நளினி, முருகன் விடுதலை தொடர்பாக ராமதாஸ் வெளியிட்ட கருத்து

நளினி, முருகன் மற்றும் பேரறிவாளன் உட்பட 7பேர் விடுதலை தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடியுடன் பேசிய போது, விரைவில் நல்ல முடிவை அறிவிப்பதாக கூறினார். விரைவில் நல்ல முடிவு வரும் என எதிர்பார்க்கின்றேன் என பிரதமரை சந்தித்த பின் பாமக நிறுவன தலைவர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்தார்.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் இந்தக் கூட்டணியில் இடம்பெற்ற பாமக எந்தத் தொகுதியிலும் வெற்றி பெறவில்லை. இருப்பினும் அதிமுகவுடனான கூட்டணி ஒப்பந்தப்படி, பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் மாநிலங்களவை எம்.பியாக தேர்வு செய்யப்பட்டார்.

பாஜக கூட்டணியில் இடம்பெற்றுள்ள போதிலும் அரசின் திட்டங்களாகிய எட்டுவழிச் சாலை, காஸ் திட்டம் உட்பட பல்வேறு திட்டங்களுக்கு கட்சியின் சார்பில் எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டது.

இதேவேளை புதுடில்லியில் பிரதமர் நரேந்திர மோடியை பாமக நிறுவுனர் ராமதாஸ் மற்றும் மாநிலங்களவை உப்பினர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் நேற்று (10) சந்தித்துப் பேசினர். இந்தச் சந்திப்புக் குறித்த முன்னறிவிப்புகள் எதுவும் வெளியிடப்படவில்லை. பிரதமரை சந்தித்த பின் ராமதாஸ் செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது “பிரதமருடனான சந்திப்பின் போது, பேரறிவாளன் உட்பட 7 பேர் விடுதலை தொடர்பாக பிரதமரிடம் கோரிக்கை வைத்தோம். மேலும் காவிரி-கோதாவரி திட்டத்தை நிறைவேற்றுமாறும், டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும் எனவும் பாமக சார்பில் பிரதமரிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது“ என்று தெரிவித்தார்.