“மக்கள் மத்தியில் தற்போதைய அரசியல் நிலை பற்றி விழிப்புணர்வு வேண்டும்”-அருளானந்தம் அனுசன்

கடந்த காலங்களில்  சலுகைகளாக வழங்கப்பட்ட, போரில் கொல்லப்பட்ட மக்களுக்கான நினைவேந்தல் மற்றும் மாவீரர் நாள் நினைவு கூரல் அனுமதிகள், தற்போது  அடக்குமுறைக்கு துணைபோகும்  பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் பிரிவினைவாதத்தை தூண்டல் அல்லது புலிகளை மீளக்கட்டியெழுப்புதல் நடவடிக்கை என கூறி தடையுத்தரவுகள் விதித்து வருகிறது இலங்கை அரசாங்கம்.

இந்நிலையில், இலங்கை அரசாங்கத்தின் இந்த அடிப்படை உரிமை மீறல் குறித்து அருளானந்தம் அனுசன் (யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய தலைவர்) ‘இலக்கு’ மின்னிதழுக்கு கருத்து தெரிவிக்கையில்,

“நினைவு கூறுவது இவ் உலகில் உள்ள அனைத்து மக்களின் உரிமை ஆகும். அந்த வகையில் நாம் அனைவரும் அரசியல் பேதமின்றி இவ்விடயத்தில் ஒன்றுசேர வேண்டும்.

எங்கள் மக்கள் மத்தியில் முதலில் தற்போதைய அரசியல் நிலை பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும். ஏனெனில் எங்களில் பலர் அறியாமையில் இருக்கின்றனர்.

இலங்கையில் நடைபெற்ற போர்க்கால சூழலை உலக அரங்கிற்கு கொண்டு சேர்க்க வேண்டும். அது மட்டுமின்றி இந்திய அரசிற்கும் அழுத்தம் கொடுக்க வேண்டும்.” என்றார்