பசிலின் வருகைக்காக காத்திருக்கும் பொதுஜன பெரமுனையும் சுதந்திரக் கட்சியும்

எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாக பொதுஜன பெரமுன மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி உட்பட பல கட்சிகள் இணைந்து உருவாக்கப்பட இருக்கும் அரசியல் கூட்டணி உருவாக்கும் பணிகள் தற்போது வெளிநாட்டில் இருக்கும் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ நாடு திரும்பும் வரை தள்ளிப் போடப்பபட்டுள்ளதாக அரசியல் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பசில் ராஜபக்ஷ கடந்த மாதம் நடுப்பகுதியில் தனிப்பட்ட பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார். அவர் இந்த வாரக்கடைசியில் திரும்பி வரஉள்ளதாக அத்தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.

எதிர் வரும் பொதுத் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் பொதுஜன பெரமுன மற்றும் பொது எதிர்கட்சியுடன் இணைந்திருந்த ஏனைய கட்சிகளும் இணைந்து கடந்த ஜனாதிபதி தேர்தலிற்கு முன்னர் கூட்டணி அமைத்து எதிர்வரும் பொதுத் தேர்தலில் புதியதொரு கூட்டணியை அமைத்து பொதுத்தேர்தலில் போட்டியிடுவதற்கான இணக்கப்பாட்டிற்கு வந்திருந்தனர்.

அதற்காக ஸ்ரீலங்கா சுதந்திர பொதுஜன முன்னணி என்ற பெயரில் புதிய கூட்டணி உருவாக உள்ளது. இதற்கிடையில் பொதுத் தேர்தலிற்கு பொதுஜன ஒருங்கிணைந்த கூட்டணியின் சின்னமாக கதிரைச் சின்னத்தில் போட்டியிடுவதற்கும் இரண்டு தரப்பினரும் இணக்கப்பாட்டிற்கு வந்திருந்தாலும் மொட்டுச் சின்னத்திலேயே பொதுத் தேர்தலில் போட்டியிட வேண்டும் என பொதுஜன பெரமுன உறுப்பினர்கள் பலர் அரசாங்கத்திற்கு யோசனை தெரிவித்துள்ளனர்.

இந்த வாரம் பசில் ராஜபக்ஷ இலங்கைக்கு திரும்பிவந்த பின்னர் புதிய கூட்டணி மற்றும் போட்டியிடவுள்ள சின்னம்பற்றி பேச்சுவார்த்தை நடாத்தி தீர்மானம் எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

தற்போதய அரசாங்கத்திற்கு எதிர்வரும் மார்ச் 1ம் திகதியுடன் நான்கரை வருடங்கள் பூர்த்தியாவதனால் 19வது அரசியலமைப்பு சட்ட திருத்தத்திற்கு அமைய ஜனாதிபதி மார்ச் மாதம் 2ம் திகதி பாராளுமன்றம் கலைக்கப்பட உள்ளது. அதற்கிணங்க பொது தேர்தல் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 25ம் திகதி அல்லது ஏப்ரல் மாதம் இறுதி வாரத்தில் இடம்பெற உள்ளதாக தேர்தல் ஆணையாளர் அலுவலக தகவல்கள் தெரிவிக்கின்றன.