“தாயகம் நோக்கிய பயணம்“ புத்தகத்தை மொழிபெயர்த்த முன்னாள் போராளி அருளாளன் இயற்கை எய்தினார்

தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த போராளியும் போர்க்கால மிகப் பிரபல்யமான மொழிபெயர்ப்புப் படைப்பாளருமான வின்சன்ற் புளோரன்ஸ் யோசெப் (அருளாளன்) இன்று காலமாகியுள்ளார்.

யாழ்ப்பாணம் குருநகரில் உள்ள அவருடைய வீட்டில் இன்று அவர் உயிரிழந்த நிலையில் அவருடைய சடலம் யாழ்.போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப் பட்டுள்ளதாக குடும்பத்தார் தெரிவித்தனர்.

போர்க்காலத்தில் 82 நூல்களை மொழிபெயர்ப்புச் செய்த பெருமைக்குரியவராக யோசெப் விளங்கியுள்ளார்.

போர்க்காலத்தில் வன்னியில் வெளிவந்திருந்த ஈழநாடு, ஈழநாதம் பத்திரிகைகளிலும் ஆதாரம், வெளிச்சம் சஞ்சிசைகளிலும் புலம்பெயர் இணையத்தளங்களிலும் அவருடைய மொழிபெயர்ப்புப் படைப்புக்கள் பல நூற்றுக்கணக்கில் வெளியாகியுள்ளன.

அவர் மொழிபெயர்ப்புச் செய்திருந்த 82 நூல்களில்,

தாயகம் நோக்கிய பயணம் (இஸ்ரேல் உருவான கதை), மூடுபனிக்குள் ஒரு தேடல் (உளவியல் நாவல்), சன்சூவின் போர்க்கலைகள் (சீனாவின் போர்த் தந்திரங்கள்) உட்பட்ட பல்துறை சார்ந்தவையாக அவை அமைந்திருந்தன.

போரோடு அவருடைய படைப்புக்களும் அழிந்து போனமை குறித்து இலக்கிய ஆர்வலர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

அருளாளன், குழல் ஆகிய பெயர்களில் எழுதிய அவர் குழல் என்ற பெயரில் “களத்திலேயே வீழ்வோம்” என்கிற ஆபிரிக்க கவிதைகளின் தொகுப்பினையும் வெளியிட்டிருந்தார்.

இறுதிப்போரின் பின்னர் பூசா சிறைச்சாலையில் இருந்து விடுதலையாகி யாழ்ப்பாணம் குருநகரில் உள்ள அவருடைய பூர்வீக வீட்டில் வசித்து வந்த நிலையில் இன்று உயிரிழந்துள்ளார்.