உயிர்த்த ஞாயிறு தாக்குதல் : பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மீது குற்றச்சாட்டு

உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்புச் சம்பவங்கள் தொடர்பில் தற்போதைய பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ரவி செனவிரத்ன மீது, ஓய்வுபெற்ற பிரதி பொலிஸ் மா அதிபர் பாலித சிரிவர்த்தன பாரதூரமான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.

இணையவழி ஊடகக் கலந்துரையாடல் ஒன்றில் கலந்துகொண்ட அவர், குறித்த தாக்குதலைத் தடுப்பதற்கு உரிய கால அவகாசம் இருந்தும், அப்போதைய பிரதி பொலிஸ் மா அதிபராக இருந்த ரவி செனவிரத்ன அதனைத் தடுப்பதற்குத் தவறிவிட்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.

இந்தக் குற்றச்சாட்டின் முக்கிய அம்சமாக, ரவி செனவிரத்ன வெளிநாடு சென்று நாடு திரும்பிய திகதி தொடர்பான முரண்பாடுகளை பாலித சிரிவர்த்தன சுட்டிக்காட்டியுள்ளார்.

தான் வெளிநாட்டிலிருந்து திரும்பி வந்து ஏப்ரல் 16 ஆம் திகதியே மீண்டும் கடமைகளைப் பொறுப்பேற்றதாக ரவி செனவிரத்ன தரப்பு தொடர்ந்து கூறிவருகின்றது.

இருப்பினும், ரவி செனவிரத்ன ஏப்ரல் 13 ஆம் திகதியே தனது பணிக்குத் திரும்பியிருந்தமைக்கான உறுதியான ஆதாரங்கள் தம்மிடம் உள்ளதாக பாலித சிரிவர்த்தன தெரிவித்துள்ளார்.

“ஏப்ரல் 13 ஆம் திகதியிலிருந்தே ரவி செனவிரத்ன பணியில் இருந்திருந்தால், ஏப்ரல் 21 ஆம் திகதி தாக்குதல் இடம்பெறுவதற்கு இடைப்பட்ட எட்டு நாட்கள் தாக்குதலை முறியடிப்பதற்கு அவருக்குப் போதுமான கால அவகாசமாக இருந்திருக்கும்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்றுக்குப் பொறுப்பான பிரதி காவல்துறை மா அதிபர் என்ற ரீதியில், தாக்குதல் குறித்த உளவுத் தகவல்கள் இருந்த நிலையில், அவர் உரிய நடவடிக்கைகளை எடுத்திருக்க வேண்டும் என்பது பாலித சிரிவர்த்தனவின் வாதமாகும்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் பல்வேறு விசாரணை அறிக்கைகள் மற்றும் கருத்துகள் நிலவி வரும் சூழலில், உயர் அதிகாரியொருவர் மீது ஓய்வுபெற்ற பிரதி காவல்துறை மா அதிபர் இவ்வாறான நேரடி ஆதாரங்களுடன் குற்றச்சாட்டை முன்வைத்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

எவ்வாறாயினும், தன் மீது சுமத்தப்பட்டுள்ள இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ரவி செனவிரத்ன இதுவரை எந்தவிதமான உத்தியோகபூர்வ விளக்கத்தையோ அல்லது மறுப்பையோ வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.