நெமொந்தே நெங்குயிமோ: சுற்றுச்சூழல் வீராங்கனையாக வலம்வரும் எக்குவதோரின் பூர்வீகக் குடிமக்கள் தலைவி – தமிழில் ஜெயந்திரன்

எக்குவதோர் நாட்டில் அமைந்துள்ள அமசோன் பிரதேசத்தைச் சேர்ந்த பூர்வீகக்குடி மக்களின் தலைவி, கோல்ட்மன் (Goldman environmental prize) அடிமட்டச் செயற்பாடுகளுக்கு முன்னுரிமையை வழங்குகின்ற சுற்றுச்சூழல் பரிசுக்குரிய வெற்றியாளராக அறிவிக்கப்பட்டிருக்கிறார்.

             எண்ணெய் தோண்டியெடுக்கும் செயற்பாட்டிலிருந்து 500,000 (ஐந்நூறு ஆயிரம்) ஏக்கர் நிலங்களைப் பாதுகாக்கும் போராட்டத்தில் வெற்றியீட்டியிருக்கிற நெமொந்தே நெங்குயிமோ (Nemonte Nenquimo) இப்பரிசுக்காகத் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்.

             தங்கள் நிலப்பிரதேசத்தை விற்பனை செய்ய முடிவு செய்த எக்குவதோர் அரசு மேற்கொண்ட திட்டத்தை எதிர்த்து, நெங்குயிமோவும், வஓரணி (Waorani) பூர்வீக இனத்தைச் சேர்ந்த ஏனைய உறுப்பினர்களும் அந்த அரசுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்கள்.

             அவர்கள் 2019ஆம் ஆண்டில் பெற்றுக்கொண்ட சட்டரீதியான வெற்றி, பூர்வீக குடிமக்களின் உரிமையை எதிர்காலத்தில் வலுப்படுத்தக்கூடிய ஒரு முன்னுதாரணமாக அமைந்திருக்கிறது.

எமது மழைக்காடு விற்பனைக்கானது அல்ல

115691967 2020 goldman envrionmental prize nemonte nenquimo credit af mateo barriga 1 1 நெமொந்தே நெங்குயிமோ: சுற்றுச்சூழல் வீராங்கனையாக வலம்வரும் எக்குவதோரின் பூர்வீகக் குடிமக்கள் தலைவி -	தமிழில் ஜெயந்திரன்

             நெமொந்தே நெங்குயிமோவைப் பொறுத்தவரையில் சுற்றுச்சூழலைப் பாதுகாப்பது என்பது அவரது ஒரு தெரிவு என்பதற்கு மேலாக தான் தொடர்ந்து ஆற்ற வேண்டும் என்று தனது முன்னோர் தனக்காக விட்டுச் சென்ற ஒரு பணியாகவே அதனைக் கருதுகிறார்.

             வாஓரணி மக்கள் எப்போதுமே பாதுகாக்கின்றவர்களாகவே இருந்திருக்கின்றார்கள். பல்லாயிரம் வருடங்களாகத் தங்களது பிரதேசத்தையும் தமது கலாச்சாரத்தையும் தாம் பாதுகாத்து வந்துள்ளதாக அவர்கள் பிபிசியிடம் தெரிவித்திருக்கிறார்கள்.

             தான் ஒரு சிறுபிள்ளையாக இருந்த போது, தமது பிரதேசத்துக்கு 1950 ஆம் ஆண்டில் மறைப்பணியாளர்கள் வருவதற்கு முன்னர், வஓரணி மக்கள் எப்படிப்பட்ட ஒரு வாழ்க்கையை வாழ்ந்தார்கள் என்பது பற்றிய பல கதைகளை முதியவர்களிடமிருந்து  தான் கேட்டறிந்ததாக நெங்குயிமோ கூறினார்.

             எனது பாட்டனார் எமது மக்களுக்குத் தலைவனாக இருந்து, அந்நியரின் ஊடுருவல்களிலிருந்து எமது நிலத்தைப் பாதுகாத்து வந்திருக்கிறார். உண்மையில் கையில் ஈட்டியை வைத்துக்கொண்டு எமது பிரதேசத்துக்குள் நுழைவோரை எதிர்க்கும் செயற்பாட்டுக்கு அவர் தலைமை தாங்கினார்.

             தனது ஐந்து வயதிலிருந்தே ஒரு தலைவியாக வருவதற்கு முதியவர்கள் தனக்கு ஊக்கமும் உற்சாகமும் தந்ததாக நெங்குயிமோ தெரிவித்தார்.

             ‘வரலாற்று ரீதியாகப் பார்க்கும் போது, ஆண்கள் போருக்குச் சென்ற போது, பெண்களே முடிவுகளை எடுப்பவர்களாக இருந்திருக்கிறார்கள்” என்று அவர் விளக்கம் தந்தார். ‘ஆண்கள் தாங்கள் சொல்வதைக் கேட்டுச் செயற்படக்கூடிய ஒரு நிலையை வஓரணிப் பெண்கள் உருவாக்கியிருந்தார்கள். ஆனால் ‘இவாஞ்செலிக்கல்’ என்றழைக்கப்படுகின்ற கிறிஸ்தவ மறைப்பணியாளர்களைத் தாம் சந்தித்த பின்னர் கடவுள் முதலில் ஆதாமைப் படைத்தார். இரண்டாவதாக அவரது விலா எலும்பிலிருந்து ஏவாள் படைக்கப்பட்டாள் என்று எங்களுக்குச் சொல்லப்பட்டது. அதன் பின்னர் தான் சமூகத்தில் பெண்களுக்குரிய இடம் தொடர்பான குழப்பம் எங்கள் நடுவில் ஏற்பட்டது.”

             ‘வஓரணிச் சமூகத்தில் பெண்களின் பங்கு இன்னும் முக்கியமானதாகவே இருக்கிறது. முடிவுகள் எடுக்க வேண்டிய தருணங்கள் வருகின்ற போது பெண்கள் மிகவும் உறுதியாகவே இருப்பார்கள். அப்போது எல்லோருமே அவர்கள் சொல்வதைக் கேட்பார்கள்.”

115691963 4dcd7259 921b 4041 a9d1 ee3dd37ca66e நெமொந்தே நெங்குயிமோ: சுற்றுச்சூழல் வீராங்கனையாக வலம்வரும் எக்குவதோரின் பூர்வீகக் குடிமக்கள் தலைவி -	தமிழில் ஜெயந்திரன்

             பாஸ்டாசா மாகாணத்தில் வாழுகின்ற வஓரணி மக்களின் முதல் பெண் தலைவியாக தானே முதன் முதலில் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதாகவும், அதே வேளையில் எண்ணெய் தோண்டி எடுக்கும் செயற்பாட்டிலிருந்து தமது பிரதேசத்தைப் பாதுகாக்கும் போராட்டத்தில் வஓரணியைச் சேர்ந்த பல பெண் தலைவிகள் தனக்கு வழிகாட்டியிருப்பதாகவும் நெமொந்தே நெங்குயிமோ தெரிவித்தார்.

             எண்ணெய் எடுக்கப்படாத ஒரு மழைக்காட்டுப் பகுதியிலேயே தான் வளர்ந்ததாகவும்  எண்ணெய் எடுக்கப்படும் ஒரு பகுதியில் தனது மாமிமார் வாழ்ந்ததாகவும் கூறிய நெங்குயிமோ தனது தந்தையுடன் அவர்களை முதலில் சென்று சந்தித்த அனுபவத்தையும் நினைவுகூர்ந்தார்.

             ‘முதலில் ஒரு சிறிய வள்ளத்தில் நாங்கள் அங்கு சென்றோம். அதன் பின்னர் 19 மணித்தியாலங்கள் நாங்கள் நடந்து சென்றோம். நாங்கள் தொலைவில் வருகின்ற போதே அந்தச் சத்தத்தை என்னால் கேட்க முடிந்தது. அப்போது எனக்கு பன்னிரண்டு வயது. எண்ணெய்க் கிணற்றிலிருந்து கிளம்பிய தீச்சுவாலையும் புகையும் என்னிலே மிகவும் பலமான ஒரு தாக்கத்தை அந்நேரத்தில் ஏற்படுத்தியிருந்தது.

             அந்நேரத்தில் அவருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது சுற்றுச்சூழல் தாக்கம் மாத்திரம் அல்ல. அதற்கு மேலாக அந்தக் குடியிருப்பில் வாழ்ந்த வஓரணி குடும்பங்களின் வாழ்க்கையில் அவை ஏற்படுத்திய எதிர்மறையான தாக்கங்களும் அவரிலே ஆழமான பாதிப்பை ஏற்படுத்தியிருந்தன.

             ‘அங்கு தமது வாழ்க்கை நல்லதாக இருக்கவில்லை என்று எனது தந்தையின் சகோதரி என்னிடம் தெரிவித்தார். தனது ஆண்பிள்ளைகள் எண்ணெய் தொழிலில் பணிபுரிந்ததாகவும், தாங்கள் வேலை செய்து பெற்ற ஊதியத்தைக் கொண்டு அவர்கள் மதுபானங்கள் வாங்கியதாகவும் அவர் தெரிவித்தார். சிலர் மது போதையில் வன்முறையாளர்களாகி, தமது மனைவியரை அடிக்கத் தொடங்கினார்கள்” என்று கூறி தனது நினைவுகளை அவர் பகிர்ந்து கொண்டார்.

             ‘அந்த சத்தங்கள் எல்லாவற்றுடனும் மக்களால் எப்படி அங்கு வாழ முடியும் என்று எனக்குத் தெரியாது. நேமொன்பாற (Nemonpare) என்ற இடத்திலுள்ள எனது இல்லத்தோடு அதனை ஒப்பிடவே முடியாது. அங்கே இரவு நேரங்களில் நட்சத்திரங்களை மட்டுமே எங்களால் பார்க்க முடியும். மிருகங்கள் எழுப்புகின்ற ஒலிகளை மட்டுமே எங்களால் கேட்க முடியும்.”

             கிட்டத்தட்ட 20 வருடங்களுக்குப் பின்னர் எழுபது இலட்சம் ஏக்கர் அமசோன் மழைக்காட்டுப் பிரதேசத்தில்             எண்ணெய் தோண்டக்கூடிய 16 புதிய இடங்களை ஏலத்தில் விடப் போவதாக எக்குவதோர் அரசு அறிவித்தது. அப்போது தான் நெங்குயிமோ இந்த எண்ணெய் எடுக்கும் செயற்பாட்டுக்கு எதிரான தனது போராட்டத்தைத் தொடங்கினார்.

             அவரது முப்பது வயதுகளில் பாஸ்டாசா (Pastaza) பிரதேசத்தில் வாழ்ந்த வாஓரணி மக்களின் தலைவியாக மட்டுமல்ல பூர்வீகக் குடிகளின் உரிமைகளையும் கலாச்சாரத்தையும் பேணிப்பாதுகாக்கும் நோக்குடன் தாபிக்கப்பட்ட சீபோ அலையன்ஸ் (Ceibo Alliance) என்று அழைக்கப்படும் அமைப்பின் இணை தாபகராகவும் அவர் விளங்கினார்.

             ‘எமது மழைக்காடு விற்பனைக்குரியது அல்ல” என்ற ஒரு எண்ணிம பரப்புரையையும் (digital campaign) அவர் ஆரம்பித்த வேளையில், உலகம் முழுவதிலும் இருந்து ஏறத்தாழ 400,000 ஒப்பங்கள் எண்ணெய்க்காக காணிகள் ஏலத்தில் விடுவதற்கு எதிராக இடப்பட்டன.

எதிர்காலத்தில் காத்திரமான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியசட்டரீதியான வெற்றி

             வாஓரணி மக்கள் வாழுகின்ற பிரதேசத்தில் அந்த மக்களின் சம்மதம் இன்றி அப்பிரதேசத்திலுள்ள காணிகளை ஏலத்தில் விடுவதை ஆட்சேபித்து எக்குவதோர் அரசுக்கு எதிராக ஒரு வழக்கை அவர் முன்னெடுத்தார்.

             அந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் 2019ஆம் ஆண்டு, ஏப்பிரல் மாதத்தில் வாஓரணி மக்களுக்குச் சாதகமான விதத்தில் தீர்ப்பை வழங்கினார்கள். மேற்குறிப்பிட்ட தீர்ப்பு, 500.000 ஏக்கர் நிலங்களை எண்ணெய் எடுக்கும் செயற்பாட்டிலிருந்து பாதுகாப்பதோடு மட்டும் நின்றுவிடாமல், எதிர்காலத்தில் வேறு ஏதாவது காணிகளை அரசு ஏலத்தில் விடவேண்டும் என்றால் முன்கூட்டியே, அந்த மக்களிடையே சுதந்திரமான முறையில் அவர்களது சம்மதத்தைப் பெறவேண்டும் என்றும் தீர்ப்பு வழங்கியது.

             எதிர்காலத்தில் காத்திரமான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய இந்தத் தீர்ப்பு பெருநிறுவனங்களையும் அரசையும் எதிர்த்து பூர்வீகக் குடிமக்கள் பெற்றுக்கொண்ட மிக அரிதான ஒரு தீர்ப்பு என்ற வகையில் உலகளாவிய வகையில் சுற்றுச்சூழல் ஆர்வலர்களால் கொண்டாடப்பட்டது.

             தமது வழக்கில் தமக்கு வெற்றி நிச்சயமாகக் கிடைக்கும் என்று தானும் தனது வாஓரணி மக்களும் எப்போதுமே நம்பிக்கையோடிருந்ததாக நெங்குயிமோ தெரிவிக்கிறார். ‘இந்தப் பிரதேசம் எங்களுக்குச் சொந்தமானது, நாங்களே இதில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். எனவே இதனை அனுமதிக்க முடியாது என்பதில் நாங்கள் மிகவும் உறுதியாகவே இருந்திருக்கிறோம்.”

             எதிர்காலத்தில் காணிகளை ஏலத்தில் விடுவதாயின், பூர்வீக மக்களின் அனுமதியை முன்கூட்டியே பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற விடயத்தை உள்ளடக்கி ஒரு சட்டத்தை வரைய வேண்டும் என்று எக்குவதோரின் சட்டங்களை இயற்றும் தேசிய பேரவையை இந்தத் தீர்ப்பை வழங்கிய நீதிமன்று கேட்டிருக்கிறது.

             ஏற்கனவே வரையப்பட்டிருக்கின்ற சட்டம், பூர்வீகக் குடிமக்களின் பங்களிப்பு எதுவுமின்றி வரையப்பட்டிருப்பதாக நெங்குயிமோ உள்ளடங்கலாக, பூர்வீக குடிமக்களின் தலைவர்கள் இம் மாதத்தொடக்கத்தில் தெரிவித்திருந்தனர்.

             ‘எம்மையும் எமது  போராட்டத்தையும் பலரும் அறிகின்ற வாய்ப்பை வழங்கி, இந்தப் பூகோளத்தின் நன்மை கருதியே நாம் செயற்படுகின்றோம் என்ற விழிப்புணர்வை இப்பரிசு ஏற்படுத்தும் என்று நாம் எதிர்பார்க்கிறோம்” என்று அவர் மேலும் தெரிவித்தார்.

             கானா, பிரான்சு, மியன்மார், பஹாமாஸ், மெக்சிகோ போன்ற நாடுகளைச் சேர்ந்தவர்களும் இப்பரிசைப் பெற்றிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

நன்றி: பி.பி.சி