திருச்சியில் ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த சிறுவனுக்காக மன்றாடும் ஈழத்தமிழர்

திருச்சி மணப்பாறை அருகிலுள்ள நடுக்காட்டுப்பட்டி என்னும் இடத்திலுள்ள ஆழ்துளைக் கிணறொன்றில் நேற்று(26) மாலை 5.30 மணியளவில் இரண்டு வயதுடைய சுர்ஜித் என்னும் குழந்தை தவறி விழுந்துள்ளது.

உலக நாடுகளைச் சேர்ந்த மக்களை கவலை கொள்ள வைத்த இச்சம்பவத்தை உலகிலுள்ள அனைத்து மக்களுமே உன்னிப்புடன் கவனித்து வருகின்றனர். அத்துடன் குழந்தை உயிருடன் மீட்கப்பட வேண்டுமென உலகிலுள்ள எல்லா மதத்தவர்களும் பிரார்த்தனையில் ஈடுபட்டுள்ளனர்.

இதே வகையில், இலங்கையிலுள்ள தமிழ் மக்களும் இக்குழந்தைக்காக பிரார்த்தனையில் ஈடுபட்டு வருகின்ற அதேவேளை, தமது வேண்டுதல்களை தங்களின் சமூகவலைத் தளங்களிலும் பதிவு செய்துள்ளனர்.

முதலில் 10 அடி தூரத்தில் இருந்த குழந்தை தற்போது 87 அடியில் இருப்பதாக கூறப்படுகின்றது.  இந்நிலையில் குழந்தையை மீட்கும் பணியில் அரசு தீவிரமாக செயற்பட்டு வருகின்றது. மீட்புப் பணியாளர்கள் 7 பேர் தயாராக உள்ளனர்.

றிக் என்னும் துளைபோடும் இயந்திரத்தின்  மூலம் துளையிடப்பட்டு வந்த நிலையில், இதன் மூலம் 35 அடி வரையே தோண்ட முடிந்தது.  இதனையடுத்து இரண்டாவது இயந்திரம் கொண்டு வரப்பட்டு அதைப் பொருத்தும் பணி நடைபெற்று வருகின்றது. 51 மணிநேரத்தைக் கடந்தும் இரண்டாவது இயந்திரம் செயற்படத் தொடங்கவில்லை.  இந்த இயந்திரம் முன்னர் துளையிட்ட இயந்திரத்தை விட மூன்று மடங்கு வேகத்துடன் செயற்படக் கூடியதென்று சொல்லப்படுகின்றது.

குழந்தையை மீட்டெடுத்தால், முதலுதவி செய்யவும், மருத்துவ சிகிச்சை அளிப்பதற்கும்  உரிய ஆயத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குழந்தை மயக்கமுற்றிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.  குழந்தை உயிருடன் மீண்டு வருமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. இருந்தும் அரசு தங்கள் முயற்சியை கைவிடாது தொடர்ந்த வண்ணம் உள்ளனர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.