நவல்னிக்கு ரஸ்யத் தயாரிப்பான ‘நோவிசாக்’ என்ற விஷம் கொடுக்கப்பட்டது ஆய்வுகூட அறிக்கைகள்

ரஸ்ய எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நவல்னி கடந்த மாதம் 20ஆம் திகதி உடல்நலக் குறைவிற்கு உட்பட்டார். அவரது உடலில் விஷம் கலந்திருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்ததையடுத்து, அவர் மேலதிக சிகிச்சைக்காக யேர்மனி கொண்டு செல்லப்பட்டார்.

கோமா நிலையில் இருந்த அவர், தற்போது குணமடைந்து வருவதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். தற்போது தானாக சுவாசிக்க முடிவதாகவும், சுவாசக் கருவிகள் எதுவும் தேவையில்லை எனவும் மருத்துவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.

யேர்மனி இராணுவ பரிசோதனைக்கூடம் மேற்கொண்ட ஆய்வில் அலக்ஸி நவல்னிக்கு ரஸ்யத் தயாரிப்பான ‘நோவிசாக்’ எனப்படும் விஷம் செலுத்தப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. விஷம் செலுத்தப்பட்டதால், அவருடைய ஆரோக்கியம் பல நாட்களுக்கு பாதிக்கக் கூடும் என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

இது குறித்து பிரான்ஸ் மற்றும் சுவீடன் ஆகிய நாடுகளும் பரிசோதனைகளை மேற்கொண்டிருந்தன. அந்நாடுகளும் அவருக்கு விஷம் செலுத்தப்பட்டதை உறுதி செய்திருந்தன.

ஆனால் ரஸ்ய அதிபர் விளாடிமிர் புட்டின் மற்றும் ரஸ்ய வெளியுறவு அமைச்சர் செர்கே லவ்ராவ் ஆகியோர் பிரான்ஸ், யேர்மனி, சுவீடன் ஆகிய நாடுகளின் ஆய்வுகூட  முடிவுகளை மறுத்து வருகின்றனர்.