தியாகதீபம் திலீபன் நினைவேந்தலை முன்னிட்டு வடக்கில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்

வடமாகாணத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்படவிருப்பதாக பாதுகாப்புத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

எதிர்வரும் 26 ஆம் திகதி, திலீபனின் 33 ஆவது நினைவு தினத்தை அனுஷ்டிக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படலாம் என்ற காரணத்தினாலேயே வடபகுதியில் இராணுவ,பொலிஸ் பாதுகாப்பு நடவடிக்கைகள் எதிர்வரும் நாட்களில் அதிகரிக்கப்படலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்க்கட்சிகள், திலீபனின் 33 ஆவது நினைவு தினத்தை அனுஷ்டிக்க அனுமதிக்குமாறு அரசைக் கோரியிருந்தன. ஆயினும், அரசு இதுவரை தமிழ்க் கட்சிகளுக்கு எந்தவித பதிலையும் சாதகமாக வழங்கவில்லை.

இந்நிலையில், எதிர்வரும் தினங்களில் பொலிஸ் மற்றும் பாதுகாப்புப் படையினரின் ரோந்து நடவடிக்கைகள் வடக்கே அதிகரிக்கப்படலாம் எனவும், சோதனை நடவடிக்கைளும் மேற்கொள்ளப்படலாம் எனவும், பாதுகாப்புப் படை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

ஏற்கனவே நீதிமன்றத் தடையுத்தரவு, திலீபன் நினைவு தினம் தொடர்பாக வழங்கப்பட்டுள்ள நிலையில் பாதுகாப்பு நடவடிக்கைகளும் தீவிரமாக அமுல் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளராக இருந்த திலீபன் 1987ஆம் ஆண்டு செப்ரெம்பர் 26ஆம் திகதி இலங்கை – இந்திய ஒப்பந்தத்துக்கு எதிராகவும், இந்திய அமைதிப்படையின் வருகையை எதிர்த்தும் சாகும்வரை, நல்லூர் கந்தசுவாமி கோவில் வடக்கு வீதியில் உண்ணாவிரதமிருந்து உயிர்நீத்தார்.

திலீபனின் இறுதி விருப்பத்திற்கு அமைவாக, அவரது பூதவுடல் யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மருத்துவப் பீடத்துக்கு கையளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.