வடக்கு அபிவிருத்திக்கு பல மில்லியன் ஒதுக்கீடு – அபிவிருத்தியூடாக உரிமைகளை பறிக்கும் திட்டம்

வடக்கு மாகாண வீடமைப்பு பணிகளுக்காக 24ஆயிரம் மில்லியன் ரூபாவிற்கும் அதிகமான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்ததாக சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

இன்றைய பாராளுமன்ற அமர்வின் போதே பிரதமர் இதனைத் தெரிவித்தார். யுத்தத்தின் பின்னர் மக்களின் வாழ்வாதாரத்தை விருத்தி செய்வதற்கான திட்டங்கள் பல இனங்காணப்பட்டுள்ளதாகவும்  2015இற்குப் பின்னர் வடமாகாண வீடமைப்பு அபிவிருத்திப் பணிகளுக்கென 24ஆயிரம் மில்லியன் ரூபாவிற்கும் அதிக நிதி ஒதுக்கப்பட்டு, இந்திய அரசாங்கத்தின் உதவியுடன் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபை இந்த வீட்டுத் திட்டத்தை நடைமுறைப்படுத்தியிருந்தது என்றும் குறிப்பிட்டார்.

யுத்தத்தின் பின்னர் வடமாகாணத்தின் அபிவிருத்திக்கென விசேட வேலைத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதனிடையேஇ தேர்தல் அண்மிக்கும் நிலையில் சிறீலங்கா அரசு அபிவிருத்தி தொடர்பான நடவடிக்கைகளை முன்னெடுப்பதும்இ அதன் ஊடாக சிங்களக் குடியேற்றங்கள் மற்றும் பௌத்த ஆலயங்களை அமைப்பதும், அபிவிருத்தி என்ற போர்வையில் தமிழ் மக்களின் உரிமைகளை பறிக்கும் செயல் என தெரிவிக்கப்படுகின்றது.

இந்தத் திட்டத்தின் கீழேயே அண்மையில் வீடுகள் கையளிப்பு செய்யப்பட்ட நிகழ்வு கம்பகாவில் நடைபெற்றது. முழுவதும் சிங்களவரே வாழும், முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் தொகுதியான கம்பகாவில் நடைபெற்றது. இந்த வீடமைப்பு அபிவிருத்தியில், போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காகவும், இந்திய வம்சாவளியினருக்காகவும் என்ற சொற்கள் சேர்க்கப்பட்டிருந்தன. இதில் இந்திய வம்சாவளியினருக்கான என்பதே இந்த கம்பகா வீட்டுத் திட்டமாகும்.

போரினால் பாதிக்கப்பட்ட மக்கள் வடக்கில் இருக்கும் போது, முதலாவது மாதிரிக் கிராமம் கம்பகாவில் அமைக்கப்பட்டுள்ளது இங்கு குறிப்பிடப்பட வேண்டியது.