சர்வதேச குற்றவியல் நீதி மன்றத்தில் இலங்கையை நிறுத்த, ஜெனீவாவில் வலியுறுத்தல்

“இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதி மன்றத்தில் நிறுத்த வேண்டும்  என ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் வலியுறுத்தப்பட்ட அதே நேரம், இலங்கைக்கான சிறப்பு அறிக்கையாளரை நியமிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

உலக பாதிக்கப்பட்டோருக்கான அமைப்பின் (Association pour les victimes du Monde) சார்பாக ஜெனீவாவில் நடைபெற்றுவரும் மனித உரிமைகள் பேரவையின் 45 ஆவது கூட்டத் தொடரில் உரையாற்றிய ரமேசு கோவிந்தசாமி,

மனித உரிமை ஆணையத்தின் உயர் ஆணையர் வழங்கிய அறிக்கைக்கு நன்றி கூறியதோடு, “முள்ளிவாய்க்கால் நினைவு, கறுப்பு யூலை நினைவு, 12 நாட்கள் நீர், உணவு இல்லாமல் தனது வாழ்வை அர்பணித்த தியாக தீபம் திலீபன் அவர்களின் நினைவு ஆகிய நினைவு நாட்களை நினைவுகூற   இலங்கை அரசாங்கம் தடை விதித்துள்ளது என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் அவர் ஆற்றிய உரையில்,

“வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் மற்றும் இன அழிப்பினால் பாதிக்கப்பட்டவர்கள் இன்னும் தெருவில் நின்று நீதிக்காக போரடிக் கொண்டிருக்கின்றனர், பதினொரு ஆண்டுகள் கடந்தும் அவர்கள் அனைவரும் இந்த உயரிய மன்றத்திடமிருந்து நீதிக்காக காத்திருக்கிறார்கள்.

11 ஆண்டுகளாக வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் அமைப்புகள் உலக வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் நாளினை நினைவுகூர்ந்து வருகின்றனர். ஆனால் இன்றைய சிங்கள பேரினவாத அரசும், காவல்துறையும், இராணுவமும் 200க்கு மேற்பட்ட உறுப்பினர்களை மிரட்டி, துன்புறுத்தி உலக வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் நாளினை நினைவுகூற தடைவிதித்தனர்.

நாடாளுமன்றத்தில் யாழ்ப்பாண நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்கினேஸ்வரன் தனது முதல் உரையை நிகழ்த்தினார். அதற்காக சிங்கள பேரினவாத அரசியல்வாதிகளும் பௌத்த துறவிகளும், ஊடகங்களும் அவரை எதிர்க்கின்றன, மிரட்டுகின்றன. ஆனால் உலக நாடுகள் அமைதிக் காக்கின்றன.

இலங்கையை உலக குற்றவியல் நீதி மன்றத்தில் பாரப்படுத்த வேண்டும் என்றும், இலங்கைக்கான சிறப்பு அறிக்கையாளரை நியமித்து, அவர் இலங்கையில் நடைபெறும் மனித உரிமை மீறல்களை பதிவுசெய்து உலகிற்கு அறிவிக்கவேண்டும் என்றும் வடக்கு கிழக்கு இராணுவமயமாக்கலையும் காலனியாக்குவதையும் நிறுத்துவேண்டுமென்றும் ஐக்கிய நாடுகளது மனித உரிமை ஆணையத்திடம் வலியுறுத்துகிறேன்.” என்று தெரிவித்துள்ளார்.