட்டவர்களை வேறொரு படகில் இந்தோனேசியாவின் ரோட்டி தீவுக்கு அனுப்பி வைத்துள்ளதாக இந்தோனேசிய அதிகாரிகள் உறுதிச் செய்திருக்கின்றனர். இந்தோனேசியாவின் ரோட்டி தீவு ஆஷ்மோர் தீவிலிருந்து 160 கிலோ மீட்டருக்கு அப்பால் உள்ளது.

ரோட்டி தீவின் காவல்துறை தலைவர் நியோமன் புட்ரா கூறியதன்படி, தஞ்சம் கோரி பயணித்த ஈராக்கியர்கள் கடந்த நவம்பர் 11ம் திகதி ஈராக்கிலிருந்து இந்தோனேசியாவின் ஜகார்த்தா நகரையும் மக்காசர் நகரையும் சென்றடைந்திருக்கின்றனர். பின்னர் ரோட்டி தீவிலிருந்து அவுஸ்திரேலியா நோக்கி பயணமாகி இருக்கின்றனர். இந்த பயணத்தில் ஈடுபட்ட ஈராக்கியர் ஒருவர் கூறிய தகவலின் அடிப்படையில் இதனை அவர் தெரிவித்திருக்கிறார்.

இந்தோனேசியாவை பொறுத்தமட்டில், 14 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அகதிகள் வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் முறையாக பதியப்பட்டுள்ள போதிலும் அகதிகளுக்கு முறையான வேலை அல்லது கல்வி உரிமைகள் வழங்கப்படுவதில்லை. இவர்களில் பலர் அவுஸ்திரேலியாவில் படகில் தஞ்சமடையும் எண்ணத்தில் இந்தோனேசியாவுக்கு சென்றவர்களாவர்.  இவர்களில் இலங்கைத் தமிழ் அகதிகளும் உள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் ஏற்பட்ட கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாக, சுமார் ஆயிரம் பேர் அவுஸ்திரேலியாவில் தஞ்சம் கோரும் எண்ணத்தில் வெளியேறி இருக்கின்றனர். இதில் பலர் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட நிலையில், சுமார் இருநூறு இலங்கையர்கள் அவுஸ்திரேலிய எல்லைக்குள் படகு வழியாக வெற்றிகரமாக சென்றிருந்தனர். ஆனால், அவர்களின் தஞ்சம் கோரும் முயற்சி வெற்றியடையவில்லை, மாறாக அவுஸ்திரேலிய அதிகாரிகள் கடல் வழியாகவும் வான் வழியாகவும் அவர்களை இலங்கைக்கே நாடுகடத்தினர்.

கடந்த 2013 ஆண்டு முதல் கடுமையான எல்லைப் பாதுகாப்பு கொள்கைகளை நடைமுறைப்படுத்தி வரும் அவுஸ்திரேலிய அரசு, கடல் வழியாக வரும் அகதிகளை ஒருபோதும் நாட்டினுள் குடியமர்த்த மாட்டோம் எனத் தொடர்ந்து

எச்சரிக்கை விடுத்து வருகிறது. கடந்த மே மாதம் அவுஸ்திரேலியாவில் ஏற்பட்ட ஆட்சி மாற்றம் படகு வழியாக வரும் அகதிகளை அவுஸ்திரேலியாவுக்குள் அனுமதிக்கும் வாய்ப்பை ஏற்படுத்தும் என்ற பார்வை இருந்தது. ஆனால், புதிதாக ஆட்சிக்கு வந்த அவுஸ்திரேலியாவின் தொழிற்கட்சி தாராளவாத ஆட்சிக் காலத்தில் நடந்தது போல் படகு வழியாக வருபவர்களை நாடுகடத்தும் கொள்கை தொடரும் என்பதை தனது நடவடிக்கைகளின் மூலம் எடுத்துக் காட்டியது. படகு வழியாக தஞ்சம் கோரும் இலங்கை மக்களை தடுக்கும் விதமாக இலங்கை மீன்பிடி படகுகளுக்கு 4,200 ஜி.பி.எஸ் கருவிகளை வழங்குவதாக அறிவித்துள்ளது.