Tamil News
Home ஆய்வுகள் தொலைபேசி பாவனையும், இன்றைய மாணவர்களின் நிலையும்

தொலைபேசி பாவனையும், இன்றைய மாணவர்களின் நிலையும்

தகவல் தொடர்பாடல் சாதனம் என்பது ஒரு கருத்தை ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு பரிமாற்றம் செய்யும் கருவியாகும். அவற்றில் இன்று உலகையே ஒரு சட்டைப் பையினுள் சுருக்கி வைத்திருக்கும் ஒரு கருவியாக கையடக்கத் தொலைபேசி காணப்படுகின்றது. தொலைபேசி, சமூகத்தில் உள்ள அனைத்து நபர்களிடமும் செல்வாக்குச் செலுத்தும் அதேவேளை, மாணவ சமூகத்தில் இது பாரிய மாற்றத்தினைப் கொண்டுவருகிறது.

இன்றைய மாணவர்கள் தங்களது கற்றல் செயற்பாடுகளையும் மறந்து தொலைபேசியின் ஆக்கிரமிப்பிற்கு உள்ளாகின்றனர். மாணவர்கள் தங்களைச் சுற்றி நடப்பவை யாது? ஏன புரியாத அளவிற்கு அதன் செல்வாக்கிற்கு உட்பட்டவர்களாக காணப்படுகின்றனர். தங்களைச் சுற்றி நடக்கும் எந்த சிந்தனையும் அற்றவர்களாகக் காணப்படுவதுடன், கற்றலில் ஈடுபாடு காட்டுவதில்லை. மாறாக தொலைபேசி விளையாட்டுக்கள், முகபுத்தகங்களின் பாவனை என்பவற்றில் நேரத்தை வீணாக செலவிடுகின்றனர். தொலைபேசி விளையாட்டு மீதான இவர்களின் ஈடுபாடு உணவு, உறக்கம் என்பவற்றை மறக்கடிக்கும் அளவில் காணப்படுகின்றது. சில நேரங்களில் பாடசாலைக்குக் கூட செல்லாமல் தொலைபேசி விளையாட்டுக்களில் நேரத்தைச் செலவிடுகின்றனர்.

இன்று அதிகமான மாணவர்களிடத்தில் தொலைபேசியின் தாக்கம் வாட்ஸப், ஐஎம்மோ, வைபர் போன்ற செயலிகளால் ஏற்படுகின்றது. அதாவது தொலைபேசியின் அனைத்து சமூகவலைத்தளங்களில் தமது நண்பர்களுடன் உரையாடவும், காணொளியில் கதைக்கவும் அதிகம் விருப்பம் கொண்டவர்களாக இருப்பதுடன், அதிகமான நேரங்களை இவற்றுடனேயே செலவிடுகின்றனர். வாட்ஸபில்  ஸ்ரேட்டஸ்   போடுவதில் அதிக ஈடுபாடு கொண்டுள்ளனர். தமது ஸ்ரேட்டஸ் எத்தனை பேரால் பார்க்கப்பட்டுள்ளது என்பதைப் பற்றி அறிந்து கொள்ளும் ஆர்வமும் உளவியல் ரீதியாக மாணவர்களிடத்தில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

தொலைபேசிகளில் நேரம் பார்த்து பழகிக் கொண்ட மாணவர்களுக்கு கடிகாரத்தைப் பார்த்து நேரம் சொல்லும் தன்மை குறைந்து வருகின்றது. தொலைபேசிகளில் இலகுவாகக் காட்சிப்படுத்தப்பட்டுள்ள நேரத்திற்கு இசைவாக்கமடைந்தவர்களாக மாணவர்கள் காணப்படுகின்றார்கள். அத்துடன் மாணவர்களிடத்தில் குறுஞ் செய்திகளை அனுப்பும் செயலானது மொழி விருத்தியை தடைசெய்து வருகிறது. தொலைபேசியைப் பயன்படுத்தும் மாணவர்கள் சமூக நல்லுறவுகள் அற்றவர்களாகக் காணப்படுகின்றனர். அருகில் உள்ள மனிதர்களையும் இவர்கள் அறிவதில்லை. சமூகத்தில் உள்ள ஒவ்வொரு நபர்களையும் பற்றிய எண்ணமும் அற்றவர்களாக தங்களது உலகையே ஒரு தொலைபேசியில் அடக்கி விடுகின்றனர். தொலைபேசியின் அதிகரித்த பாவனை காரணமாக அவற்றைப் பாடசாலைக்கு கொண்டு செல்வதை அதிகமாகக் காணலாம்.

Capture.JPG 2 தொலைபேசி பாவனையும், இன்றைய மாணவர்களின் நிலையும்

அண்மைக் காலங்களில் ப்ளூ வெல் கேம் என்பது உலகையே உலுக்கிய ஒரு சம்பவமாகும். இது பெரும்பாலும் மாணவர்கள் மத்தியில் பாரிய உயிர் தாக்கத்தை ஏற்படுத்திய விளையாட்டாகும். அத்துடன் சில விளையாட்டுக்களை விளையாடும் இவர்கள் வேறு எந்தவித சிந்தனையும் அற்றவர்களாக காணப்படுகின்றார்கள். இவர்களின் இவ் விளையாட்டுகளினால் உடற்பயிற்சி என்ற ஒரு விடயத்தையே மறந்துவிடுகிறார்கள். இது மாணவர்களிடையே உடல்சார் நோய்களை தோற்றுவிப்பதுடன், ஒரு உற்சாகத்துடன் அவர்கள் செயற்படுவதைக் குறைத்து விடுகிறது. மாணவர்களிடத்தில் முகப்புத்தகங்களின் பாவனையானது கலாசாரப் பண்பாட்டு சீர்கேடுகளையும், நடத்தை பிறழ்வுகளையும் ஏற்படுத்துகின்றது. முன் அறிமுகமில்லாதவர்களிடம் தொடர்புகளை ஏற்படுத்தி நடத்தை பிறழ்வான செயற்பாடுகளை தூண்டுவதுடன், காதல் வயப்படல், தற்கொலை செய்துகொள்ளல் என்பவற்றுக்கு உள்ளாகின்றனர். முகப்புத்தகத்தில் ஏற்பட்ட மோகம் காரணமாக மாணவர்கள் பாடசாலைகளுக்கு தொலைபேசிகளைக் கொண்டுச்சென்று, அங்கும் கூட கற்றல் விடயங்களில் ஈடுபாடு காட்டுவதை குறைத்துக் கொள்கின்றனர்.

இவை இவ்வாறிருக்க, கையடக்கத் தொலைபேசிகளைத் தொடராகப் பாவிப்போருக்கு தலைவலி, காது வலி ஏற்படுவதும்  சில வகைக் கையடக்கத் தொலைபேசிகளை காற்சட்டைப் பையில் தொடராக வைத்திருப்பதால் தொடைப் பகுதியில் விறைப்பு தன்மை ஏற்படுவதும் அவதானிக்கப்பட்டுள்ளது. அத்தோடு கையடக்கத் தொலைபேசியில் இருந்து வெளியாகும் கதிர்கள் ஆண்மையைப் பாதிப்பதுடன், மலட்டுத்தன்மையை ஏற்படுத்தும் காரணியாக அமைவதாகவும் கருதப்படுகின்றது.

அத்தோடு கையடக்கத் தொலைபேசியில் உரையாடியபடியும் குறுஞ் செய்திகளைப் பார்த்தபடியும் வீதிகளைக் கடக்கும் பாதசாரிகளும் இருக்கின்றனர். அனேகர் வீதிகளிலும், ரயில் பாதையிலும் முன்னவதானமின்றி கையடக்கத் தொலைபேசியுடன் நடந்து கொள்ளுகின்றனர். ஆனால் இவர்கள் தம் செயற்பாடுகளின் பாரதூரத்தை முன்கூட்டியே அறிந்து கொள்ள வேண்டும். அப்போது தான் கையடக்கத் தொலைபேசிகளால் ஏற்படும் திடீர் விபத்துக்களைத் தவிர்க்கக் கூடியதாக இருக்கும்.

Capture தொலைபேசி பாவனையும், இன்றைய மாணவர்களின் நிலையும்

இவ்வாறான நிலையில் காணப்படும் மாணவர்களை பெற்றோர்களும், ஆசிரியர்களும் கவனத்தில் எடுத்து, அவர்களைக் கற்றல் செயற்பாடுகளில் ஈடுபடுத்தவும், கற்றல் செயற்பாடு மீதான ஈடுபாட்டை மாணவர்களிடத்தில் தோற்றுவிக்கவும் வேண்டும். ஆசிரியர்களும் மாணவர்கள் மத்தியில் தொலைபேசி பாவனையை குறைத்துக் கொள்ளவதுடன், பெற்றோர்கள் அதன் விளைவுகள் பற்றி பிள்ளைகளிடத்தில் புரிய வைத்தல் அவசியமான விடயமாகும். தொலைபேசிப் பாவனையை மாணவர்கள் குறைத்து சமூகத்தில் உள்ளவர்களால் செய்ய முயன்ற செற்பாடுகளை செய்தல், இன்றைய மாணவர்களின் கற்றல் செயற்பாடுகளுக்கான வழிக்காட்டலின் அவசியமாக உள்ளது.

எனவே தான் உலகமயமாக்கலின் தாக்கம் மாணவர்களின் கற்றல், கற்பித்தல் செயற்பாடுகளில் பல நன்மைகளைப் புரிந்தாலும், அவற்றினை தவறான முறைகளில் பயன்படுத்தும் நிலையே அதிகம் காணமுடிகின்றது. அதிகமான மாணவர்களின் இடைவிலகலிலும் தொலைபேசி இயந்திர சாதனங்களின் பாவனையும், அவற்றில் தங்களை முழுதாக ஈடுபடுத்திக் கொள்ளும் செயற்பாடுகளுமே காரணமாக அமைகின்றன. தொலைபேசி பாவனையின் பாதகமான விளைவுகளை பற்றிய விழிப்புணர்வுகளை மாணவர்களிடத்தில் ஏற்படுத்துவதுடன், கற்றல் செயற்பாடுகளை எவ்வாறு ஆர்வமுடைய விடயமாக மாற்றலாம் எனவும் எதிர்கால இலக்கு பற்றிய விளக்கங்களை மாணவர்களிடத்தில் தோற்றுவிக்க வேண்டிய சமூக பொறுப்பு எம் ஒவ்வொருவருக்கும் உள்ளது.

தெய்வேந்திரம் வஜிதா

நான்காம் வருடம் இரண்டாம் அரையாண்டு

சமூகவியல் துறை

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்