நிவாரண அணுகுமுறையா, உரிமை அணுகுமுறையா? மலையக மீள்குடியேற்ற சவால் : மருதன் ராம்

மலையக பெருந்தோட்ட மக்களின் வாழ்க்கை பல தசாப்தங்களாக ஒரு நிரந்தர அசாதாரண நிலை யிலேயே தொடர்கிறது. இயற்கை அனர்த்தம், பொருளாதார நெருக்கடி, தோட்ட நிர்வாகங்களின் அலட்சியம், காணி உரிமையின்மை, பாதுகாப்பற்ற குடியிருப்புகள், குறைந்த உட்கட்டமைப்பு வசதிகள், கல்வி மற்றும் சுகாதார வசதி கள் பற்றாக்குறை என பல விதங்களாக மலையக சமூகத்தின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு வந்துள்ளது.
இந்த நீண்டகால கட்டமைப்பு பிரச்சினைகளை “டித்வா” சூறாவளி மிகத் தெளிவாக வெளிப்படுத்தியிருக்கிறது.
மலையக பகுதிகளில் டித்வா சூறாவளி ஏற்படுத்திய சேதங்கள் வெறும் வீட்டு சேதங்களாக மட்டுமல்லாது அது ஒரு சமூகத்தின் வரலாற்று புறக்கணிப்பை மீண்டும் வெளிச்சமிட்டுக் காட்டிய பேரழிவாகும். ஆயிரக்கணக்கான குடும்பங்கள் வீடுகளை இழந்தன. நூற்றுக்கணக்கான உயிர்கள் பாதிக்கப்பட்டன.
வாழ்வாதாரங்கள் சிதைந்தன. பலர் இன்னும் கூடாரங்களிலும் தற்காலிக முகாம்களிலும் வாழ்கின்றனர். இந்தப் பின்னணியில், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் நடைபெற்ற பதுளை, நுவரெலியா, கண்டி மற்றும் மாத்தளை மாவட்ட விசேட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்கள், அரசாங்கம் இந்தப் பேரழிவை எவ்வாறு அணுகுகிறது என்பதை வெளிப்படுத்துகின்றன. குறிப்பாக, மீள்குடியேற்றம், வீடமைப்பு, காணி ஒதுக்கீடு, நஷ்டஈடு, உட்கட்டமைப்பு அபிவிருத்தி, வாழ்வாதார மீட்பு ஆகிய விடயங்களில் அரசாங்கம் எடுத்துக்கொண்ட நிலைப்பாடு கள் இந்தக் கூட்டங்களில் தெளிவாக முன்வைக்கப் பட்டுள்ளன.
ஆனால், இக்கூட்டங்களில் முக்கியமான ஒரு உண்மை மீண்டும் வெளிப்பட்டுள்ளது.
மலையக மக்களின் பிரச்சினைக்கு தற்காலிக நிவாரணங்களோ, வீட்டு திட்டங்களோ மட்டும் போதாது. காணி உரிமையுடன் கூடிய நிரந்தர குடியிருப்பே இறுதியான தீர்வாகும். ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்ற மாவட்டங்களின் ஒருங்கிணைப்பு குழு கூட்டங்களின் போது வெளிப்படுத்தப்பட்ட தரவுகளின் அடிப்படையில், பதுளை மாவட்டத்தில் டித்வா சூறாவளியால் ஏற்பட்ட பாதிப்புகள் மிகப்பெரிய அளவில் பதிவாகியுள்ளன.
குறிப்பாக 26,517 குடும்பங்களைச் சேர்ந்த 90,667 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 77 தோட்ட வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ளதுடன் 507 வீடுகள் பகுதி அளவிலும் சேதம் அடைந்துள்ளன.
மீள்குடியேற்றப்பட வேண்டிய மொத்த குடும்பங்களின் எண்ணிக்கை 3,434 ஆகும். இந்த தரவுகள் வெறும் புள்ளிவிவரங்கள் அல்ல. இவை ஆயிரக்கணக்கான குடும்பங்கள் தங்கள் வாழ்விட பாதுகாப்பை முழுமையாக இழந்துள்ளதை காட்டுகின்றன. குறிப்பாக, “அதிக ஆபத்து” என அடையாளப்படுத்தப்பட்ட வீடுகள், மலையக தோட்டக் குடியிருப்புகள் எவ்வளவு பாதுகாப்பற்ற நிலையில் இருந்தன என்பதையும் வெளிப்படுத்துகின்றன.
இந்தக் கூட்டத்தில் ஜனாதிபதி, தனியார் நிறு வனங்களின் கட்டுப்பாட்டில் உள்ள அரச காணிகளை மீள்குடியேற்றத்திற்காக விரைவாக விடுவிக்குமாறு அறி வுறுத்தினார். இது ஒரு முக்கியமான முன்னேற்றமாக பார்க் கப்படலாம். ஏனெனில், மலையக மக்களின் வீடமைப்பு பிரச்சினையின் மையத்தில் எப்போதும் காணி உரிமை பிரச்சினையே இருந்து வந்துள்ளது.
அதேபோல நுவரெலியா மாவட்டத்தில் பதிவான தரவுகள் மிகவும் அதிர்ச்சிகரமானவை.
* பாதிக்கப்பட்ட குடும்பங்கள் – 18,266
* பாதிக்கப்பட்ட மக்கள் – 61,833
* முழுமையாக சேதமடைந்த தோட்ட வீடுகள் – 675
* முழுமையாக சேதமடைந்த கிராமப்புற வீடுகள் – 1,565
* பகுதியளவில் சேதமடைந்த தோட்ட வீடுகள் – 612
* உயிரிழப்புகள் – 93
இந்த தரவுகள் நுவரெலியா மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் ஜனாதிபதி முன்னிலையில் வெளிப் படுத்தப்பட்டதுடன் இவை டித்வா பேரழிவின் மையப் பகுதியாக நுவரெலியா மாவட்டம் இருந்ததை காட்டுகின்றன. குறிப்பாக தோட்டப்பகுதிகளில் ஏற்பட்ட வீட்டு சேதங்கள், பெருந்தோட்ட வரிசை வீடுகளின் ஆபத்தான நிலையை மீண்டும் வெளிக்கொண்டு வந்துள்ளன.
ஜனாதிபதி இந்தக் கூட்டத்தில் மிகவும் முக்கியமான ஒரு கருத்தை முன்வைத்தார். நிரந்தர வீடுகள் கட்டி முடிக் கப்படும் வரை, மீள்குடியேற்றத்திற்காக ஒதுக்கப்பட்ட காணிகளில் தற்காலிக வீடுகள் அமைத்து வழங்க வேண்டும் என்று அவர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். இது மனிதாபிமான ரீதியாக அவசியமான தீர்மானமாக இருந்தாலும், அதேநேரத்தில் ஒரு கேள்வியும் எழுகிறது. இந்த தற்காலிக வீடுகள் மீண்டும் நிரந்தர தற்காலிகங்களாக மாறிவிடுமா? என்ற கேள்வி மலையக மக்களின் மத்தியில் தொடர்ச்சியாக எழுந்துள்ளது.
மலையக மக்களின் வரலாற்றில் இதே போன்ற சம்பவங்கள் பல சந்தர்ப்பங்களில் இடம்பெற்றுள்ளன. தற் காலிக குடியிருப்புகள் பல தசாப்தங்கள் நீடித்திருக்கின் றன. இடம்பெயர்ந்த குடும்பங்கள் நிரந்தர வீடுகளுக்காக காத்திருக்கும்போது, அரசியல் மாற்றங்களும் நிர் வாக தாமதங்களும் திட்டங்களை பாதித்துள்ளன. அதன் காரணமாகவே, மீள்குடியேற்றம் என்பது வீடு கட்டு வது மட்டுமல்லாது, அது நில உரிமையுடன் கூடிய குடியுரிமை அடிப்படையிலான சமூக மறுசீரமைப்பாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்தப்படுகிறது. இது இவ்வாறிருக்க கண்டி மாவட்டத்தின் தரவுகள் பல நிர்வாக சிக்கல்களை வெளிப்படுத்தியுள்ளன.
கண்டி மாவட்டத்தில் முழுமையாக இடிந்த வீடுகளை விட, பகுதியளவில் சேதமடைந்த வீடுகளின் எண்ணிக்கையே அதிகமாக உள்ளன. எனினும் பாதிக்கப்பட்ட வீடுகளில் 2,304 வீடுகளுக்கான கொடுப்பனவில் சிக் கல் உள்ளதாக வெளிப்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன் 3,795 வீடுகளுக்கான புவிசரிதவியல் மற்றும் அளவை பணி யகத்தின் அறிக்கை கள் இதுவரையில் கிடைக்கவில்லை என தெரியவந்துள்ளது. கண்டி மாவட்டத்தை பொருத் தவரையில் ஒரு மிக முக்கியமான பிரச்சினை வெளிப் படுகிறது.
மதிப்பீடுகள், அறிக்கைகள், நிர்வாக தாமதங் கள் ஆகியவை மக்கள் மீள்குடியேற்றத்தை தாமதப் படுத்துகின்றன. அதிக அபாய பகுதிகளில் வாழும் குடும்பங்களை அங்கிருந்து வெளியேற்ற வேண்டிய அவசியத்தை ஜனாதிபதி வலியுறுத்தினார். ஆனால் வெளியேற்றம் மட்டும் போதாது. அவர்கள் எங்கே செல்லப் போகிறார்கள்? எந்த உரிமையுடன் குடியேறப்போகிறார்கள்? இதில்தான் மீண்டும் “காணி உரிமை” என்ற கேள்வி முன்வருகிறது. மலையகத்தில் பல குடும்பங்கள் தலை முறைகளாக வாழ்ந்தாலும், அவர்கள் வசிக்கும் நிலத் தின் உரிமையாளர்கள் அல்ல. இதனால் அவர்கள் இயற்கை அனர்த்தங்களின் போது மிக எளிதாக இடம் பெயர்க்கப்படக்கூடிய சமூகமாகவே உள்ளனர். மாத்தளை மாவட்டத்தில் அரசாங்கம் நஷ்டஈடு வழங்கலில் முன்னேற் றம் கண்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது. மாத்தளை மாவட் டத்தில் 25,000 மற்றும் 50,000 ரூபாய் கொடுப்பனவுகள் முழுமையாக வழங்கப்பட்டுள்ளன. மாணவர்களுக்கான 15,000 மற்றும் 10,000 ரூபாய் உதவித்தொகைகள் வழங்கப் பட்டுள்ளன. இவை அவசர நிவாரண நடவடிக்கைகளாக வழங்கப்பட்டுள்ளன. ஆனால் ஒரு குடும்பம் தனது வீடு, வாழ்வாதாரம், நிலம், சமூக உறவுகள் அனைத்தையும் இழந்தபோது, 25,000 அல்லது 50,000 ரூபாய் எவ்வளவு காலத்திற்கு உதவும்? இதுவே மலையக வீடமைப்பு பிரச்சினையின் அடிப்படை முரண்பாடு. அரசாங்கங்கள் பெரும்பாலும் நிவாரண அணுகுமுறையிலேயே செயல் படுகின்றன. ஆனால் மக்களுக்கு தேவைப்படுவது உரிமை அடிப்படையிலான அணுகுமுறையாக உள்ளது
“லைன் அறைகள்” – பேரழிவின் மையம்
டித்வா பேரழிவால் அதிகம் பாதிக்கப்பட்டவை பெருந்தோட்ட லைன் வீடுகளாகும். இந்த “லைன் வீடுகள்” காலனித்துவ காலத்தில் தொழிலாளர்களுக்காக அமைக்கப்பட்டவை. குறுகிய இடம், சுகாதார வசதியின்மை, நிலச்சரிவு அபாயம், நீர் வடிகால் பிரச்சினைகள் போன்றவை பல ஆண்டுகளாக இருந்தபோதும், அவை முறையாக மாற்றப்படவில்லை. இன்றும் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் இவ்வாறான வீடுகளில் வாழ்கின்றன. டித்வா சூறாவளி வெறும் இயற்கை பேரழிவாக அல்லாது அது இந்தக் குடியிருப்பு அமைப்பின் தோல்வியை வெளிப்படுத்தியுள்ளது.
அரசாங்கத்தின் தற்போதைய அணுகுமுறை
ஜனாதிபதி தலைமையில் நடைபெற்ற கூட்டங்களின் போது அரசாங்கம் பொதுவான முக்கிய அணுகுமுறைகளை கையாள்வது அவதானிக்க கூடியதாக உள்ளது. அந்த அடிப்படையில், விரைவான மீள்குடியேற்றம், காணிகளை அடையாளங்காணல், தனியார் கட்டுப்பாட்டிலுள்ள அரச காணிகளை விடுவித்தல், தற்காலிக வீடுகள் அமைத்தல், நஷ்டஈடு வழங்கல், உட்கட்டமைப்பு மேம்பாடு, வீதி மற்றும் பாலங்கள் சீரமைத்தல், விவசாய நிலங்களை மீட்பதற்கான நிதி உதவி மற்றும் அதிக அபாயப் பகுதிகளில் இருந்து மக்களை வெளியேற்றுதல் போன்ற அணுகுமுறைகளை கையாள வேண்டும் என மேற்கூறிய அனைத்து மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டங்களின் போதும் பொது வாக தீர்மானிக்கப்பட்டுள்ளது. இவை அனைத்தும் அவசியமான நடவடிக்கைகளே.
குறிப்பாக “பணத்தை ஒருபோதும் தடையாக கருத வேண்டாம்” என்று ஜனாதிபதி அதிகாரிகளுக்கு வழங்கிய அறிவுறுத்தல், அரசாங்கம் இந்த நெருக்கடியை தீவிரமாக எடுத்துக்கொள்கிறது என்பதைக் காட்டுகிறது. ஆனால்,  இந்த மீள்குடியேற்றம் மக்களை மீண்டும் ஒரு புதிய சார்புநிலைக்குள் தள்ளுமா? அல்லது அவர்களுக்கு உண்மையான உரிமையுடன் கூடிய வாழ்க்கையை வழங் குமா? என்ற கேள்விகளும் எழுகின்றன.
காணி உரிமை – மலையகத்தின் பிரதான கோரிக்கை 
மலையக அரசியல் மற்றும் சமூக இயக்கங்கள் பல ஆண்டுகளாக வலியுறுத்திவரும் ஒரே கோரிக்கை காணி உரிமையாகும். காணி உரிமையில்லாத குடும்பங்களுக்கு நிரந்தர பாதுகாப்பு இல்லை. அவர்கள் எப்போது வேண்டுமா னாலும் வெளியேற்றப்படலாம் என்ற நிலை இன்றும் தொடர்கிறது இதன் காரணமாகவே பல பகுதிகளில் பெருந் தோட்ட தொழிலாளர்கள் தாமாகவே அமைக்கும் குடியிருப்புகள் உடைத்து நொறுக்கப்படுகின்றன. இதற்கான உதாரணமாக அண்மையில் இரத்தினபுரி நீலகாமம் தோட்டத்தில் இடம்பெற்ற சம்பவத்தை கூற முடியும். மலை யக மக்கள் பெரும்பாலும் “தொழிலாளர்கள்” என்ற அடையாளத்திலேயே வைத்திருக்கப்பட்டுள்ளனர்.
“காணி உரிமையுள்ள குடிமக்கள்” என்ற நிலைக்கு அவர்கள் இன்னும் கொண்டு வரப்படவில்லை.‌ டித்வா பேரழிவு இந்த உண்மையை மீண்டும் வெளிப்படுத்தியுள்ளது. மீள்குடியேற்றம் என்பது வெறும் நிர்வாகப் பணியல்ல. அது ஒரு மனித உரிமை செயற்பாடாக இருக்க வேண்டும். அதற்கான அடிப்படை அம்சங்களாக நிரந்தர காணி உரிமை, பாதுகாப்பான வீடமைப்பு, கல்வி சுகாதார குடிநீர் மற்றும் சாலை வசதி போன்றன இருக்க வேண்டும். மலையக மக்களின் வீடமைப்பு பிரச்சினை தேர்தல் காலங்களில் பலமுறை பேசப்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கான வீடுகள் கட்டப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் பல திட்டங்கள் பாதியிலேயே நின்றுவிட்டன. இப்போது டித்வா பேரழிவுக்குப் பிறகு மீண்டும் ஒரு புதிய வாய்ப்பு உருவாகியுள்ளது.
இந்த வாய்ப்பு வெறும் புதிய வீடுகள் கட்டுவதற்காக மட்டுமல்லாது மலையக சமூகத்தின் வரலாற்று அநீதி யைச் சரிசெய்யும் வாய்ப்பாகும். டித்வா சூறாவளி ஆயிரக் கணக்கான வீடுகளை இடித்திருக்கலாம். ஆனால் அது இன்னொரு உண்மையையும் வெளிப்படுத்தியுள்ளது. மலையக மக்கள் இன்னும் பாதுகாப்பான உரிமையுள்ள குடிமக்களாக இந்த நாட்டில் வாழவில்லை. அவர்கள் இன்னும் காணி உரிமையற்ற தொழிலாளர் குடியிருப்புக ளில் வாழ்கின்றனர். அவர்கள் இன்னும் இயற்கை பேரழி வுகளுக்கு மிக எளிதில் பலியாகின்றனர். அதனால், டித்வா பேரழிவுக்குப் பிந்தைய மீள்குடியேற்றத் திட்டங்கள் வெறும் “வீடமைப்பு திட்டங்கள்” ஆக இருக்கக் கூடாது. ஒரு புதிய வீடு மட்டும் ஒரு குடும்பத்தின் எதிர்காலத்தை பாதுகாக்காது. ஆனால், சொந்த காணியில் கட்டப்பட்ட பாது காப்பான வீடு, அந்தக் குடும்பத்தின் தலைமுறைகளையே மாற்றும்.