தொடர்ச்சியான முறைப்பாடுகளையடுத்து நந்திக்கடல் பகுதியில் படைவேலிகள் பின்னகர்வு

முல்லைத்தீவு நந்திக்கடல் சிற்றளவு மீனவர் சங்கத்தினால் கடந்த ஆகஸ்ட் மாதம் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் – வவுனியா பிராந்திய காரியாலயத்தில் முறைப்பாடு ஒன்றினை செய்திருந்தனர். அதில் மீன்பிடி தேவைகளின் பொருட்டு நந்திக்கடல் இருமருங்கிலும் தமது  பாவனையிலிருந்த வீதிகள் யுத்தம் நிறைவடைந்த பின் பாதுகாப்பு தரப்பினரால் மூடப்பட்டு கையகப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், மீன்பிடி நடவடிக்கைகளில் பல தடைகளை பாதுகாப்பு தரப்பினர் விதித்ததாகவும் குறிப்பாக நந்திக்கடலின் வடக்குப் பகுதியில் தொழில் நடவடிக்கைகளை கட்டுப்படுத்தல் கரையில் தொழிலை கடற்படை மேற்கொள்ள அனுமதிக்காமை, முகத்துவாரம் பகுதியிற்கு செல்வதற்கு பாதை விடாமை, வாழ்வாதார பாதிப்பு போன்றவை தொடர்பில் ஆணைக்குழுவிற்கு முறையிட்டிருந்தனர்,

சங்கப் பிரதிநிதிகளின் முறைப்பாட்டை ஏற்றுக்கொண்ட ஆணைக்குழு, கடந்த செப்டெம்பர் மாதம் கோத்தாபய கடற்படை முகாமின் பொறுப்பதிகாரியினையும் அடுத்தகரையில் அமைந்திருக்கும் இராணுவ முகாமின் பொறுப்பதிகாரியினையும் முறைப்பாட்டாளரையும் விசாரணைக்கு அழைத்து சிற்றளவு மீன்பிடியில் ஈடுபடும் தரப்பினது பிரச்சினைகள் தொடர்பில் எடுத்துக்கூறியதுடன் மீனவர்கள் எதிர்நோக்கும் அசௌகரியங்கள் தொடர்பிலும் எடுத்துக்கூறப்பட்டது.

இதனையடுத்து நந்திக்கடலின் ஒரு பகுதியில் நிலைகொண்டுள்ள இராணுவத்தினர் சிறுகடல் வரை இட்டிருந்த முட்கம்பி பாதுகாப்பு வேலிகளை பின்னகர்த்தியுள்ளனர். இதன் மூலம் மீனவர்கள் கரையோரமாக தொழில் நடவடிக்கைகளை மேற்கொள்ள வாய்ப்பு கிடைத்துள்ளது.

மேலும் மறுபுறத்தில் இருக்கும் கடற்படையினர் 04 கால அவகாசத்தை கோரியுள்ளதுடன் தாம் கரையோரமாக பாதுகாப்பு வேலிகளை இட்டதன் பின்பு கரையோரமாக தரித்து தொழில் நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும் எனவும் உறுதியளித்துள்ளதுடன் நந்திக்கடலின் கடலோரமாக அமைந்துள்ள பகுதியில் சுத்தமான முறையில் தொழில் செய்ய முடியும் எனவும் தெரிவித்துள்ளனர்.