திருகோணமலையில் கடந்த 24 மணி நேரத்தில் 7 போ் கொரோனாவால் பலி

திருகோணமலை மாவட்டத்தில் கடந்த 24 மணித்தியாலத்திற்குள் ஏழு மரணங்கள் பதிவாகியுள்ள  நிலையில் இன்று (26)வரை 69 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளதாக திருகோணமலை பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

திருகோணமலை பிராந்திய சுகாதார சேவைகள் பணியகத்தினால் இன்று (26) காலை வெளியிடப்பட்ட அறிக்கையில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனடிப்படையில் கிண்ணியா சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் இருவரும், தம்பலகாமம் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் இருவரும், உப்புவெளி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஒருவரும், கந்தளாய், குச்சவெளி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில் தலா ஒருவர் வீதம் கடந்த 24 மணித்தியாலத்திற்குள் உயிரிழந்துள்ளதாகவும்,இன்றுவரை மொத்தமாக 69 பேர் திருகோணமலை மாவட்டத்தில் கோவிட்-19 தொற்றினால் உயிரிழந்துள்ளதாகவும் அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன் கடந்த 24 மணித்தியாலத்திற்குள் திருகோணமலை மாவட்டத்தில் 63 பேர் தொற்றாளர்களாக இனம் காணப்பட்டுள்ள நிலையில் திருகோணமலை மாவட்டத்தில் கடந்த மே மாதம் முதலாம் திகதி தொடக்கம் இன்றுவரை 1403 பேரும், 2020 டிசம்பர் மாதம் முதல் இன்று வரை 2 ஆயிரத்து 844 பேர் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கிண்ணியா சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் அதிக அளவில் மரணங்கள் இடம்பெற்றுள்ளதாகவும் அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

IMG 1622018870607 திருகோணமலையில் கடந்த 24 மணி நேரத்தில் 7 போ் கொரோனாவால் பலி

மேலும் கடந்த 24 மணித்தியாலத்திற்குள் திருகோணமலை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 19 பேரும், குச்சவெளியில் 9 பேரும், குறிஞ்சாங்கேணி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 9 பேரும் கந்தளாயில் ஏழு பேரும்,கிண்ணியாவில் 6 பேரும், மூதூர் மற்றும் உப்புவெளியில் தலா  4 பேர் வீதமும், தம்பலகாமம் மற்றும் கோமரங்கடவல சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் தலா இருவர் வீதமும், சேறுவில பகுதியில் ஒருவரும் கோவிட்-19 தொற்றாளர்களாக உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் திருகோணமலை பிராந்திய சுகாதார சேவைகள் பணியகம் தெரிவித்துள்ளது.