தீர்ப்பதற்கு மிகவும் கடினமான சைப்பிரஸ் சிக்கல் –  ஒரு புதிய திருப்பம்

மத்தியதரைப் பிரதேசத்தில் இம் மாதத் தொடக்கத்தில் நிலவிய கடும் பதற்ற நிலையின் நடுவில், வட சைப்பிரஸ், தனது அதிபருக்கான தேர்தலை நடத்தியிருக்கிறது. ஒக்ரோபர் மாதம் 18ஆம் திகதி தேசிய ஒற்றுமைக் கட்சியைச் சேர்ந்த (National Unity Party)  ஏர்சின் டட்டார் (Ersin Tatar)  பதவியில் இருக்கின்ற அதிபர் முஸ்ரபா அக்கிஞ்சிக்கு (Mustafa Akinici) எதிராகப் போட்டியிட்டு 51.74 வீதமான வாக்குகளைப் பெற்று வெற்றியடைந்திருக்கிறார்.

நீண்ட காலமாகத் தொடர்கின்ற பல பிணக்குகளை உள்ளடக்கிச் ‘சைப்பிரஸ் பிரச்சினை’ என்ற பெயரில் அறியப்படுகின்ற சிக்கல் தொடர்பாக, கிரேக்க மக்களைக் கொண்ட சைப்பிரஸ் பகுதியோடு தமக்கு இருக்கின்ற கருத்து வேறுபாடுகளுக்கு எப்படிப்பட்ட தீர்வைக் காண்பது என்ற விடயம் சார்பாக மேற்கொள்ளப்படும் பேச்சுவார்த்தைக்கு சைப்பிரசில் வாழும் துருக்கிய மக்கள் வழங்கிய ஆணையாகவே இந்தத் தேர்தல் முடிவுகள் பார்க்கப்படுகின்றன.

பிரித்தானியாவிடமிருந்து 1960 இல் சைப்பிரஸ் தனது சுதந்திரத்தைப் பெற்றுக்கொண்டது. ஆனால் அதற்குப் பின் நாட்டிலே, கிரேக்க சைப்பிரஸ் மக்களுக்கும், துருக்கிய சைப்பிரஸ் மக்களுக்கும் இடையே அரசியற் குழப்பங்களும், வன்முறைப் போராட்டங்களும் ஏற்பட்டதனால் 1963ஆம் ஆண்டு இரு இனங்களையும் உள்ளடக்கிய குடியரசு இரண்டாகப் பிரிந்து, அதற்கு அடுத்த வருடம் ஐக்கிய நாடுகளின் அமைதிப்படைகள் அங்கு வரவேண்டிய தேவை ஏற்பட்டது.

இப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வைக் காண்பதற்காக இரு இனங்களுக்கும் இடையே 1968ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட பேச்சுவார்த்தைகள் இன்றுவரை அவ்வப்போது தொடர்ந்து நடைபெற்று வந்திருக்கின்றன.

‘அகிஞ்சி’ தெரிவுசெய்யப்பட்டிருப்பின் அது, இரு வலயங்களைக் கொண்ட, இரு இனங்களை உள்ளடக்கிய ஒரு கூட்டாட்சியை அடையும் நோக்குடன் ஏற்கனவே தொடங்கப்பட்ட அதிக சவால்கள் அற்ற ஒரு பேச்சுவார்த்தைச் செயன்முறையைத் தொடர்ந்து கைக்கொள்ளவே துருக்கியைப் பூர்வீகமாகக் கொண்ட சைப்பிரஸ் மக்கள் விரும்புவதாக பொருள் கொள்ளக்கூடியதாக இருந்திருக்கும்.

ஆனால் பெரும்பான்மையான துருக்கிய சைப்பிரஸ் மக்கள், டாட்டாரையே (Tartar) தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். இதன் மூலம் அவர்கள் பேச்சுவார்த்தை மேசையில் தமது பக்கத்தைப் பொறுத்தவரையில், தமது உரிமைகளை மிக ஆணித்தரமாக வலியுறுத்தக்கூடிய ஒரு அணுகுமுறையையே விரும்புகிறார்கள் என்பது தெளிவாகின்றது. உண்மையில் கூட்டாட்சியை அதிக விமர்சனக் கண்ணோட்டத்துடன் பார்க்கின்ற ஒரு அணுகுமுறையையும், பேச்சுவார்த்தை மேசையில் விட்டுக்கொடுக்காத ஒரு உறுதியான அணுகுமுறையையுமே அவர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

புதிய அதிபர் எவ்வாறான பாதையைத் தெரிவு செய்தாலும், பல்வேறுபட்ட பங்காளிகளுடன் தொடர்புபட்ட மிகச் சிக்கலான பிரச்சினையாக இது இருக்கிறது என்பது மட்டுமன்றி, இப்பிரதேசம் முழுவதிலுமே அதிக பதற்றம் ஏற்படுவதற்கும் அமைதி முயற்சி தோல்வியடைவதற்கும் மூலகாரணமாக இருக்கின்ற, பத்து ஆண்டுகளாகத் தொடரும் இயற்கை வாயுப் பிரச்சினையும் இங்கே கருத்தில் எடுக்கப்படவேண்டிய ஒரு முக்கிய விடயமுமாகும்.

டாட்டாரின் தலைமைத்துவம்

பன்னாட்டுச் சமூகத்தில் துருக்கியினால் மட்டுமே ஒரு நாடாக அங்கீகரிக்கப் பட்டிருக்கின்ற வடக்கு சைப்பிரஸின் அரசியல் அரங்கில், தோல்வியிலே முடிந்த பல சுற்றுப் பேச்சுவார்த்தைகளைச் சந்தித்த விரக்தியுணர்வு மிக ஆழமாக வேரூன்றியிருப்பதைக் காணக்கூடியதாகவிருக்கிறது.

சைப்பிரஸ் பத்திரிகைகளினால் மேற்கொள்ளப்பட்ட ஒரு கருத்துக்கணிப்பின்படி, தீவின் அரசியல் நிலைமை தொடர்பாக தாம் முழுமையாக நம்பிக்கை இழந்திருப்பதாக ஆய்வில் பங்குபற்றிய 53.8 வீதமான துருக்கிய சைப்பிரஸ் மக்கள் கருத்துத் தெரிவித்திருந்தார்கள். அதே வேளையில் 24.7 வீதமான கிரேக்க சைப்பிரஸ் மக்களே இப்படிப்பட்ட நம்பிக்கையீனத்தை வெளிப்படுத்தியிருந்தார்கள்.

கடந்த பெப்ரவரி மாதத்தில் கெசிச்சி (Gezici Research Company) என்ற துருக்கிய ஆய்வு நிறுவனம் மேற்கொண்ட கருத்துக்கணிப்பில் கிரேக்க சைப்பிரஸ் பகுதியுடன் எந்தவிதமான உடன்பாட்டையும் எட்டுவது சாத்தியமில்லை என்று 78.7 வீதமான துருக்கிய சைப்பிரஸ் மக்கள் கருத்து தெரிவித்திருந்தார்கள்.

தேர்தலுக்கு முன்னதாக, போட்டியிட்ட எல்லா வேட்பாளர்களைப் போலவே, டாட்டாரும் மக்கள் நடுவில் நிலவிய இந்த விரக்தியுணர்வைக் கையில் எடுத்திருந்தார். பேச்சுவார்த்தையைத் தொடர வேண்டும் என்றும் பன்னாட்டுச் சமூகத்தின் அனுதாபத்தை இழக்காமல் இருக்கும் பொருட்டு கடும்போக்கு அணுகுமுறையைத் தவிர்த்துக் கொள்ளவும் வேண்டும் என்று அவரது எதிராளி பரப்புரை செய்தபோது, தேக்க நிலையிலே இருக்கின்ற பேச்சுவார்த்தைக்கு முன்னுரிமை தந்து இன்னும் ஐந்து ஆண்டுகளை வீணாக்கிவிட முடியாது என்றும் அபிவிருத்தியில் கவனம் செலுத்துவதே முக்கியமானது என்றும் டாட்டார் வலியுறுத்தியிருந்தார்.

பன்னாட்டு சமூகத்தின் அங்கீகாரத்தையும் ஐரோப்பிய ஒன்றியத்தில் உறுப்புரிமையையும் உறுதிப்படுத்தும் நோக்குடன் பேச்சுவார்த்தை மூலம் தீர்வைக் காணும் அணுகுமுறையை பல ஆண்டுகளாக துருக்கிய சைப்பிரஸ் கைக்கொண்டு வந்திருக்கிறது. ஆனால் இவ்வகையான அணுகுமுறை கிரேக்க சைப்பிரஸ் பகுதியுடன் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைப் பேச்சுவார்த்தையில் அடைவதற்கு எந்தவிதத்திலும் உதவியாக அமைந்திருக்கவில்லை.

துருக்கியுடன் நல்லுறவைப் பேணுவதும் தனது தேர்தல் பரப்புரையில் டாட்டார் வலியுறுத்திய இன்னொரு விடயமாகும். மேற்குறிப்பிட்ட கெசிச்சி ஆய்வின்படி, 61வீதமான துருக்கிய சைப்பிரஸ் மக்கள், துருக்கியுடன் நல்ல உறவைப் பேணுகின்ற ஒரு அதிபரை விரும்பியிருக்கிறார்கள். அதே நேரத்தில் 80.8 வீதமான மக்கள் வடக்கு சைப்பிரசின் பாதுகாப்பை உறுதிப்படுத்தக்கூடிய ஒரு நாடாக துருக்கி விளங்க வேண்டும் என்றும் விரும்பியிருக்கிறார்கள்.

சைப்பிரஸ் குடியரசை 1960 இல் தாபித்த உடன்படிக்கைகளின்படி துருக்கி, கிரேக்கம், ஐக்கிய இராச்சியம் ஆகிய நாடுகள் மேற்படி குடியரசின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் பொறுப்பையும் அதே வேளையில் குறிப்பிட்ட தீவில் ஏற்படுத்தப்பட்ட குடியரசுக்கு ஆபத்து ஏற்படும் சூழலில் அதில் தலையிட்டு அமைதியை ஏற்படுத்தும் பொறுப்பையும் ஏற்றிருந்தன.

மேற்படி சைப்பிரஸ் தீவை கிரேக்கத்துடன் இணைக்கும் நோக்கத்துடன் கிரேக்கத்தின் ஆதரவுடன் 1974இல் ஒரு ஆட்சிக்கவிழ்ப்பு முயற்சி நடைபெற்ற போது, துருக்கி இந்த ஏற்பாட்டைப் பயன்படுத்தியிருந்தது. சைப்பிரஸ் குடியரசின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் வழங்க  ஏற்படுத்தப்பட்டிருக்கும் மூன்று நாடுகளைக் கொண்ட இந்த ஏற்பாடு, காலம் கடந்த ஒரு விடயம் எனக்கூறி அதனை இல்லாமற்செய்துவிட கிரேக்க மக்களைக் கொண்ட சைப்பிரஸ் பகுதி விரும்புகிறது.

மாற்றத்தை எதிர்பார்த்த மக்களின் உதவியோடு வெற்றிபெற்ற டாட்டாருக்கு, மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளை நடைமுறப்படுத்த வேண்டிய தேவை இப்போது இருக்கிறது.

கூட்டாட்சிக்குப் பதிலாக மாற்றுத் தீர்வுகள் முன்வைக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்திய டாட்டார், அருகருகே இருக்கக்கூடிய ~இரண்டு அரசுகள்~ என்ற தீர்வை தற்போது முன்வைத்திருக்கிறார். வடக்கு சைப்பிரஸ் பன்னாட்டுச் சமூகத்தால் இன்னும் அங்கீகரிக்கப்படாவிட்டாலும் கூட, நடைமுறையில் சைப்பிரஸ் தீவில் உண்மையில்  இரண்டு அரசுகள் இருக்கின்றன. எனவே பேச்சுவார்த்தைகள் இந்த யதார்த்தத்தின் அடிப்படையிலேயே முன்னெடுக்கப்படவேண்டும் என்று டாட்டார் தெரிவித்திருக்கிறார்.

‘இறைமைச் சமத்துவம்’ (sovereign equality) என்ற கொள்கையை முன்மொழிந்திருக்கும் டாட்டார், இதன்படி துருக்கிய சைப்பிரசுக்கு அதிகப்படியான அதிகாரப்பரவலாக்கலைக் கோருகிறார். தமது பிரச்சினைக்கான தீர்வு ‘நாடுகளின் கூட்டு’ (confederation) என்ற வடிவில் அமைய வேண்டும். அதாவது கூட்டாட்சிக்குப் பதிலாக அங்கீகரிக்கப்பட்ட இரண்டு நாடுகளின் கூட்டு என்ற வகையிலேயே தீர்வு அமையவேண்டும் என்று அவர் தெரிவித்திருக்கிறார். வடக்கு சைப்பிரசைப் பன்னாட்டுச் சமூகம் அங்கீகரிக்க வேண்டும் என்றால் அதற்கு கிரேக்க சைப்பிரசின் இசைவு அவசியமாகும். ஆனால் கிரேக்க சைப்பிரசைப் பொறுத்த வரையில் இது அவர்களால் நினைத்துப் பார்க்க முடியாத ஒரு விடயமாகவே இருக்கிறது.

இதே நேரம் துருக்கியின் ஒரு பகுதியாக மாறுவது என்பது பெரும்பாலான துருக்கிய சைப்பிரஸ் மக்களின் விருப்பத்துக்குரிய தெரிவாக இல்லை. டாட்டார் கூட இதைப்பற்றி எதுவும் பேசவில்லை. தமது தனித்துமான அடையாளம் தொடர்பாகவும் தமது சுதந்திரம் தொடர்பாகவும் துருக்கிய சைப்பிரஸ் மக்கள் அசைக்க முடியாத உறுதியோடு இருக்கிறார்கள்.

ஏற்கனவே 1977 க்கும் 1979க்கும் இடையேயான காலப்பகுதியில் எட்டப்பட்ட உயர்மட்ட உடன்படிக்கைகளில்; குறிப்பிடப்பட்டிருப்பது போன்று, கூட்டாட்சித் தீர்வொன்றை எட்டுவதை இலக்காகக் கொண்டு, பல ஆண்டுகளாக வடிவமைக்கப்பட்ட அமைதிப்பேச்சுவார்த்தைகளோடு டாட்டாரின் எதிர்பார்ப்பு எப்படிப் பொருந்தும் என்பது கேள்விக்குறியாகவே இருக்கிறது.

இரண்டு இனங்களுக்கும் இடையே அரசியல் சமத்துவத்தைப் பேணும் வகையில் இரண்டு அரசுகளை உள்ளடக்கிய, இரு வலயங்களைக் கொண்ட இரு இனங்களைக் கொண்ட, ஆனால் பன்னாட்டு ரீதியில் ஒரு அலகாக விளங்கக்கூடிய ஒரு தீர்வே இப்பேச்சுவார்த்தைகளின் போது முன்வைக்கப்பட்டது. இருப்பினும் ஒரு முழுமையான தீர்வைக் காணும் முயற்சியில் இரு பக்கங்களுமே தோல்வியைக் கண்டிருக்கின்றன.

மிகவும் சிக்கல் வாய்ந்த பின்னணி

துருக்கி மற்றும் கிரேக்க சைப்பிரஸ் மக்களுக்கிடையேயான பிணக்குகளுக்கு அப்பால், இதில் தொடர்புபட்ட வேறு பல தரப்புகளின் காரணமாகவும் சைப்பிரஸ் பிரச்சினை மேலும் சிக்கலாக்கப்பட்டிருக்கிறது. துருக்கி, கிரேக்கம், பிரித்தானியா மற்றும் ஐக்கிய நாடுகள் என்பன தொடக்கத்தில் இருந்தே சைப்பிரஸ் பிரச்சினையைத் தீர்க்கும் முயற்சிக்குத் தங்கள் பங்களிப்பை அளித்துவந்திருக்கின்றன.

தெற்கு சைப்பிரஸ், ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைந்த போது, ஐரோப்பிய ஒன்றியம் இப்பிரச்சினையில் தலையிடத் தொடங்கியது. சைப்பிரசின் இரு பகுதிகளும் ஒன்றாக இணைவது தொடர்பாக ஐக்கிய நாடுகளினால் 2004ம் ஆண்டு நடத்தப்பட்ட பொதுவாக்கெடுப்பில், துருக்கி தேசத்தின் ஆதரவுடன் துருக்கிய சைப்பிரஸ் (கிரேக்க சைப்பிரசுடன்) ஒன்றாக இணைய வாக்களித்தது. ஆனால் அதே நேரம் கிரேக்க சைப்பிரஸ் இந்த ஒன்றிணைவுக்கு எதிராக வாக்களித்தது. இதன் காரணமாக வட சைப்பிரஸ் (துருக்கிய சைப்பிரஸ்) ஐரோப்பிய ஒன்றியத்தில் இணையவில்லை.

சைப்பிரஸ் பிரச்சினையைப் பொறுத்த வரையில் தீர்க்க முடியாத மிகச் சிக்கலான விடயமாக விளங்குவது சைப்பிரஸ் தீவுக் கரையோரங்களில் காணப்படும் இயற்கைவாயு தொடர்பான கண்டுபிடிப்புகளாகும். இவ்விடயம் இப்பிரச்சினையின் பன்னாட்டுத்தன்மையை அதிகப்படுத்தியிருக்கிறது.

சாதகமாகக்கூடிய வணிக அபிவிருத்திப் பாதைகள், எதிர்காலத்தில் பெறக்கூடிய வருமானங்களைப் பங்கிடுவது தொடர்பான பிணக்குகள், இரு பகுதிகளும் உரிமை கொண்டாடும் கரையோர எல்லைகள் போன்றவற்றின் காரணமாக குறிப்பிட்ட பிரதேசத்தைச் சேர்ந்த ஏனைய பங்காளிகளும் அத்துடன் பன்னாட்டு எண்ணெய், வாயு நிறுவனங்களும் இப்பிணக்குகளுக்குள் ஈர்க்கப்பட்டிருக்கின்றன.

பிரான்சு, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய இரு நாடுகளும் இப்பிரதேசத்தில் மேற்கொள்ளும் இராணுவ நடவடிக்கைகள் தொடர்பாக துருக்கி, பிரான்சு, அமீரகம், போன்ற நாடுகளுக்கு இடையே பிணக்குகள் ஏற்படுகின்றன. கிரேக்க சைப்பிரஸ் மீது இதுவரை விதித்திருந்த தமது ஆயுதத் தடையை அமெரிக்கா அண்மையில் நீக்கியிருக்கிறது.

இயற்கை வாயு தொடர்பான விடயம் பேச்சுவார்த்தைகளின் போது வெளிப்படையாகப் பேசப்படாவிட்டாலும், இவ்விடயம் பகைமை, நம்பிக்கையீனம், பழிக்குப்பழிவாங்கும் செயற்பாடுகள் என்வற்றைத் தோற்றுவித்து, அமைதி முயற்சிக்கு குறிப்பிடத்தக்க இடையூறை ஏற்படுத்தியிருக்கிறது. ஐக்கிய நாடுகளின் முன்னாள் விசேட ஆலோசகர் எஸ்பன் பாத் ஐட் (Espen Barth Eide) குறிப்பிட்டது போன்று ‘சைப்பிரஸ் பிரச்சினையுடன் ஐதரோ காபன் (hydrocarbons) விடயமும் இணைக்கப்பட்டுவிட்டது. இனிமேல் அதனைப் பிரிக்க முடியாது”.

இயற்கை வாயு விடயத்தில் சில முன்னேற்றங்கள் ஏற்பட்டாலும் பேச்சுவார்த்தை நடவடிக்கைகளில் இருக்கும் வழமையான தடைக்கற்கள் தொடர்ந்து இருக்கத்தான் செய்கின்றன. சொத்துகளுக்கு உரிமை கோருதல், பிரதேச ரீதியாக மேற்கொள்ளப்படக்கூடிய விட்டுக்கொடுப்புகள், கூட்டாட்சி அதிகாரப்பகிர்வு உடன்படிக்கைகள், பாதுகாப்பு உத்தரவாதம் தொடர்பான ஒப்பந்தங்கள், ஐரோப்பிய ஒன்றியத்துடனான உறவுகள் மற்றும் பொருண்மியம் தொடர்பான விடயங்கள் என்ற ஆறுவகையான விடயங்களில் ஐக்கிய நாடுகளினால் முன்னெடுக்கப்படும் பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

‘எல்லா விடயங்களிலும் உடன்பாடு எட்டும் வரை எந்தவொரு உடன்பாடும் இல்லை” என்ற கொள்கையின் அடிப்படையிலேயே பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டிருக்கின்றன.

இதன்படி அனைத்தையும் ஒருசேர உள்ளடக்கும் ஒரு முழுமையான ஒப்பந்தத்துடன் இந்த ஆறு கோப்புகளுமே முடிவுக்குக் கொண்டுவரப்படவேண்டுமேயொழிய ஒரு குறிப்பிட்ட விடயத்தோடு மட்டும் தொடர்பான எந்தவித பகுதி உடன்படிக்கையும் இறுதிசெய்யப்படமாட்டாது. பேச்சுவார்த்தையில் நின்று விலகி, பேச்சுவார்த்தை மேசையில் தமது கரங்களை வலுப்படுத்துகின்ற தமக்குச் சாதகமான சூழல் ஏற்படும் வரை காத்திருக்க இரு பக்கங்களையும் இது தூண்டியிருக்கிறது.

தெற்கையும் வடக்கையும் சேர்ந்த இந்த இரு அரசுகளுக்கும் இடையே ஏற்படக்கூடிய எந்தவிதமான உத்தியோகபூர்வ ஒத்துழைப்பும் தவிர்க்கப்பட்டிருக்கிறது. இப்படி நிகழ்ந்தால் அது வடக்கை அங்கீகரிக்கின்ற ஒரு செயற்பாடாக மாறிவிடலாம் என்றும் சமரசம் செய்வதற்கான வாய்ப்புகள் அனைத்தும் அதனால் அற்றுப்போய்விடலாம் என்ற அச்சமும் ஒத்துழைப்புத் தவிர்ப்புக்குக் காரணமாகியிருக்கிறது.

இதற்குப் பதிலாக பண்பாட்டுப் பாரம்பரியத்தை மீளப்புதுப்பித்தல், போரில் காணாமற்போனவர்களைத் தேடுகின்ற செயற்பாடு, பொதுச்சுகாதாரம் போன்ற விடயங்களில் இணைந்து செயற்படுகின்ற இரு இனங்களையும் உள்ளடக்கிய செயற்பாட்டுக் குழுக்கள் போன்றவை உருவாக்கப்பட்டிருக்கின்றன. மேற்குறிப்பிடப்பட்ட முயற்சிகள் தீர்வுக்கான பேச்சுவார்த்தைகளில் உள்ள அடிப்படை விடயங்கள் தொடர்பாகக் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் எதனையும் ஏற்படுத்தவில்லை.

பேச்சுவார்த்தைகளை மீளத் தொடங்குவதற்கான முன்னேற்பாடுகளை ஐக்கிய நாடுகள் தற்போது மேற்கொண்டுவருகிறது. ‘சைப்பிரஸ் பிரச்சினைக்கான தீர்வை நோக்கி ஐக்கிய நாடுகளின் தலைமையில் நடைபெறுகின்ற முயற்சிகள் மிக விரைவாக முன்னெடுக்கப்படவேண்டும்” என்று கூறி, ஐரோப்பிய ஒன்றியம் இந்த முயற்சிக்கான தனது ஆதரவை வெளிப்படுத்தியிருக்கிறது.

துருக்கியின் தலைநகரமான அங்கரா (Ankara) பலதரப்புகளை உள்ளடக்கிய ஒரு மாநாட்டை இது தொடர்பாக நடத்த இருப்பதாக டாட்டாரும் தெரிவித்திருக்கிறார். ஆனால் இதற்கு கிரேக்க சைப்பிரஸ் பிரிவினர் இணங்குவார்களா என்பது இன்னும் தெளிவாகவில்லை.

சைப்பிரஸ் பிரச்சினைக்கான தீர்வைக் காண முன்னெடுக்கப்பட்ட முயற்சியில் தோல்வி மற்றும் அவநம்பிக்கை என்பவை தொடர்பாக ஒரு நீண்ட வரலாறு இருக்கின்ற பொழுதிலும், இது வெற்றியடையலாம் என்றும் ஒரு சிறு நம்பிக்கையும் இருக்கத்தான் செய்கிறது.

சைப்பிரசில் நிலைகொண்டிருக்கும் தனது துருப்புகளின் எண்ணிக்கையைக் குறைப்பதன் மூலம் பாதுகாப்பு விடயத்தில் ஒரு விட்டுக்கொடுப்பைச் செய்வதற்கு 2017இல் துருக்கி வெளிப்படையாகச் சம்மதம் தெரிவித்த போது இரண்டு பகுதிகளுமே ஒரு தீர்வுக்கு மிக அருகாக வந்திருந்தன.

பாதுகாப்புத் தொடர்பாக துருக்கி அளிக்கும் உத்தரவாதத்தைக் கைவிடுவது சார்பாக டாட்டார் எந்த வாக்குறுதியையும் கொடுக்காக பொழுதிலும் துருக்கியின் விருப்பு இன்னும் செல்லுபடியாகக்கூடிடதொன்றாகவே கருதப்படுகின்றது.

இக்குறிப்பிட்ட பிரதேசத்தில் எல்லோரதும் அமைதியின்மைக்குக் காரணமான இப்பிரச்சினையை இல்லாமற் செய்யக்கூடியவிதத்தில், மிக நீண்ட காலமாகத் தொடருகின்ற இந்தப் பிணக்குடன் தொடர்புபட்ட பங்காளிகள் அனைவரும் ஒன்று சேர்ந்து அனைவருக்கும் திருப்தியை அளிக்கக்கூடிய ஒரு தீர்வை இறுதியில் எட்டுவார்களா என்பதற்குக் காலம் தான் விடை சொல்ல வேண்டும்.

-தமிழில் ஜெயந்திரன்-