தெற்கு சூடானில் சிறிலங்காவின் போர் குற்றப்படையினர்: எச்சரிக்கும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்

போர்க்குற்றங்கள் புரிந்ததாகக் குற்றச்சாட்டுக்கு ஆளான நாடுகளைச் சேர்ந்த படையினரை ஐ.நா அமைதிப்படையில் இணைத்துக் கொள்ள வேண்டாம் என ஐ.நாவை வலியுறுத்தியுள்ள நாடுகடந்த தமிழீழ அரசாங்கம், தெற்கு சூடானில் ஐநா அமைதிப்படையில் நிறுத்தப்பட்டுள்ள சிறிலங்கப் படையினரை விலக்கிக்கொள்ள வலியுறுத்தியுள்ளது.

இது தொடர்பில் ஐநா பொதுச் செயலர் அந்தோணியோ குத்தாரெஸ் அவர்களுக்கு நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் விடுத்துள்ள கோரிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ஐநா அமைதிப்படையினரின் நம்பகத்தன்மையை உறுதிசெய்வதற்கு ஆவன செய்யும்படி வலியுறுத்துகின்றோம்.

போர்க்குற்றங்களும் மானிடத்துக்கு எதிரான குற்றங்களும் இனப்படுகொலைக் குற்றமும் புரிந்ததாக ஐ.நாவினால் குற்ற்றஞ்சாட்டப்பட்டுள்ள இராணுவத்தினரை கொண்ட நாடுகளைச் சேர்ந்த படையினரை, அனைத்துலகக் குற்றவியல் நீதிமன்றத்தையோ ஒரு பன்னாட்டுக் குற்றத் தீர்ப்பாயத்தையோ அவர்கள் சந்திக்கும் வரை, ஐ.நா அமைதிப்படையில் நிறுத்தாமலிருப்பதன் மூலமே, நம்பகத்தன்மையை உறுதி செய்ய இயலும் என நா.க.தமிழீழ அரசாங்கம் சுட்டிக்கட்டியுள்ளது.

ஒருபுறம், ஐநாவே ஒரு நாட்டைப் போர்க்குற்றங்கள் புரிந்ததாகக் குற்றஞ்சாட்டுகிறது, மறுபுறம் குற்றச்சாட்டுக்கு ஆளான அதே நாட்டுப் படைகளை அமைதிக் காப்பாளர்களாக அமர்த்திக் கொள்கிறது.
மேலும், இச்செயல் நம்பகத்தன்மையை முழுமையாகக் குலைத்து விடுகிறது, குறிப்பாக ஐநா உயராணையர் அலுவலகம், ஐநா அமைதிப்படையின் அலுவலகம் ஆகியவற்றின் நம்பகத்தன்மை கெடுகிறது.

சிறிலங்கா போர்க்குற்றங்களும் மானிடத்துக்கு எதிரான குற்றங்களும் புரிந்திருப்பதாக ஐ.நாவின் அறிக்கைகள் பலவும் கடந்த காலங்களில் வெளிவந்திருந்த நிலையில், அதனை சுட்டிக்காட்டி நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் விடுத்துள்ள இக்கோரிக்கை முக்கியமானதாகவுள்ளது.