நிவர் புயல்: தமிழ்நாடு முழுவதும் அரசு பொது விடுமுறை அறிவிப்பு

நிவர் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழ்நாடு முழுவதும் நாளை அரசு விடுமுறை அறிவித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
தெற்கு வங்கக்கடலில் உருவாகியிருக்கும் நிவர் புயல் அடுத்த 24 மணி நேரத்தில் தீவிரப் புயலாக வலுப்பெறும் என்று கூறப்படும் நிலையில், இப் புயல் 25ஆம் திகதி (நாளை) மாமல்லபுரத்துக்கும் காரைக்காலுக்கும் இடையே கரையைக் கடக்கலாம் எனச் சொல்லப்படுகின்றது.
இதன் காரணமாக சென்னை, புதுச்சேரி, கடலூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் பலத்த மழையுடன் சூறாவளி காற்றும் வீசும் என்று கூறப்படுகின்றது.
மணிக்கு 100 முதல் 110 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக் கூடும் எனச் சொல்லப்பட்டுள்ள நிலையில், பல்வேறு விதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
அத்துடன், புயல் பாதிக்கப்படும் பகுதிகளாக கருதப்படும் இடங்களில் ஆயிரக்கணக்கான தற்காலிக முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.