”நான் சிங்கள, பௌத்த தலைவன்“ -சிறீலங்கா ஜனாதிபதி

”நான் சிங்கள, பௌத்த தலைவன். இதனை தெரிவிப்பதற்கு நான் ஒருபோதும் தயங்குவது கிடையாது. பௌத்த சித்தாந்தங்களுக்கு அமையவே நான் இந்த நாட்டை ஆட்சி செய்வேன்” என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ  அறிவித்துள்ளார்.

நேற்று கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் சிறீலங்காவின் 73  சுதந்திர தின கொண்டாடப்பட்டது.

இந்நிலையில்,  இந்த  சுதந்திர தின நிகழ்வில்   உரை நிகழ்த்திய  கோட்டாபய ராஜபக்ஷ,

“அனைத்து சமயங்களுக்கும், அனைத்து இனங்களுக்கும் உரிய கௌரவத்தை அளிக்கும் அஹிம்சையும், அமைதியும் கொண்ட பௌத்த தத்துவத்தில், நாட்டிலுள்ள அனைத்து மதங்களுக்கும் அனைத்து இனங்களுக்கும் நாட்டில் அமலில் உள்ள சட்ட கட்டமைப்பிற்குள் சரி சமமான சுதந்திரத்தை அனுபவிக்கும் உரிமை உள்ளது.

நாட்டின் தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்தி, நாட்டிலுள்ள பல்வேறு இனத்தவர்களுக்கு இடையில் உண்மையான நல்லிணக்கத்தை ஏற்படுத்தி, வறுமையை முற்றாக ஒழித்து, பொருளாதாரத்தை கட்டியெழுப்பி, நிலையான அபிவிருத்தியை ஏற்படுத்துவவதற்கான சவால் தமக்கு உள்ளது. .

அத்துடன், நாட்டின் தேசிய மரபுரிமைகள், பாரம்பரிய பழக்கவழக்கங்கள், தேசியம் மற்றும் தேசப்பற்று ஆகியன கடுமையான அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ள நிலையில், பலவீனமுற்றிருந்த தேசிய பாதுகாப்பை மீண்டும் உறுதிப்படுத்தி, தாய்நாடு எதிர்கொண்ட சவால்களை வெற்றிக் கொள்வதற்காகவே தனக்கு மக்கள் வாக்களித்தனர்.

 இலங்கை ஒரு ஜனநாயக நாடு . இந்த நாட்டில் வாழும் அனைத்து பிரஜைகளுக்கும் சமவுரிமை உள்ளது.

இனம் அல்லது மதம் என்ற அடிப்படையில் பிரஜைகளை பிரிக்க முயற்சிப்பதனை தான் நிராகரிக்கின்றேன்.

அனைத்து மக்களின் அடிப்படை உரிமைகள் மற்றும் மனித உரிமைகள் பாதுகாக்கப்படுவதுடன், ஒரு சட்டம் என்ற கொள்கை நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் .” என்று கூறினார்.

மேலும் இலங்கையில் 73வது சுதந்திர தின நிகழ்வை, நாட்டிலுள்ள பெரும்பாலான சிறுபான்மை கட்சிகள் நிராகரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், தமிழர் தாயகம் எங்கும் கவனயீர்ப்பு போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இலங்கை அரசாங்கத்தினால் சிறுபான்மை சமூகங்களுக்கு எதிராக தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டுவரும் அடக்குமுறைகள், வடக்கு கிழக்கின் நில அபகரிப்புக்கள், தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை போன்றவற்றை  வலியுறுத்தியும் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது குறிப்பிடத்தக்கது.