தொடர்வண்டி நிலையங்களில் இந்தி நூலகங்கள்- பெ. மணியரசன் கண்டனம்!

கடந்த 28.12.2019 அன்று திருநெல்வேலி தொடர்வண்டி நிலையத்தில் இந்தி நூலகங்களுக்குப் புத்துயிர் ஊட்டும் நிகழ்ச்சி ஒன்று நடத்திருக்கிறது. மதுரை கோட்ட தொடர்வண்டித் துறையில் இந்தி பரப்பும் அதிகாரியாக (ராஜ் பாஷா அதிகாரி) உள்ள திரு. ஏ. சீனிவாசன், திருநெல்வேலி தொடர்வண்டி நிலையத்தில் இந்தி நூலக விழாவில் கலந்து கொண்டு பேசியபோது, கடந்த பல ஆண்டுகளாக மதுரைக் கோட்டத்திலுள்ள மதுரை, திண்டுக்கல், பழனி உள்ளிட்ட 10 தொடர்வண்டி நிலையங்களில் இந்தி நூலகங்கள் செயல்பட்டு வந்தன என்றும், அவற்றில் இந்தி நூல்கள் மட்டுமே இருந்தன என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், அவர் பேசியபோது இந்த இந்தி நூலகங்களை தொடர்வண்டி ஊழியர்கள் பயன்படுத்தாததால், அதன் பயன்பாட்டை ஊக்கப்படுத்துவதற்காக ஆங்கிலம், தமிழ் போன்ற மொழிகளில் உள்ள நூல்களையும் அந்நூலகங்களில் வைக்கப்போவதாகக் கூறியுள்ளார்.

அன்றாடம் அந்நூலகத்திற்குப் போய் ஒரு நூலை எடுத்துக் கையில் வைத்துக் கொண்டு, அதனோடு தற்படம் (செல்ஃபி) எடுத்து, அப்படத்தை மதுரை கோட்ட அதிகாரிக்கு அனுப்பி வைக்க வேண்டும், அவ்வாறு வரும் மார்ச்சு மாதம் வரை அதிகத் தற்படங்களை அனுப்புவோருக்கு பரிசளிப்புகள் வழங்கப்படும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.

இந்தி நூல்களைப் படிக்கும் பழக்கத்தை ஊக்குவிப்பதற்காக தமிழ் உள்ளிட்ட பிறமொழி நூல்களையும் அங்கே வைத்து, “இனிப்பு” காட்டி ஈர்க்கும் உத்திதான் இது! நூலுடன் தற்படம் (செல்ஃபி) அதிகமாக எடுத்துக் கொண்டவர்களுக்கு “பரிசு” என்று சொல்வதிலும், காலப்போக்கில் அல்லது இப்போதேகூட இந்தி புத்தகங்களுடன் தற்படம் எடுத்துக் கொள்வோர்க்கு மட்டுமே பரிசு வழங்கப்படும் என்ற அச்சம் உள்ளது.

ஏனெனில், இதை அறிவித்த அதிகாரியின் பதவிப் பெயர் – இந்தி பரப்பும் அதிகாரி (Raj Bhasha Adhikari). தமிழ் மொழி நூல் அதிகம் படித்தால், இந்தி பரப்பும் அதிகாரி பரிசு தருவாரா? இந்தி நூலகத்திற்குத் தமிழர்களை ஈர்ப்பதற்காக இவ்வாறு சூழ்ச்சி செய்கிறார்.

தமிழ்நாட்டில் தொடர்வண்டி நிலையங்களில் இந்தித் திணிப்பு தீவிரமாக இருக்கிறது. பெரும் பாலும் இந்தி பேசுவோரையே அதிகாரிகளாகவும், ஊழியர்களாகவும் அமர்த்தி உள்ளார்கள். பயணச்சீட்டு முன்பதிவுப் படிவத்தில் இந்தி – ஆங்கிலம் மட்டுமே அச்சிட்டு பயணிகளுக்குப் பலமுறை கொடுத்துள்ளார்கள். அப்படிவத்தில் தமிழ் மொழி இல்லாதது குறித்து தமிழர்கள் பலமுறை கண்டனங்கள் எழுப்பியிருக்கிறார்கள்.

மதுரைக் கோட்டத் தலைமையக அலுவலகத்தில், நிர்வாக அதிகாரிகளின் பதவிப் பட்டியல் பெயர்ப்பலகை உள்ளது. அதில், இந்தி – ஆங்கிலத்தில் மட்டுமே எழுதியுள்ளார்கள். தமிழ் இல்லை! “ஏ. சீனிவாசன்” பெயரில் “ராஜ் பாஷா” (“Raj Bhasha Adhikari”) என்று ஆங்கில வரி வடித்தில் இந்தியில் பதவிப் பெயர் எழுதப்பட்டுள்ளது.

செயல்படாமல் கிடக்கும் இந்தி நூலகங்களை செயல்படுத்துவதற்காக, அதில் தமிழ் உள்ளிட்ட பிறமொழி நூல்கள் வைக்கப்படும் என்றும், வேலைக்காக போட்டித் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு உரிய நூல்கள் இருக்குமென்றும், பயணிகளும் இந்நூலகங்களைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் ஏ. சீனிவாசன் “இனிப்பு” வார்த்தைகள் கூறியுள்ளார்.

மதுரைக் கோட்டத்தில் செயல்படும் இந்தி நூலகங்கள் பற்றிய செய்தி மட்டுமே இப்பொழுது வெளியாகியுள்ளன. தமிழ்நாடு முழுவதும் இவ்வாறு தொடர்வண்டி நிலையங்களில் இந்தி நூலகங்கள் இருக்கின்றன.

இந்த இந்தித் திணிப்பு முயற்சியை எதிர்த்து, தமிழர்கள் அனைவரும் கண்டனக் குரல் எழுப்ப வேண்டுமென்றும், தென்னகத் தொடர்வண்டித்துறையின் இந்தி நூலகத் திட்டத்தைத் திரும்பப் பெற வேண்டுமென்றும், இதற்காக தமிழ்நாடு அரசு தொடர்வண்டித்துறையை வலியுறுத்தி இந்தித் திணிப்பைத் தடுக்க வேண்டுமென்றும்  தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.

 

 பெமணியரசன்

தலைவர், தமிழ்த்தேசியப் பேரியக்கம்.